தொடர்கள்
ஆன்மீகம்
திருப்புகழ் - இசையும், இலக்கணமும். 2 - குருநாதன்

20221024231108794.jpg

பாடல்களும், வாழ்க்கையும்

இசையுணர்வு எப்படி இயற்கையாகவே நம்மிடம் இருக்கின்றதோ அதுபோலவே பாடல்கள் நம் வாழ்க்கையோடுப் பின்னிப் பிணைந்திருக்கின்றன. பிறப்புமுதல் இறப்புவரை வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் பாடல் உண்டு. தொட்டிலில் குழந்தைக்குத் தாலாட்டு பாடத் தொடங்கி, மனிதன் இறந்த பின்பு ஒப்பாரி பாடுவதுவரை ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு தருணத்திலும், ஒவ்வொரு நிகழ்வின்போதும் நம்வாழ்க்கை பாடல்களால் நிறைந்திருக்கின்றது. ஏதாவது ஒன்றை சுருக்கமாகச் சொல்வதற்கும், சுருக்கென்றுத் தைக்கும்படிச் சொல்வதற்கும், சுண்டியிழுக்கும்படிச் சொல்வதற்கும், சுவையாகச் சொல்வதற்கும், சிந்தனையை உடன் தூண்டும்படிச் சொல்வதற்கும், நினைவில் நிலைத்திருக்கும்படிச் சொல்வதற்கும் பாடலைவிட மேலான வேறொரு வடிவம் இல்லை. இசையும் பாடலும் இணைந்து இசைப்பாடலாக நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் இரண்டறக் கலந்துவிட்டிருக்கின்றன.

இசைப்பாடல்கள்

இசைப்பாடல்கள் வாழ்க்கையின் இன்றியமையாத ஒன்றாக, வாழ்க்கையோடு இயைந்து இருப்பதால்தான் நம் பண்டை இலக்கியங்களும் இசைப்பாடல்களில் அமைந்திருக்கின்றன. உரைநடை இலக்கியம் தொடங்கியது 19-ஆம் நூற்றாண்டில்தான். 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான், இலக்கியங்கள் இசைப்பாடல்களில் இயற்றப்படுவது முழுவதும் நின்றுவிட்டது. குறிப்பாக, நம் பக்திப் பனுவல்கள் அனைத்திலும் இருக்கும் பாடல்கள் எல்லாமுமே இசையோடு ஓதுவதற்கும், பாடுவதற்கும் ஏற்ப இயற்றப்பட்டவையே. பண்ணோடும், தாளத்தோடும் பாடுவதற்கேற்ற இசைப்பாடல்கள் கொண்டைவைதான் நம் பக்தி இலக்கியங்களில் பெரும்பாலானவை. மொழிஇலக்கணத்திற்கும், இசைஇலக்கணத்திற்கும் ஏற்ப இயற்றப்பட்டப் பாடல்களைக் கொண்டவை அவை. பாடல்களின் ஓசை ஒழுங்கிற்கும், ஓட்ட ஒழுக்கிற்கும், இசைநயத்திற்கும் அப்பாடல்களில் இருக்கும் சீர்களும், தளைகளும், அடிகளும், தொடைகளும் காரணாமகின்றன. பாடல்கள் சுட்டுகின்றக் கருத்துக்கேற்பவும், ஊட்டுகின்ற‌ உணர்விற்கேற்பவும், காட்டுகின்றக் காட்சிக்கேற்பவும் பண்ணும், லயமும் தெரிவுசெய்யப்பட்டு, இசையமைக்கப்பட்டு அவைகள் பாடப்படுகின்றன. திருப்புகழும் முற்றிலும் இசைப்பாடல்களால் ஆன ஒரு பனுவல்தான். ஆனால், திருப்புகழ்ப் பாடல்கள் வேறெந்தப் பக்தி இசைப்பாடல்களுக்கும் இல்லாத ஒருசில தனிச்சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டவை ஆகும்.

பாவும், பாவினங்களும்

தமிழ் யாப்பிலக்கணத்தின்படி ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு பிரிவுகள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றிலும் வேறுவேறு உட்பிரிவுகளும் உண்டு. பாக்களின் இலக்கணங்களைத் தழுவி, அவற்றிலிருந்து அடியாலும், ஓசையாலும், சந்தத்தினாலும் வேறுபட்டு வருபவை பாவினங்கள். ஒவ்வொரு பாவிற்கும் தனித்தனியாகத் தாழிசை, துறை, விருத்தம் என்று மூன்று வகையனாப் பாவினங்ளும் உண்டு. இவைகளோடு, குறும்பா போன்ற புதியப் பாவினங்களும் இப்பொழுது வழங்கிவருகின்றன.

பண், தாளம்

மேற்கூறிய அனைத்துப் பாடல்களையும் பண்ணுடன் (இராகத்துடன்) இசையோடுப் பாடத் தக்கவை, இசையோடுப் பாடத்தக்க அல்லாதவை என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இசையோடு பாடதக்கப் பாடல்களையும் தாளத்தோடுப் பாடக்கூடியவை, தாளத்தோடுப் பாட முடியாதவை என்று மேலும் இருபிரிவுகளாகப் பிரிக்கலாம். ‘பண்ணுடன் நடப்பன, பண்ணும் தாளமும் நண்ணி நடப்பன என இரண்டு இசைப்பா’ என்பது இலக்கணம் ஆகும். பண்ணோடும், பாணி எனப்படும் கால அளவோடும் (தாளத்தோடும்) இசைக்கும் பாடல்கள் இசையளவு பாடல்கள் ஆகும். தாள நடையுடைப் பாக்கள், ‘வண்ணம், சந்தம், சிந்தே, உருப்படி என்ன நால்வகையாக நவிலப் படுமே’ என்ற இலக்கணத்திற்கு ஏற்ப, தாள நடையுடன் பாடப்படும் இசையளவுப் பாக்கள் ‘வண்ணப் பாக்கள்’ என்றும், ‘சந்தப்பாக்கள்’ என்றும், ‘சிந்துப்பாக்கள்’ என்றும், ‘உருப்படிகள்’ என்றும் நான்கு வகைப்படும்.

இசையளவு (தாளநடை) இலக்கண முறைப்படி அமையாதப் பாடல்களையும் பண்ணோடும், தாளத்தோடும் பாடலாம். அப்படிப் பாடுவதற்குப் பாடல்களில் இருக்கின்ற சீர் அல்லது சொற்களின் இருக்கின்ற எழுத்துக்களின் ஒலிக்கும் கால அளவை அல்லது மாத்திரையை இட்டும், விட்டும், கூட்டியும், குறைத்தும் சரியான இசையளவை ஒவ்வொரு அடிக்கும் செயற்கையாக உண்டாக்கிக்கொள்ளுதல் வேண்டும். ஆனலும், அது இயல்பாக இருக்காது. ஒரு பாட்டின் நடையை, அதன் ஓட்டத்தை வரையறுக்கும் இசையமைதிக்குத் தாளம், பாணி, தூக்கு, சீர், கட்டளை என்ற பல பெயர்கள் உண்டு. இருப்பினும் தாளம் என்ற சொல்லே பெருவாரியாக வழக்கத்தில் உள்ளது. தாளம் இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்கு பயன்படுவது ஆகும். கர்நாடக இசையில் தாளங்கள் ஏழு வகைகளாக உள்ளன.

‘சந்தம்’ என்றால் என்ன?

‘சந்தம்’ என்ற சொல்லுக்கு ‘ஒலியின் வண்ணம்’ என்று எளிமையாகப் பொருள்கொள்ளலாம். மீண்டும், மீண்டும் சந்திக்கும் தன்மையுடையது சந்தமாகும். ‘ஓசை அல்லது ஒலி அலைபோல் மீண்டும், மீண்டும் அடுக்கிவந்துச் சந்திப்பதால் அதற்குச் ‘சந்தம்’ என்ற பெயர் வந்தது’ என்று தமிழிசைக் கலைக் களஞ்சியம் குறிப்பிடுகின்றது. திட்டமிடப்பட்ட ஒலிக்கோர்வைகள் குறிப்பிட்டக் கால அளவில் மீண்டும் மீண்டும் சந்தித்து எழுப்பும் ஓசை ஒழுங்கைச் ‘சந்தம்’ எனலாம். ‘சந்தஸ்’ என்ற வடசொல்லின் திரிபாகவும் இதைக் கூறுவர். இதனைத் தொல்காப்பியர் ‘வண்ணம்’ என்கிறார்.

‘சந்தம்’ என்றால் என்ன‌ என்பதை இன்னும் சற்று விளக்கமாகப் பார்த்தல் வேண்டும். ‘சந்தம்’ என்பது இசைப்பா ஒன்றின் ஒவ்வொரு அடியில் இருக்கும் ஒவ்வொரு பதம் அல்லது சொல் அல்லது சீரின் தாள ஒலியளவின் கோர்வையும், அந்தத் தாள ஒலியளவுக் கோர்வைகள் எப்படி பாடலின் ஒவ்வொரு அடியிலும் அடுத்ததடுத்து வடிவமைக்கபட்டிருக்கின்றது என்பதையும் குறிக்கும் சொல்லாகும். ஒவ்வொரு அடியிலும் இருக்கின்ற ஒவ்வொரு பதமும்/சொல்லும்/சீரும் எப்படி ஒலிக்கவேண்டும், எந்தத் தாள அளவில் ஒலிக்கவேண்டும், எந்தக் கால அளவில் ஒலிக்கவேண்டும், எத்தனை முறை ஒலிக்க வேண்டும் என்பதை எல்லாம் சரியாகக் கணக்கிட்டு, வரைமுறை செய்து, அமைத்துக்கொள்வதை நாம் ‘சந்த வடிவமைப்பு’ என்றுகொள்ளலாம். Meter defines the rhythmic pattern or structure of a measure by creating theoretical divisions of beats or notes. ஒரு இசைப்பாடலின் ஓரடி எவ்வளவு நீளம் இருக்க வேண்டும், அதில் எத்தனைப் பதங்கள் இருக்க வேண்டும், ஒவ்வொரு பதமும் எப்படி, எவ்வளவு நேரம் ஒலிக்க வேண்டும் என்பதை எல்லாம் சந்தத்தைக்கொண்டே உறுதி செய்ய முடியும். சந்தம் இசையில் பதங்களைப் பொருந்தச் செய்கின்றது.

சந்தமும் தாளமும்

சந்தமும் தாளமும் ஒன்றுக்கொன்று நெருங்கியத் தொடர்புடையன. எனினும் இரண்டும் வேறுவேறு ஆகும். சந்தம் மொழியில் அமைந்தப் பாடலுக்கு மட்டுமே உரியது. மொழியால் ஆனப் பதம், சொல், சீர் இவற்றை தாள‌ இசையில் ஒழுங்குடன் இணைக்கச் சந்தம் உதவுகின்றது. தாளம் இசையின் ஒரு பகுதி. மொழியின் துணையின்றியும் தாளம் தனித்து இயங்கும். இசையில் மொழி இணையவில்லை என்றால் அங்குச் சந்ததிற்கு எந்த‌ வேலையுமில்லை.

சந்த மாத்திரைகள்

சந்தங்கள் எழுத்துக்களின் ஒலிக்கும் நேரம் அல்லது மாத்திரைகளை அடிப்படையாகக் கொண்டது. தமிழ் மொழியில் குறில், நெடில், மெய் எழுத்து, ஆய்த எழுதுக்கள் என்ற பிரிவினைக‌ள் இருப்பதையும், ‘ஐ,’ ‘ஒள’ என்ற இரண்டும் நெடில் எழுத்துகள் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம். குறில் எழுத்துக்களின் ஒலி அளவு ஒரு மாத்திரை என்றும், நெடில் எழுத்துக்களின் ஒலி அளவு இரண்டு மாத்திரைகள் என்றும், மெய்யெழுத்துக்களின் ஒலி அளவு அரை மாத்திரை என்றும், ஐகார, ஔகார எழுத்துக்கள் நெடில்களாகக் கொள்ளப்பட்டாலும், அவை சீர்களில் வரும்போது இரண்டு மாத்திரைகள் அளவுடன் ஒலிப்பதில்லை என்றும், இவ்விருவகை எழுத்துக்களும் சீரில் முதலெழுத்தாக வரும்போது ஒன்றரை மாத்திரைகள் அளவுடையனவாக அமைகின்றன என்றும், ஔகாரம் மற்றும் ஐகாரம் ஒரு மத்திரையிலிருந்து 1 1/2 மாத்திரையளவு குறுகி ஒலிக்கும் என்றும், ஆய்த எழுத்தின் ஒலி அளவு அரை மாத்திரை என்றும் நாம் அறிவோம். இவற்றைப்போலவே சில சந்தர்ப்பங்களில் இகர, உகரங்களும் மெய்யெழுத்தான மகரமும் ஒலி குறுக்கம் அடைவதுண்டு என்றும், அப்படிக் குறுக்கமடையும்போது இகரமும், உகரமும் அரை மாத்திரையையும், மகரமெய் கால் மாத்திரையையும் பெறுகின்றன என்றும் நாம் அறிவோம். இந்த ஒலி அளவு அல்லது மாத்திரைகளின் படிதான் பாடல்களில் சீர்கள்/சொற்கள் அமைந்திருக்கின்றன எனபதையும் நாம் அறிவோம்.

ஆனால், சந்தங்களுக்குரிய ஒலி மாத்திரைகள் சற்று மாறுபட்டவை. எழுத்திலக்கணத்தில் சொல்லப்படும் மாத்திரைக் கணக்கு சந்தப் பாவில் வரும் எழுத்துகளுக்கும், அவைகளால் அமைந்தச் சீர்களுக்கும் பொருந்தாது. எழுத்திலக்கணப்படி மெய் எழுத்துக்கு அரை மாத்திரை மட்டுமே. ஆனால், சந்தக்குழிப்பில் குறிலுக்குப்பின் வரும் மெய்க்கும் ஒரு மாத்திரை என்ற கணக்குண்டு. எ.கா: க - குறில் = ஒரு மாத்திரை, கல் – குறில் + மெய் = இரண்டு மாத்திரைகள், கா -நெடில் = இரண்டு மாத்திரைகள், கால் – நெடில் + மெய் = இரண்டு மாத்திரைகள். அதாவது, குறிலுக்கு மட்டுமே ஒரு மத்திரை, மற்ற எல்லாவற்றிற்கும் இரண்டு மாத்திரைகள். மேலும், பாட்டிலுள்ள அடியின் இறுதியிலோ அல்லது சமமாக வரும் அரையடியின் இறுதியிலோ வரும் குறில்கள் இரண்டு மாத்திரைகள் பெறும். இன்னொரு விதியும் உண்டு! சந்தப் பாடலின் சீர்களின் இடையில் வரும் ‘ய், ர், ல், வ், ழ், ள்’ ஒற்றுகளுக்கும், ‘ந், ண், ம்’ போன்ற‌ சிறுபான்மை மெய்யெழுத்துகளுக்கும் மாத்திரைக் கணக்கு கிடையாது. பொதுவாக ஓரசைச் சீரைச் சந்தப் பாட்டில் பயன்படுத்துவதில்லை. மேலும், 'தன' என்ற சந்தம் தனியாக வராமல், 'தனதன' என்று இரட்டித்தோ அல்லது மற்ற சந்தங்களுடன் சேர்ந்து 'தந்தன,' 'தந்ததன' என்பதுபோன்று சேர்ந்தோதான் வரும்.

சந்த எழுத்தளவு:

சந்தங்கள் ஈறெழுத்து, மூவெழுத்து, நான்கெழுத்து என்ற எழுத்தளவினைக் கொண்டவைகள் ஆகும். சந்தத்தைக் குறிக்க 'தகர,' 'னகர,' 'யகர' இன எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. 'தா,' 'தத்,' 'தந்,' என்பவை ஈரெழுத்துச் சந்த அளவு என்றும், 'ததா,' 'தந்தா,' 'தன்ன' என்பவை மூவெழுத்துச் சந்த அளவு என்றும், 'தைய்யா' 'தனத்த,' 'தனந்த' என்பவை நான்கெழுத்துச் சந்த அளவு என்றும் நாம் எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ளலாம். இவைகள் ஒலிக்குறிகள் மட்டுமே. இவற்றிற்கென்றுத் தனியாக எதுவும் பொருள் இல்லை.

சந்த வகைகள்

அடிப்படைச் சந்தங்கள் எட்டு அவைகள்: தந்த (ப‌ஞ்சு), தாந்த (பாங்கு), தத்த (பட்டு), தாத்த (பாட்டு), தய்ய (பல்லி), தன்ன (கன்னி), தன (பல‌), தான (பாரி). இவற்றின் நீட்சியாக இன்னொரு எட்டு சந்தங்களை உருவாக்கலாம் அவைகள்: தந்தா (அந்தோ), தாந்தா (சேந்தா), தத்தா (அக்கா), தாத்தா (மாற்றா), தய்யா( மெய்யோ), தன்னா (அண்ணா), தனா (நிலா), தானா (காசா). ஆக மொத்தம் 16 சந்த வகைகள் உள்ளன.

அடிப்படைச் சந்தங்களுக்குப் பின் 'ன,' 'னா,' 'னத்' போன்றவற்றைச் சேர்த்து மேலும் சந்தக் கோர்வைகளை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, 'தத்த' என்ற அடிப்படைச் சந்தத்தை வைத்து, 'தத்த+ன' (கற்றது), 'தத்த+னா'(விட்டதா), 'தத்த+னத்' (கத்தியைக்), 'தத்த+னாத்' (சுற்றுலாப்), 'தத்த+னந்' (கட்டிளம்), 'தத்த+னாந்' (வெட்டலாம்), 'தத்த+த்' (முத்தைத்), 'தத்த+ந்' (கப்பம்), 'தத்த+த்த' (கட்டற்ற), 'தத்த+த்தா' (தப்பப்பா), 'தத்த+ந்த' (கட்டின்றி), 'தத்தந்தா' (முத்தந்தா) போன்ற சந்தக் கோர்வைகளை உண்டாக்கலாம். சந்தப் பாவிலக்கணத்தில் 'தன' 'தனா' இரண்டும்தான் யாப்பிலக்கணத்தின் நிரை அசைக்கு ஒத்தவை. மற்ற பதிநான்கு வகைச் சந்தங்களும் ‘தேமா’ என்ற ஈரசைக்கு ஒத்தவை. ஒரு சந்தத்துடன் ஒன்றுக்கு மேற்பட்டச் சந்தங்களையும் சேர்ப்பது உண்டு. எடுத்துக்காட்டு: தன+த்+தந் = தனத்தந் (மயக்கம்), தான+ந்+தந் = தானந்தந் (ஆனந்தம்). பாடல்களின் அடிகளில் வரும் எழுத்துக் கணக்கை ஒட்டி 1‍லிருந்து 26-வரை எழுத்தடிகள் வரும் சந்தங்களுக்குத் தனித்தனிப் பெயர்கள் உண்டு. ஆனால், அவைகளைப் பற்றியெல்லாம் விரிவாகப் பார்ப்பது இந்தப் பதிவின் நோக்கம் அல்ல.

(தொடரும்)