தொடர்கள்
கதை
யார் முதலில்? - எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

2022102423271499.jpg

மனாஸ் கார்டன்.

மனை எண் அறுபது ஆயிரத்தி இருநூறு சதுர அடியில் இரட்டை மாடி கட்டடமாய் நிமிர்ந்திருந்தது. மனை எண் அறுபத்திஒன்று ஆயிரத்து நூறு சதுர அடியில் மூன்று மாடி கட்டடமாய் எழும்பியிருந்தது.

முதல் மனைக்கு ‘ஹக்கீம்-சாய்தா மன்ஜில்’ என பெயர் சூடப்பட்டிருந்தது இரண்டாவது மனைக்கு ‘ஜம்ஜம் மஹால்’ என பெயர் சூடப்பட்டிருந்தது.

முதல் மனையில் முளைத்திருந்த முருங்கை மரம் பக்கத்துமனையில் கிளை விரித்திருந்தது. மரத்தில் கொத்து கொத்தாய் முருங்கைக்காய்களும் வெள்ளைநிற பூக்களும் பூத்திருந்தன.

முருங்கை முளைத்திருந்த மனையின் சந்தில் நின்று பல்துலக்க ஆரம்பித்தாள் சாய்தா. பல்துலக்கியபடி மரத்தில் இருந்த முருங்கைக்காய்களை எண்ண ஆரம்பித்தாள்.

முப்பது வரை எண்ணியவள் மைக்ரோ நொடியில் ஆங்காரமானாள். “அய்யய்யோ… என் முருங்கைக்காய்கள் திருடு போய்ருச்சே… எந்த திருட்டு சிறுக்கி எடுத்தா?” ஐந்து நொடிகள் யோசித்தாள். பின் ‘முருங்கைக்காயை திருட அமெரிக்காலயிருந்தா ஆள் வந்திருப்பாள்? பக்கத்து வீட்டுக்காரிதான் வேலைக்காரி வச்சு திருடியிருப்பா!’ அங்கலாய்த்தாள்.

பக்கத்து மனைக்காரி புஸ்ரா எட்டினாள். “என்ன இப்ராகிம்மா கத்திக்கிட்டு இருக்கீங்க?”

“கத்ரேனா? நான் என்ன கழுதையா? நேத்தைக்கி என் முருங்கைமரத்ல 52காய்கள் எண்ணி வச்சிருந்தேன். காலைல பாக்றேன் இருபது காய் குறையுது!”

“யார் பறிச்சிருப்பா?”

“நடிக்காத நூர்ஜஹான்ம்மா நீதான் எடுத்திருப்ப. குதுலு குந்தாணி மாதிரி உன் வீட்ல ஒரு வேலைக்காரி இருக்காள்ல… அவ உன் சார்பா முருங்கைக்காய்கள் திருடியிருப்பா. ஆளுக்கு பத்தா பங்கு பிரிச்சிருப்பீங்க!”

“அவ வேலையை முடிச்சிட்டு போய்ட்டாளே? போகும்போது அவ எதையும் ஒளிச்சுவச்சு எடுத்திட்டு போன மாதிரி தெரியலையே…”

“நடிக்காத. கூட்டுக்களவாணிதனம் பண்ணிட்டு என்னம்மா சமாளிக்ற?”

“வாயை அடக்கி பேசு!” ஒருமைக்கு தாவினாள் புஸ்ரா. “கேவலம் பத்து பைசா பெறாத உன் முருங்கைக்காய்களை ஆள்வச்சு திருடுரோமாக்கும்…”

“ஒரு கிலோ முருங்கைக்காய் 150ரூபாய். ஒரு கிலோவுக்கு பதினைஞ்சு முருங்கைக்காய் நிற்கும். ஒரு முருங்கைக்காய் விலை பத்து ரூபா வரும். என் வீட்ல ஒன்றரை கிலோ முருங்கைக்காய் திருடு போய்ருக்கு. கேவலம் பத்து பைசான்ற. திருடு போன காய் 225ரூபாய் பெறும். திருட்டுக் காய்வச்சு குழம்பு பண்ணி சாப்பிட்டா உங்க ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் வயித்தால போகும்…”

“எங்க வீட்ல இன்னைக்கி விரால்மீன் குழம்பு. உன் பீத்த முருங்கைக்காய் யாருக்கு வேணும்?”

“அப்ப திருடுன முருங்கைக்காய்களை வித்துட்டியா?”

“பாருங்க இவளை.. நம்ம மேல திருட்டுபட்டம் கட்ரா!” கணவனிடம் திரும்பி முறையிட்டாள் புஸ்ரா.

புஸ்ராவின் கணவன் முஸ்தபா கமால் வெளிப்பட்டான். “நீங்க ரெண்டு பேர் பேசுரதையும் கேட்டுகிட்டுதான் இருந்தேன். (சாய்தாவிடம் திரும்பி) எங்க வீட்டு வேலைக்காரி முருங்கைக்காய் திருடுறதையோ நாங்க திருடுறதையோ நேரா பாத்தீங்களாம்மா?”

“நேரா பாத்திருந்தா திருடுன கையை துண்டா வெட்டியிருப்பேன்..”

“என்னம்மா ரௌடி பொம்பளை மாதிரி பேசுறீங்க?”

“என்னங்க?” திரும்பி கூவினாள் சாய்தா.

சாய்தாவின் கணவன் அப்துல் ஹக்கீம் ஓடோடி வந்தான். “என்ன சாய்தா பிரச்சனை?”

“நம் வீட்டு முருங்கைக்காய்களை பக்கத்து வீட்டுக்காரங்க திருடிட்டாங்க. தட்டி கேட்டா பக்கத்து வீட்டுகாரன் என்னை ரௌடி பொம்பளைன்றான்!”

“ஏ கமால் வெளிய வா!”

“என்ன ஹக்கீமு?”

‘என் பொண்டாட்டிய மானாங்கனையா பேச உனக்கு யார் உரிமை கொடுத்தது, அடுத்து ஒரு வார்த்தை பேசின நாக்கை வெட்டிருவேன்!”

“சரியான கசாப்புக்கடை கும்பல்!’‘ கமால்.

“ரொம்ப யோக்கியம் மாதிரி பேசுறீங்க. நாம ரெண்டு பேருமே ஒண்ணாதான வீடு கட்டினோம். அப்ப எங்க எம் சான்டை சட்டி சட்டியா திருடுனவங்கதானே நீங்க?”

“நீங்கதான் டாக்டர் பிக்ஸ்இட் பத்துலிட்டர் பேக்கை திருடுனீங்க!” கமால்

“நீ பாத்தியா?”

“இல்ல நீ பாத்தியா?”

“இரு.. முருங்கைக்காய் திருடி உன் பொண்டாட்டினு போலீஸ்ல புகார் பண்றேன்.”

“ஓவரா பேசின.. ராத்திரியோட ராத்திரியா உன் முருங்கைமரத்தை வேரோடு வெட்டி சாய்ச்சிருவேன்.”

“நீ என் மரத்தை தொட்டன்னா நான் உன் டிஷ் ஆன்ட்டெனாவை உடைச்சு நொறுக்கி குப்பைல வீசிருவேன்!”

“வீணா என்னை கெட்டவார்த்தைகள் பேச வச்சிராதே. நான் பேசினா உன் காதுலயிருந்து ரத்தம் வழிய ஆரம்பிச்சிரும்!”

“எனக்கு கெட்ட வார்த்தைகள் அகராதி தயாரிக்கும் அளவுக்கு கெட்ட வார்த்தைகள் தெரியும். உன் பத்து தலைமுறைய ஊத்தை வார்த்தைகளால் கழுவி கழுவி ஊத்துவேன்!”

“பல்லை தட்டிருவேன்!”

“மூக்கை அறுத்திருவேன்..” ஹக்கீம்

முஸ்தபா கமால் ஓடிப்போய் ஒரு அரிவாளை தூக்கி வந்தான். “இன்னைக்கி உன்னை வெட்டி சாய்ச்சிட்டு தான் மறுவேலை!”

ஓடிப்போய் ஒரு உருட்டுக்கட்டையை தூக்கி வந்தான் அப்துல் ஹக்கீம் .”ஓங்கி ஒரே அடி.. மண்டையை டாரா பொளந்திர்ரேன்..”

இருவரின் ஆவேச கூச்சலை கேட்டு அண்டை வீட்டார் ஓடி வந்தனர். “என்னப்பா சண்டை?”

இருவரும் முறையிட்டனர்.

“எங்க வீட்டு முருங்கைக்காய்களை திருடிட்டாங்க..”

“அவங்க வீட்டு முருங்கைக்காய் திருடினதா அபாண்டமா பழி போடுறாங்க தவிர அசிங்கஅசிங்கமா பேசுராங்க!”

“நம் மனாஸ் கார்டனில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பெரும்பாலான வீடுகளில் இருப்போர் முஸ்லிம்களே.. நீங்களே இப்படி ஒருத்தருக்கொருத்தர் அடிச்சுக்கிட்டா எப்டி? பிரச்சனையை இத்தோட முடிங்க. உண்மைல முருங்கைக்காய் திருடு போயிருந்தால் அல்லாஹ் திருடுனவங்களுக்கு தகுந்த தண்டனை தருவான்.. அமைதி காத்து இருவரும் அவரவர் வீட்டுக்குள் போங்கள்!”

இரு வீட்டு தம்பதிகளும் அர்த்தமாகாத டெஸிபல்லில் புலம்பியபடி வீட்டுக்குள் போயினர். சமாதானம் செய்த நபர் சாய்தாவிடம் இரு முருங்கைக்காய்களை வாங்கிக் கொண்டு புறப்பட்டார்.

பொன்விழா ஜமாஅத் பள்ளிவாசல்.

இமாம் பயான் பண்ணிக்கொண்டிருந்தார். முதல்வரிசையில் அப்துல் ஹக்கீமும் நான்காவது வரிசையில் முஸ்தபா கமாலும் அமர்ந்திருந்தனர்.

ஒளு செய்யும் போதே ஹக்கீமை கமால் பார்த்து விட்டான். முருங்கைக்காய் சண்டை நடந்து ஐந்து நாட்கள் ஆகின்றன. இன்னும் கோபமும் வன்மும் இருவர் மனதிலும் கனன்று கொண்டிருந்தன.

“முருங்கைக்காய் திருடிட்டு யோக்கியன் மாதிரி ஜும்ஆ தொழ வந்திட்டான்!” அப்துல் ஹக்கீம்

“முருங்கைக்காய் திருடினோம்னு அபாண்டமா பழி போட்டுட்டு ஜும்ஆ தொழ வந்திட்டான்!” முஸ்தபா கமால்.

இரண்டு ரக்காயத் தொழுது முடித்தனர். துஆ கேட்டனர். ஸலவாத் ஓதினர்.

முதல் வரிசையில் இருந்த அப்துல் ஹக்கீம் வேகவேகமாக நடந்தான் ஹக்கீமும் கமாலும் அவரவர் செருப்பு அணிந்து கொள்ளும் போது முட்டிக் கொண்டனர்.

டைட்குளோஸப்பில் ஒருவர் கண்களை இன்னொருவர் கண்கள் வெறித்தன.

“சலாம் சொல்லுவோமா?” ஹக்கீம் யோசித்தான்.

“சலாம் சொல்லுவோமா?’ கமால் யோசித்தான்.

‘அரிவா எடுத்து வெட்ட வந்தவனுக்கு எதுக்கு சலாம்?’

‘உருட்டுக்கட்டை எடுத்து அடிக்க வந்தவனுக்கு எதுக்கு சலாம்?’

‘மொதல்ல சலாம் சொன்னா இவனுக்கு திமிர் வச்சிரும்!’

‘இவன் நடந்தததை மறந்து சலாம் சொன்னா நாம பதில் சலாம் சொல்லுவோம்.’

இருவருக்கு இடையேயும் ஒரு கொடூரமான மௌனம் தலைவிரித்து ஆடியது.

தொடர்ந்து இரு ஜும்ஆ தொழுகைகளில் இருவரும் ஒருவரையொருவர் விழுங்குவது போல பார்த்து விட்டு விலகினர்.

நான்காவது ஜும்ஆ தொழுகையில் இமாம் அழகிய முகமன்கள் பற்றி பயான் செய்ய ஆரம்பிததார்.

“முஸ்லிம் அல்லாதவர் ஸலாம் கூறினால் பதில் ஸலாம் கூறுவதில் தவறேதும் இல்லை. நமக்கு தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாமை பரப்பலாம். முஸ்லிமின் ஐந்து கடமைகளில் ஒன்று ஸலாமுக்கு பதிலுரைப்பது. மக்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் நெருக்கத்திற்குரியவர் அவர்களில் முதல் ஸலாம் கூறுபவரே ஆவார். ஒரு முஸ்லிம் தன் சகோதரரான இன்னொரு முஸ்லிமை மூன்று நாட்களுக்கு மேல் வெறுக்கக் கூடாது. இந்நிலையில் அவ்விருவரில் எவர் முதலில் ஸலாம் சொல்லி பேச்சை ஆரம்பிக்கிறாரோ அவரே சிறந்தவர் என நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்கள்.”

இமாமின் பயான் கேட்ட அப்துல் ஹக்கீம் முஸ்தபா கமால் இருவரின் வன்மங்கள் காற்றில் கரைந்தோடின.

ஸலவாத்து ஓதி முடித்ததும் இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி ஓடி வந்தனர்,.

“அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே!”

“அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே!”

இருவரின் அழகிய முகமன்கள் ஒன்றையொன்று முந்தாது ஒரே நானோ நொடியில் கோரஸாய் உயர்ந்து ஒலித்தன.

இருவரும் வாரி அணத்து கட்டிக்கொண்டு ஒருவரைஒருவர் முஸாபஹா செய்து கொண்டனர்.

“ஆத்திரம் அறிவை அழித்துவிட்டது. என்னை மன்னியுங்கள் சகோ!’‘

“சைத்தான் என் நாக்கில் ஏறி துர்வார்த்தைகள் பேசி விட்டேன். மன்னியுங்கள் சகோ!”

-சிறுவன் இப்ராகிம் முப்பதுக்கும் மேற்பட்ட முருங்கைக்காய்கள் அடங்கிய கட்டை எடுத்து வந்து புஸ்ராவிடம் நீட்டினான். “அம்மா குடுத்திட்டு வரச் சொன்னாங்க!”

சிறுமி நூர்ஜஹான் பெரிய கிண்ணத்தில் தலைக்கறி குழம்பும் பாதியாவில் நெய்சோறும் எடுத்து போய் சாய்தாவிடம் நீட்டினாள். “அம்மா குடுத்திட்டு வரச் சொன்னாங்க!”

அன்பும் சமாதானமும் மனாஸ் கார்டன் முழுக்க பொங்கி வழிந்தன. அதில் அப்துல் ஹக்கீம்-சாய்தா, முஸ்தபா கமால்-புஸ்ரா குடும்பத்தினர் நீந்தி களித்தனர்.