
அந்த பூங்காவைக் கடக்கும் போது கண்ணில் தட்டுப்பட்டது அந்த இரும்பு பெஞ்ச். வெள்ளை பூசப்பட்ட இரும்பு பெஞ்ச். வண்ணம் அங்கங்கே உதிர்ந்து இருக்க வெளியில் தெரியும் இரும்பு ஒரு விடுதலை உணர்வோடு இருப்பது போல் தோன்றியது. யாரும் அறியாமல் தானே அந்த வெள்ளையை உரித்து எடுக்கிறதோ என்னவோ! எனக்கு இதை போல் நீண்ட இருக்கையை பார்த்தால் வெறுமே கடக்க மனம் வராது. இரும்போ, மரமோ, எல்லா நீண்ட இருக்கையும் தன்னுள் எத்தனையோ கதைகள் தாங்கி இருக்கும். அதன் கைப்பிடியில் கையை வைத்துக்கொண்டு, சாய்ந்து அமர்ந்தால் பிடிமூலமாகவோ, முதுகு கட்டை மூலமாகவோ ஏதோ ஒரு கதையை செய்தியாய் உள்ளே அனுப்பும் என்று தோன்றும். அதுவும் பூங்காவில் தனித்து இருக்கும் ஒரு நீண்ட இருக்கை சத்தியமாக நூறு கதைகள் கொண்டு இருக்கும். பூங்காவை கடக்க முடியாமல் உள்ளே சென்றேன். கொஞ்சம் கவனிப்பாரற்று கிடக்கும் மாநகராட்சி பூங்கா தான் அது. ஒருபக்கம், சறுக்குமரம் மறுபக்கம் ஊஞ்சல். ரெண்டுமே எப்போதுவேண்டுமானாலும் உடைந்து விழலாம். அந்த பூங்காவில் இதை போல் ஒரு ஐந்தாறு நீண்ட இருக்கைகள் இருந்தன. அத்தனைக்கும் மத்தியில், என்னை கவர்ந்தது, எல்லாவற்றிலிருந்தும் விலகி சற்று ஒதுக்குபுறமாக இருந்த அந்த நீண்ட இருக்கை. அந்த இருக்கையின் மேல் ஓட்டைகள் நிரம்பிய குடை போல மரத்தின் கிளைகள். மரத்திற்கும், இருக்கைக்கும் நடுவில் பூங்கா சுவர் இருந்தாலும், அதை தாண்டி உள்ளே எட்டி பார்த்து தன் கடமையை ஆற்றிக்கொண்டிருந்தது அந்த மரம். மிக மிக சில மரங்கள் தவிர மற்றவற்றின் ஜாதியோ, பெயரோ எனக்கு தெரியாது. என்னை நான் எத்தனையோ முறை பயிற்றுவித்துக் கொண்டும், என் மூளை அதை ஞாபகம் வைத்துக்கொள்ள மறுக்கிறது. அதனால் இப்போதெல்லாம் அதை பற்றி கவலை படுவது இல்லை. ஆகையால் அந்த நீண்ட இருக்கையின் மேல் நிழல் கொடுத்துக் கொண்டிருப்பது ஏதோ ஒரு மரம். அதன் அருகில் சென்றேன். கையால் அதன் மேலிருந்த குப்பையை அகற்றிவிட்டு உட்கார்ந்தேன். யாரும் அற்ற ஒரு பூங்கா. மாலை நேரம். அழகான அமைதி.கைப்பிடியில் கையை வைத்து, காலை சற்று நீட்டிக்கொண்டு சாய்ந்து அமர்ந்தேன். கருப்பும் வெள்ளையுமாய் ஒரு வரிக்குதிரை போல் இருந்தது அந்த இருக்கை. வெள்ளையை களைந்தால் ஒரு கரிய அரபுநாட்டு குதிரையாய் மாறலாம். கதைகளில் வருவது போல் திடீரென்று இறகு முளைத்து இந்த இருக்கை பறக்க ஆரம்பித்துவிட்டால்! திரும்பி கைப்பிடியின் இடைவெளியில் இரெண்டு காலையும் விட்டுக்கொண்டு, கைப்பிடியை இறுக்கமாக பிடித்துக்கொண்டு அமரவேண்டும் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். ஐம்பது வயது கடந்தாலும் இந்த அம்புலிமாமா தனம் என்னை விட்டு போக மாட்டேன் என்கிறது. என்ன செய்ய!
கையில் இருந்த காய்கறி பையையும், என் கை பேசியையும் பக்கத்தில் வைத்து விட்டு கண் மூடி அமர்ந்தேன். ஒரு பத்து நிமிடம் தான் இருக்க முடியும். காய்கறியுடன் சீக்கிரம் சென்றால் தான் இரவு சாப்பாடு கிடைக்கும். அகல்யா சொல்லி அனுப்பி இருக்கிறாள். " அங்க போய்ட்டேன், இங்க போய்ட்டேன்னு ஏதாவது காரணம் சொல்லி தாமதமா வந்தீங்கன்னா பழைய சோறு இருக்கு அது தான் இன்னிக்கு ராத்திரிக்கு. என்னால பத்து மணிக்கு மேல எல்லாம் சமையல் செய்ய முடியாது" அவளின் அனுபவம் அது. என்னை சமாளிப்பது கொஞ்சம் கடினம் தான். கண்மூடி அமர்ந்தேன். ஒரு சில நிமிடங்களில் யாரோ பக்கத்தில் அமர்வது போல் தோன்றியது. கண்திறந்து அருகே பார்த்தேன். ஒரு புகை போல ஒரு உருவம். கனவோ என்று கண்ணை கசக்கி பார்த்தேன், சட்டை பையிலிருந்து கண்ணாடியை எடுத்து போட்டு பார்த்தேன். அதே புகை மொத்தமாய் குமிந்து இருந்தது. உடனே எழுந்து போய் இருக்கலாம். நகராமல் அந்த புகையையே உற்று பார்த்துக்கொண்டிருந்தேன். அது கொஞ்சம் கொஞ்சமாய் வடிவெடுத்தது. சிவந்த கண்கள், சுருங்கிய தோல் , நீண்ட நகங்கள், புகைக்கு நடுவில் என்னால் இவ்வளவு தான் பார்க்க முடிந்தது. சாதாரண மனிதன் இல்லை என்று தெரிந்து விட்டது. இப்போதாவது போய் இருக்கலாம்.
"நீ யார்? என்று கேட்டேன்.
" யாரென்று நினைக்கிறாய்"
" பேய், பிசாசு?"
" இல்லை"
"பின்?"
"வேதாளம்"
"ஐயோ, அந்த முதுகில் ஏறி கேள்வி கேக்கற கூட்டம்."
"கவலை படாதே. உன்னை கேள்வி எல்லாம் கேட்க மாட்டேன்."
"சரி, நீ எப்படி வேதாளம் ஆனாய்?"
"நான் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால், ஒரு நாட்டின் காலாட்படையில், ஒரு சிப்பாயாக இருந்தேன்."
"போரிலே இறந்திருந்தால், உனக்கு வீர சொர்கமாமே!, இறக்க வில்லையா?"
"இல்லை. புறமுதுகு காட்டி ஓடிவிட்டேன்."
"ஓ! அது நெறிமுறை மீறல். பாவம் தான். அதனால் தான் இப்படி அலைகிறாயா? ?"
"இல்லை இல்லை. ஓடி ஒளிந்த பொழுதில், ஒரு வீட்டில், நிறைய பொன்னும், பொருளும் இருப்பதை கண்டேன். கொஞ்சம் திருடிக்கொண்டு ஓடிவிட்டேன்."
"ஓ! அந்த பாவமா என்ன?"
"இல்லை. திருடிய பொன் பொருளை வைத்துக்கொண்டு ஒரு வியாபாரியாக மாறினேன். ஒரு சில வருடம் கழித்து, மறுபடியும் என் ஊருக்கு வியாபாரியாக மாறு வேடமிட்டுச் சென்றேன். அங்கே என் முறை பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்தேன். கோவமாக வந்தது அவனைப் பார்த்தால்."
"அடப்பாவி. அவனை கொன்றதால் தானே இந்த தண்டனை உனக்கு?"
"கதை கேள். அவனை கொல்லவில்லை. பதிலாக அவர்கள் குழந்தையை கொண்டு போய் எதிரி நாட்டிலுள்ள குழந்தை இல்லாத என் நண்பனிடத்தில் குடுத்து விட்டேன். அவன் மகிழ்ச்சியாக தான் வளர்ந்தான்."
"கடவுளே! நீ மிகவும் கெட்டவனாக இருந்திருக்கிறாய். இதற்க்கு தானே சபிக்கப் பட்டாய்?"
"இல்லை. என் நாட்டை பற்றி ஒரு ரகசியத்தை என் பழைய நண்பர்கள் மூலம் அறிந்தேன். அதை எதிரி நாட்டு மன்னனிடம் போய் சொன்னேன்"
" நீ இன்னும் ஆயிரம் வருடங்கள் இப்படித்தான் அலைவாய்.அவரிடம் கிடைத்த பொன் பொருளை என்ன செய்தாய்?"
"அவர் என்னிடமிருந்து ரகசியத்தை வாங்கிக்கொண்டு, உன் போன்ற மனிதன் வாழ தகுதி அற்றவன். நீ தேச துரோகி, என்று கூறி என்னை கழுவில் ஏற்ற சொல்லிவிட்டார். அதனால் தான் இவ்வாறு அலைகிறேன்."
" அப்பாடி! ஒருவழியாக உன் பாவ பயணம் முடிந்தது"
" இல்லை. இன்னும் இருக்கிறது கேள்."
நேரமாகி கொண்டிருந்தது. அப்போதாவது எழுந்து போயிருக்கலாம்.
" ஒரு ஆவியாய் அலைந்து கொண்டிருந்த நான் ஒரு நூறு வருடங்களுக்கு முன் ஒரு ப்ரம்ம ராக்க்ஷஷனை சந்தித்தேன். அவன் யார் என்று தெரியாமல் அவனுக்கு தொந்தரவு கொடுத்தேன். அதனால் கோபமடைந்த அவன் என் ஆவியை ஒரு இறந்த உடலுக்குள் செலுத்தி வேதாளமாக அலைய விட்டு விட்டான். அவனிடம் நான் மன்றாடி மன்னிப்பு கேட்டேன். அவன் என்னிடம் ஒரு பரீட்சை வைத்தான். அழகற்ற, வாசனை அற்ற, மக்கள் மனம் கவரும் எதுவும் உபயோகிக்காமல் ஒரு மனிதனை கவர்ந்து தன்னிடம் அழைத்து வர வேண்டுமென்று. அப்படி வந்தால் என்னை இதிலிருந்து காப்பாற்றுவதாகவும் சொன்னான். இன்றோடு நூறு வருடங்கள் ஆகிவிட்டன.
ஓ! பொதுவாக ஒருவனை வசீகரிக்கவேண்டுமென்றால் ஏதாவது ஒரு மயக்கம் ஏற்படுத்தவேண்டும். அழகுணர்ச்சியே இல்லாமல் எப்படி மயக்குவது. நீ தோற்றுத்தான் போவாய். நான் கிளம்புகிறேன்.
"சற்று பொறு!. நீ அமர்ந்திருக்கும் இந்த பூங்கா அழகாக இருக்கிறதா?"
"எல்லாம் உடைந்து போன பொருட்கள். துருப்பிடித்துப் போனவை. எல்லா இடத்திலும் ஒரே குப்பை. இதெப்படி அழகாகும்."
"இந்த இடம் வாசனையாக இருந்து உன் மதி மயக்குகிறதா?"
"எல்லா இடத்திலும் பறவை எச்சம், அழுகிய இலைகள். எங்கிருந்து நறு மனம் வரும்?"
அப்படி இருக்க, நீயே வந்து இந்த வண்ணம் கலைந்த, பறவைகளின் எச்சம் நிறைந்த இந்த இருக்கையில் ஏன் அமர்ந்து கொண்டாய்?"
ஏதோ புரிவது போல் இருந்தது. எத்தனையோ முறை இந்த வழி வந்திருக்கிறேன். இப்படி ஒரு பூங்காவை பார்த்ததே இல்லை. ஒரு துளியும் சந்தேகம் வராமல், அழகற்ற ஒன்றினால் ஈர்க்கப்பட்டு வந்து அமர்ந்திருக்கிறேன்.
திடுக்கிட்டு எழ முயற்சி செய்தேன். கால் தரையில் பாவ வில்லை. இருக்கைக்கு இறக்கை முளைத்திருந்தது. அது பறக்கும் போது தானாக என் கால்கள் வளைந்த கைப்பிடிக்கு உள்ளே சென்றன. கைகள் கைப்பிடியை இறுக்கமாக பற்றிக்கொண்டன. வேதாளம் என் முதுகில் பரவ ஆரம்பித்திருந்தது. கீழே குனிந்து பார்த்தேன்.
ஆளற்ற நடு வீதியில் என் காய்கறி பையும், கை பேசியும் கேட்பாரற்று கிடந்தது.

Leave a comment
Upload