
ஓவியம்: மணி ஸ்ரீகாந்தன், இலங்கை.
'ஏற்கெனவே திபெத்திலே, கொட்டித் தீர்த்த பனியிலே சடை எருமைகளோடு சினிமா எடுத்து, பட்டபாடு போதாதா.... தாத்தா?' – குண்டு ராஜா.
'ஏந் தாத்தா, இ ரிஸ்க்கு?' - அப்பாராவ்.
'கசுமாலம்... வாத்யாருக்கு கெய்விகிட்டே கும்மாங்குத்து வோணுமாக்கும்...?' - ஹாஃப் பிளேடு கருணா.
- சுப்புசாமியிடம் தோஸ்த் வகையறாக்கள் கேட்க நினைத்த 'வசந்தமாளிகை' வாணிஸ்ரீ கேள்விக்கணைகள் சடன்பிரேக்குகள் அடித்து நின்றன. காரணம்-தாத்தா கையில் அள்ள அள்ளப் பணம்! அதைவிட அவர் சொன்ன செய்தி.
"நைனா, திடீர் ஜாக்பாட்டா? கேரளாவா... திரிபுராவா? எவ்ளோங்காட்டியும் பிரைசு அடிச்சுகினே... படா கில்லாடியாநீ...!"
- ஹாஃப் பிளேடு கருணாசலத்தின் 'கில்லாடி' பட்டம் அவருக்குப் பிடித்திருந்தது.
"தாத்தா...நீ வளர்த்த பிள்ளை...!" என்று பாடிய குண்டு ராஜா, "கவலைப்படாதீங்க தாத்தா. ஏற்கெனவே திபெத்பிரதேசத்திலே, கொட்டித் தீர்த்த பனியிலே சடை எருமைகளோடுபட்ட உங்க வீர தீரச் சாகசங்கள் இன்னும்பசுமையா மனசிலே பாக்கி இருக்குது. பொளந்து கட்டிப்புடலாம் தாத்தா!" என்றவனை வாஞ்சையோடு பார்த்தார்சுப்பு.
"ஆஸ்கார்" உண்டு எனவும் கமல்ஹாசனை மண் கவ்வ வைக்கலாம் என்று அப்பாராவ் அளந்தான்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு நடந்த இடம் : சிட்டி சென்டர் மால்.
சுப்புசாமிக்கு போரடித்தால் நண்பர்கள் சகிதம் பளபளா மாலுக்குச் சென்று வேடிக்கை பார்ப்பதுண்டு. இன்று'யாரையாவது தேட்டை போடலாம்' என்று ஹாஃப் பிளேடு சகிதமாக வந்து, தோஸ்த் கருணா சேர்ந்து கொண்டான்.
"நாளைக்கு சந்திரா டவர்ஸ் அறை எண் 302 க்கு வாங்கடா. சினிமா டிஸ்கஷன்! நாம சந்திச்சுப் பேசி எவ்வளவுநாளாச்சு...?"
"டிக்காஷனா.... வாத்யாரே?" என்றான் பிளேடு மீசையை முறுக்கியபடி.
"மண்டூ...மண்டூ...நாம குறும்படம் எடுக்கப்போறோம்டா. நம்ம விஜய் சேதுபதி தம்பி குறும்படங்கள்லே நடிச்சுத்தான்பேர் வாங்குனான். நாமும் படங்கள் எடுத்து பல சேதுபதிகளை உருவாக்கலாண்டா....!" என்ற சுப்புசாமியைமட்டமாகப் பார்த்தான் குண்டு.
பல மாதங்கள், பல மீட்டிங்குகள், பல வியூகங்கள், பல கோடிகள், பல மூளைகள் யோசித்து உருவாக்கிய விண்வெளிராக்கெட் மேலேறாமல் படுத்துக்கொண்டால் எப்படி 'புஸ்...' ஆகுமோ... அதுபோன்று உணர்ந்தான்.
"போயும் போயும் குறும்படமா?" என்று மூன்றே வார்த்தைகள் கொண்ட கேள்வியைத்தான் கேட்டான். பொங்கிவிட்டார் தாத்தா.
ஷாப்பிங் மால் என்று கூட பார்க்காமல் சிறு 'அல்லேலுயா பிரசங்கம்போல' புலம்பித் தீர்த்து விட்டார்.
"உங்களோட குறுகிய மனசிலேர்ந்து இறங்கி வாருமய்யா மனிதரே! நீங்கள் அற்பப் பதராய் இருந்தது போதும். அற்புதப் பயிராய் ஆக, ஆண்டவரை வேண்டுகிறோம். என் பரம தோஸ்துகளே...!" என்ற சுப்புசாமி,
"இன்னுமாடா மண்டுப்பசங்களா இருக்கீங்க? கடுகு சிறுத்தா காரம் போய்டுமாடா? புனுகு போட்டாதாண்டாபூனைக்கு மவுசு!" என்றார்.
'நைனாக்கிழம் அறுத்து தள்ளுது. பிளேடுக்கும் இந்த சி.சி.டி.வி. நிறைந்த மால்லே வேலையும் இல்லை...!' என்றுவறுமை நிறம் சிவப்பாகிக் கொண்டிருந்தான் ஹாஃப் பிளேடு.
அப்பாராவ், 'இவ்விடம் மைசூர் போண்டா விற்கிறார்களா?' என்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்.
"சுருக்கமா சொல்றேண்டா கோவேரிக் கழுதைகளா! எவனுமே சொல்லாத கதையை தயார் பண்ணிட்டேன். ஒருபடம்... ஒரே குறும்படம் எடுக்கப்போறேன். நான்தான் கதை, வசனம், இசை, தயாரிப்பு, இயக்கம் எல்லாம்! நம்படி.ஆர்.கிட்டே கேமரா உதவியாளரா இருந்தவர் என் பிரெண்டு. அவர்தான் நம்ம படத்துக்கு கேமரா மேன்...!"
"சுருக்கம்னு சொல்லிட்டு பெரிசா சொல்றீங்களே தாத்தா...!"
"படத்தை உலகம் பூரா விடறோம். யூ டியூப்லே பணத்தை அள்ளலாம்...! நாளைக்கு ஹோட்டல் ரூம் புக் பண்ணியாச்சு. கேமரா மேன் இருப்பார். மீதியை நாஸ்டா பண்ணிக்கிட்டே டிஸ்கஷன் பண்ணலாம்...!" என்று கருணாச்சலத்தைவாஞ்சையுடன் தடவினார் சுப்பு.
'சரி ஒரு நூறு ரூபாயை வெட்டு நைனா...!" என்று கிளம்பினான் பிளேடு.
டி.ஆர். மாதிரி தாடி இல்லை. ஆனால், நாடி இருந்தது. அடுக்குமொழி வசனம் இல்லை. மவுனமாய் ரூம் ஸ்பிரேநாற்றமடிக்கும் அறையின் மோட்டு வளையையே பார்க்கும் மயான அமைதி இருந்தது... சாதிக்காமலேயே ரிடையரானகேமரா (ஓல்டு) மேன் காசிராமிடம்!
"மும்தாஜை வைத்து கும்மென்று படமெடுத்த நம்ம டி.ஆரின் இணை ஒளிப்பதிவாளரான திரு.காசிராம் அவர்கள் நம்புராஜெக்ட்டில் இணைந்ததை வரவேற்போம்...!" என்று அறிமுகம் செய்த சுப்புசாமி, தான் முதலில் கை தட்டி, மற்றவர்களையும் வலுக்கட்டாயமாகத் தட்ட வைத்தார்.
"ஆரம்பிச்சுடலாங்களா?" கேட்டார் கேமரா மேன்.
இயக்குநர் சுப்புசாமி தலையசைத்தார்.
"மொத ஷாட்லே...கேமராவை சூம் பண்ணி, டைட் வெக்கிறோம். பெருதாவூர் பங்காளாவிலே நம்ம சசிரேகா எதையோகண்டு அலறிக்கிட்டே ஓடிவர்றா...!"
சுப்பு அண்ட் கோவிற்கு புல்லரித்தது!
"கட் பண்றோம்... ஹீரோயினோட தோழியை ஒருத்தன் ஆசை வார்த்தை காட்டி, கொல்லப்போறான். அதை சசிஜன்னல் வழியா பார்த்து, அதிர்ச்சி அடையறா..!"
சுப்புசாமிக்குப் பெருமையாய் இருந்தது. தனது கதையின் நாயகி உயிர் பெற்று செலூலாய்டில் சங்கமிக்கப்போகிறாள் அல்லவா?
"நடந்த கொலைக்குப் பின் மாந்திரீக பூசாரி ஒருத்தன் மாட்டறான். அவனை... செத்துப்போனவள் பேயாக மாறி..."
"கட்...!" என்றார் சுப்புசாமி.
சுடச்சுட வெங்காய பக்கோடாவும் விறுவிறு மிளகாய் டொமோடோ சாஸும் வந்ததே காரணம்.
"பணத்துக்கு என்ன பண்ணீங்க, தாத்தா?" குண்டு ராஜாவின் கேள்விக்கு விடையாக சுப்பு சிரித்தார்.
குறும்படக் கலைத்தாகம் எடுத்ததுமே முடிவு கட்டிவிட்டார் தாத்தா.
தொட்டு (தொடாமலேயே...?) தாலி கட்டிய ராதேக்கிழவி திருமணத்தன்று போட்டிருந்த ஒட்டியாணம் சைஸ்குறுகியதால் (அப்போது அவள் குறுக்குச் சிறுத்தவள்!)... தற்போது அவள் அதை உபயோகிக்க வழியேயில்லை. ஞாபகார்த்தமாய் பீரோ லாக்கரில் அதனை வைத்திருந்தாள். ஒட்டியாணத்தை தாற்காலிகமாக 'கபளீகரம்' செய்தசுப்புசாமி.... அடகு வைத்து 'டாஸ்க்கில்' வெற்றியடைந்தார். பணம் சம்பாதித்து மறுபடியும் நகையை மீட்டு'வைத்துவிட' பிளான்.
வட பழனியில் நாலாந்தரமான ஒரு சுப்புசாமியின் குறும்(புப்) படம்!
குண்டு ராஜா, கதாநாயகனாக நடிக்க முழு சபல மனதோடு சம்மதித்தான். விசாரணை அதிகாரியாக அப்பாராவ்அவதரிக்க, பூசாரியானான் ஹாஃப் பிளேடு! சுப்புசாமி தொப்பியெல்லாம் போட்டுக்கொண்டு கிழ இயக்குநர்இமயமானார்! முரட்டு பங்களாவில் மிரட்டும் குறும்படம் ஆ....ரம்பித்தது! ஒருவழியாய் படம் முடிந்தது!
தனுஷ் முதல் ட்வீட்! பிறகு, மாமனார் ரஜினிகாந்த் வழிமொழி ட்வீட்!! விஜய்சேதுபதி தாடிச்சிரிப்புடன் பாராட்டு...!
அட, உலக நாயகன் கமல்ஹாசன்! 'பிக்பாஸ்' வீட்டில் அழகான அபலைகளுக்கு அட்வைஸ் செய்வதை நிறுத்திவிட்டுஒரு கரகர பேட்டி.
"கிழவனார் சுப்புசாமியை என் தகப்பனாராகப் பார்க்கிறேன். அட்டகாசப் பாணி, எட்டாக் கனியாக ஓர் இயக்குநர். இக்குறும்படம் நிறைபடமாக மிளிர்ந்து அனேக விருதுகளும் அன்னாரை சந்தோஷச் சாந்தியடைய (கரகர கமறல்) அனைத்து சக்திகளும் கொண்டுள்ளது இந்த மினியேச்சர் கலைப் பொக்கிஷம்....!"
யூ டியூப் பார்வை ஒரே நாளில் இரண்டு லட்சங்களை தாண்டியது. எத்தனை ஷேர்கள்... கமெண்ட்டுகள்... பேஸ்புக்பகிரல்கள்...
டைரக்டர் ஷங்கர் தனது 'S' பிக்சர்ஸ்க்கு சுப்புசாமியைத் தொடர்பு கொண்டதாகத் தகவல்!
சுப்பு, காசிராமோடும் தனது சகாக்களுடனும் காமிராவுக்கு 'போஸ்' கொடுத்தார்.
சந்தோஷம் இரு நாட்கள் கூட நீடிக்கவில்லை. நீதிமன்ற சீலிட்ட அந்தக் கடிதம் அவரது பல்செட்டை நறநறக்கவைத்தது.
என்ன நடந்தது என்றால்... அது கிடக்கட்டும்!
நீதிபதி மரச்சுத்தியலால் மேஜையைத் தட்டி சப்தம் வருகிறதா என்று பார்த்துவிட்டு, பார்த்து வாசித்த தீர்ப்பின்சாராம்சம் பின்வருமாறு:
"கலை என்பது கலையாகவே இருக்க வேண்டும். அசிங்கமானதை கன்னா பின்னாவென்று காண்பித்து விட்டு, கடைசியில் இதெல்லாம் கூடாது என்று சாக்கு போக்கு சொல்லும் இந்த இயக்குநர் சுப்புசாமியின் மனைவியே அவரைஎதிர்த்து இந்த வழக்கைத் கொடுத்துள்ளார். அந்த தைரியசாலிப் பெண்மணியை மனதாரப் பாராட்டுகிறேன்…! என்றுஇந்த கோர்ட் பெருமையோடு கூறி..."
அதற்குமேல், தீர்ப்பின் சாராம்சத்தை சுப்புசாமி உணரவில்லை. 'கிழவியின் ஒட்டியாணத்தை எப்படி மீட்பது?' என்ற கவலை அவர் கழுத்தைக் கவ்வியது.
*****

Leave a comment
Upload