
சதுர்ஷ்ரிங்கி மலை - இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு மலை. இந்த பிரசித்தி பெற்ற சதுர்ஷ்ரிங்கி கோயில் கோயில் சேனாபதி பாபட் சாலையில் ஒரு மலையின் சரிவில் அமைந்துள்ளது. சதுர் என்ற சொல் நான்கைக் குறிக்கிறது மற்றும் சதுர்ஷ்ரிங்கி என்பது "நான்கு சிகரங்களைக் கொண்ட மலை" ஆகும். 90 அடி உயரமும் 125 அடி அகலமும் கொண்ட இந்த கோயில் 1786 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது புனேவில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். மகாராஷ்டிராவில் அதிகம் பார்வையிடப்படும் புனித ஸ்தலங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது.
சதுர்ஷ்ரிங்கி தேவியை அம்பரீஷ்வரி தேவி என்றும் அழைக்கப்படுகிறார். இதனை சதுர்ஷ்ரிங்கி மந்திர், சத்துஷ்ருங்கி மந்திர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோயில் "சக்தி மற்றும் நம்பிக்கை" சித்தரிக்கிறது.
இந்த கோவில் பெரும்பாலும் நேர்மறை மற்றும் ஆன்மீகத்தின் இடமாகக் கருதப்படுகிறது. எனவே, உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வந்து பிரார்த்தனை செய்யவும், புனித யாத்திரை செய்யவும் வருகிறார்கள்.
இதனை மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் ஆட்சியின் போது கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கோவிலை சதுர்ஷ்ரிங்கி தேவஸ்தான (கோயில்) அறங்காவலர்கள் கவனித்து வருகின்றனர்.

கோயில் வரலாறு:
துர்லப்சேத் பீதாம்பர்தாஸ் மகாஜன் என்பவர் பணக்கார மற்றும் வளமான வணிகர். இவர் சதுர்ஷ்ரிங்கி தேவியின் தீவிர பக்தர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் சித்திரா பௌர்ணமி தினத்தன்று, அவர் புனேவிலிருந்து வாணிக்கு (நந்தூரி, நாசிக் சப்தஷ்ருங்கி கோயில் அமைந்துள்ளது) பயணம் செய்து, அனைத்து அம்மன் கோயில்களுக்கும் சென்று வழிபடுவார். அவரது வயது முதிர்ச்சியால் பயணம் செய்ய முடியவில்லை, இது அவர் கோயிலுக்குச் செல்லத் தடையாக இருந்தது, அது அவரது இதயத்தில் வருத்தத்தை ஏற்படுத்தியது, அவர் சதுர்ஷ்ரிங்கி தேவியைக் கண்ணீருடன் பிரார்த்தனை செய்தார், பின்னர் ஒரு நாள் இரவு அவரது கனவில் சதுர்ஷ்ரிங்கி தேவி தோன்றி அவரிடம் கூறினார். "நீங்கள் என்னிடம் வர முடியாவிட்டால், நான் உங்களிடம் வந்து உங்கள் அருகில் இருப்பேன்." புனேயின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு மலைக்கு வந்து அங்குத் தோண்டச் சொன்னார். அங்கு சதுர்ஷ்ரிங்கி தேவி கூறிய இடத்தில் தோண்டும் போது ஸ்வயம்பு வடிவாகத் தேவியின் சிலையைக் கண்டு ஆச்சரியமடைந்து. அந்த இடத்தில் கோயிலைக் கட்டினார், அந்த கோயில் காலப்போக்கில் புதுப்பிக்கப்பட்டு, தற்போதுள்ள கோயிலாக உள்ளது.
மலை அமைப்பு:

கோகலே நகரில் புனே பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள சேனாபதி பாபட் சாலையில் அமைந்துள்ள இந்த கோவில், மகாகாளி மற்றும் ஸ்ரீ சதுர்ஷ்ரிங்கி பக்தர்களின் தலமாகப் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் மிகவும் புனிதமான இடங்களில் ஒன்றாகும். இது சதுர்ஷ்ரிங்கி மந்திர் அறக்கட்டளையால் பல ஆண்டுகளாக நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயில் 90 அடி (27 மீ) உயரமும் 125 அடி (38 மீ) அகலமும் கொண்டது. கோயிலின் பிரதான நுழைவாயிலை அடையக் கிட்டத்தட்ட 170க்கும் மேற்பட்ட படிகள் ஏறி கோயிலுக்குச் செல்ல வேண்டும். கோயில் வளாகத்தில் துர்கா தேவி மற்றும் விநாயகர் கோவில்களும் உள்ளன. இதில் அஷ்டவிநாயகரின் எட்டு சிறிய சிலைகளும் அடங்கும். இந்த சிறிய கோயில்கள் நான்கு தனித்தனி மலைகளில் அமைந்துள்ளன.
திருவிழாக்களும், பிரார்த்தனையும்:
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். நவராத்திரியை முன்னிட்டு மலையடிவாரத்தில் திருவிழா நடைபெறும். இந்த நிகழ்வில் சதுர்ஷ்ரிங்கி தேவியை வழிபட ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். திருவிழாவின் பத்தாம் நாள் (விஜய தசமி / தசரா அன்று) மாலையில் நடைபெறும் வெள்ளி ரதத்தில் சதுர்ஷ்ரிங்கி தேவியின் வெள்ளி சிலையை எடுத்துச் செல்லும் ஊர்வலத்தைக் காண நாடு முழுவதும் இருந்து பக்தர்களும் மற்றும் உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் வந்து பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
மற்றொரு முக்கியமான திருவிழா "வட் பூர்ணிமா" ஆகும், ஆனி மாதம் (மே-ஜூன் மாதத்தில் வரும்) அன்றைய தினம் பல பெண்கள் கோயிலுக்குச் சென்று ஆலமரத்திற்குப் பிரார்த்தனை செய்கிறார்கள்.
திரிபுரி பூர்ணிமாவின் நாளில், கார்த்திகை (நவம்பர்-டிசம்பர்), சிறிய மண் பானைகளில் சுமார் 1,000 விளக்குகள் ஏற்றப்பட்டு, கோயிலைச் சுற்றி ஏற்றி வழிபடுவார்கள்.
இதைத்தவிர, தீபாவளி, ஹோலி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளும் இங்கு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றன.
இந்த கோயில் வழிபாட்டுத் தலமாக இருப்பதுடன், இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை மேம்படுத்தும் இடமாகவும் கருதப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இங்கு வருகிறார்கள். சமய மற்றும் கலாச்சார அறக்கட்டளை இங்கு பல்வேறு சங்கீத மற்றும் கீர்த்தனை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

கோயில் திறக்கும் நேரம்:
கோயில் அனைத்து நாட்களிலும் காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை திறந்திருக்கும். பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்களில் நேரம் மாற்றத்திற்கு உட்பட்டது.
கோயிலுக்குப் போவது எப்படி:
புனேயில் வசிப்பவர்களுக்கு, நகரின் எந்தப் பகுதியிலிருந்தும் வண்டிகள், ஆட்டோக்கள், பேருந்துகள் மற்றும் கார்கள் வாடகைக்கு கிடைக்கின்றன.
சாலை வழியாக : மும்பையிலிருந்தும் அருகிலுள்ள பகுதிகளிலிருந்தும் தினமும் பேருந்துகள் உள்ளன. சதாரா, ராய்காட் மற்றும் அகமத் நகர் ஆகிய இடங்களிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.
இரயில் மூலம்: சிவாஜி நகர் ரயில் நிலையம், காட்கி ரயில் நிலையம், டபோடி ரயில் நிலையம் ஆகியவை அருகிலுள்ள ரயில் நிலையங்கள்.
விமானம் மூலம்: சதுர்ஷ்ரிங்கி கோயிலுக்கு அருகிலுள்ள விமான நிலையங்கள் லோஹேகான் விமான நிலையம், சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், காந்திநகர் விமான நிலையம், கோலாப்பூர் விமான நிலையம்.
முகவரி:
அருள்மிகு சதுர்ஷ்ருங்கி கோவில், சேனாபதி பாபட் சாலை, அருகில், புனே பல்கலைக்கழக சாலை, கோகலே நகர், புனே, மகாராஷ்டிரா 411016
சங்கடங்கள் போக்கும் சதுர்ஷிங்கி தேவி வழிபட்டு எல்லா நலனும், வளமும் பெற்று, நல் வாழ்க்கை அமைய, அவர் பாதங்களில் சரண் அடைவோம்!

Leave a comment
Upload