தொடர்கள்
ஆரோகியம்
விரல்களில் விந்தை 22-ரஜனி சுப்பிரமணியம்

சூன்ய வாயு முத்திரை

20230724211841239.jpg

கைகளினால் சைகையுடன் செய்யப்படும் யோகமே, முத்திரைகள் என்பது நமக்குத் தெரிந்ததே. மாத்திரைகள் இன்றி நமக்கு நாமே செலவின்றி சிகிச்சை செய்து கொள்ள உதவுவது, நமது முன்னோர்கள் நமக்களித்த முத்திரைகள் என்றால் மிகையாகாது.

இந்த முத்திரைகளை செய்வதற்கானக்கான விதிமுறைகளை மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்வோம். முதுகுத்தண்டு நிமிர்ந்த நிலையிலும், விரிப்பின் மீது அமர்ந்தோ அல்லது தரையில் பாதம் பதித்த வண்ணம் நாற்காலியில் அமர்ந்தவாரோ, உணவிற்கு முன் செய்ய வேண்டும்.

இப்போது சூன்ய வாயு முத்திரையை எப்படி செய்வது என்று பார்ப்போம். வாயு சம்பந்தமான விஷயங்களைக் கட்டுப்படுத்தக் கூடிய ஆள்காட்டி விரலையும், ஆகாய சம்பந்தமான விஷயங்களைக் கட்டுப்படுத்தக் கூடிய நடுவிரலையும் மடக்கி கட்டை விரலின் அடிப்பகுதியில் வைக்க வேண்டும். பிறகு படத்தில் காட்டியுள்ளபடி, இந்த விரல்களுக்கு மேல் கட்டை விரலை சிறிது அழுத்தத்துடன் வைக்க வேண்டும். மீதமுள்ள இரு விரல்களும் நேராக நீட்டியபடி இருக்க வேண்டும்.

இந்த சூன்ய வாயு முத்திரையானது, சூன்ய முத்திரை மற்றும் வாயு முத்திரை ஆகியவற்றை ஒரே நேரத்தில் பயிற்சி செய்வதாகும். இதை எந்த நிலையிலும் பயிற்சி செய்யலாம். ஆனால் உட்காரும் நிலையில் செய்வதே மிகுந்த நன்மை பயக்கும்.

இந்த முத்திரையைச் செய்வதால், பார்க்கின்சன் நோய், கீல் வாதம், மூட்டு வலி, முடக்குவாதம் போன்ற வாத நோய்கள் சரியாகும். நாட்பட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் அல்லது மூன்று வேளை, 15 நிமிடங்கள் என்ற அளவில் செய்யலாம்.

நமது ஐந்து விரல்களிலும், நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என ஐம்பூத சக்திகள் இருக்கின்றன. இந்த ஐம்பூத சக்திகளையும் கூட்டலாம், குறைக்கலாம். இந்த அடிப்படையில் தான், சூன்ய வாயு முத்திரையின் வாயிலாக உடலிலுள்ள வாயு, ஆகாயம் இரண்டையும் குறைக்கிறோம்.

இந்த முத்திரை செய்வதன் பலன்கள் - காது வலி, காதுகளிலிருந்து திரவம் வெளிவருதல், காது கேளாமை மற்றும் காது இரைச்சல் போன்ற காது சம்பந்தமான நோய்கள் சரியாகும். நன்கு தூக்கம் வரும். தைராய்டு கோளாறுகள் தீரும். சகிப்புத்தன்மை வளரும். மாத விலக்கு காலங்களில் ஏற்படும் வலி குறையும். மனம் அமைதியுறும்.

இந்த முத்திரையைச் செய்வதால் கிட்டத்தட்ட எல்லா வலிகளும் சரியாகும். நீடித்த மிதமான வலிகள் முற்றிலும் சரியாகும். எலும்புகளும், தசைகளும் வலுப்பெறும். வெர்டிகோ நோய் தீரும். வயதானவர்களுக்கு எலும்பு வலு குறைந்து, உடையும் தன்மை அடையும். இந்த நிலையில் இந்த சூன்ய வாயு முத்திரையை காலை, மாலை 20 நிமிடங்கள் அல்லது இடையிடையே 10 நிமிடங்கள் பயிற்சி செய்வதால் எலும்புகள் வலுவடையும். இந்த அற்புதமான சூன்ய வாயு முத்திரையைச் செய்து, பலன்களைப் பெறுவோம். ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.

- தொடரும்