



சென்ற வார நம்ம கட்டுரைத் தொடருக்கு ஸ்ரீராம் என்ற நம்ம விகடகவி வாசகரின் கருத்துக்கள் வாசகர் மெயிலில் கீழ்கண்டவாறு வந்திருக்கு என்றேன்.
- இன்' மறைந்து வருகிறது. நான்காம் வேற்றுமை தொகை ‘ஆல்' மறைந்து வருகிறது. மூன்றாம் வேற்றுமை தொகை இவற்றில் எப்படி நான்காம் அல்லது மூன்றாம், வேற்றுமை தொகை என்று கண்டு பிடிப்பது?
- மண்வீடு - மண்ணை வைத்து கட்டப்பட்ட வீடு (‘ஐ’ மறைந்து வருகிறது. இரண்டாம் வேற்றுமை தொகை) மண்ணால் ஆன வீடு, என்று புரிந்து கொண்டால்…இது மூன்றாம் வேற்றுமை தொகையா?
அதற்கு உங்கள் பதில் என்று பரணியிடம் கேட்க, அவர் பதிலளிக்க ஆரம்பித்தார்.
*சீராம் அவர்கள் கேட்ட கேள்வி 1 க்கான பதில் :
ஒவ்வொரு வேற்றுமைக்கும் ஒரு உருபு உள்ளது.
ஐ - 2ஆம் வேற்றுமை. உதாரணம் - வீட்’டை’க் கட்டினான், காட்’டை’ நோக்கி ஓடினான், நாட்’டை’ப் பார்த்தான்.
ஆல் - 3ஆம் வேற்றுமை. உதாரணம் - செங்கல்’லால்’ கட்டினான், கால்களி’னால்’ ஓடினான், கண்களி’னால்’ பார்த்தான்.
கு - 4ஆம் வேற்றுமை. உதாரணம் - செங்கல் சூளைக்’கு’ச் சென்றான், காட்டிற்’கு’ச் சென்றான், நாட்டிற்’கு’ வந்தான்
இன் - 5ஆம் வேற்றுமை. உதாரணம் - வீட்’டின்' பக்கத்தில் சூளை இருந்தது. நாட்’டின்’ அருகில் காடு இருந்தது.
அது - 6ஆம் வேற்றுமை. உதாரணம் - ஊக்க’மது’ கைவிடல். அவ’னது’ மனம் காட்டை தாண்டி உள்ள நாட்டில் இருந்தது.
கண் - 7ஆம் வேற்றுமை. உதாரணம் - அனுமன் கண்டேன் சீதையை என்று ராமன்’கண்’ (இராமனிடம்) கூறினார். பரதன்கண் (பரதனிடம்) சென்று பரதனை காத்தார்.
இதில் அந்த உருபு வெளிப்படையாக வந்தால் வேற்றுமை. மறைந்து வந்தால் வேற்றுமை தொகை.
கேள்வி 2 க்கான பதில் - ஆமாம்... சரியான சிந்தனை தான். மிகவும் நன்றாக புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார் வாசகர்.
*குறிப்பு : ஸ்ரீராமன் என்ற பதத்தை குலசேகர ஆழ்வார் சீராமா என்றே விளிக்கிறார். அதேபோல் சீர்காழிக்கு வைணவர்கள் கொடுத்துள்ள பெயர் காழிச்சீராம விண்ணகரம் என்ற பெயரே ஆகும். அதனால் ஸ்ரீராம் - சீராம் ஆனார்.
அடுத்ததாக புணர்ச்சி விதிகளைப் பற்றி பேசலாம் என்று அவரே தொடர்கிறார்.
புணர்ச்சி என்றால் சேர்தல் என்று பொருள். ஒரு சொல்லும் இன்னொரு சொல்லும் சேருவதே புணர்ச்சி எனப்படும். இந்த புணர்ச்சி விதிகளை நாம் புரிந்து கொள்வதற்கு முன்னால் சில சொற்களை நாம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.
நிலைமொழி - முதலில் இருக்கும் சொல்
வருமொழி - அடுத்ததாக வரும் சொல்
புணர்தல் - சேருதல்
தோன்றல் - ஒரு புது எழுத்து உருவாகுதல்
திரிதல்- ஒரு எழுத்து இன்னொரு எழுத்தாக மாறுதல்
மறைதல் - ஒரு எழுத்து நீங்குதல் (காணாமல் போவது)
புணர்ச்சி இரண்டு வகைப்படும்.
1. இயல்பு புணர்ச்சி. இயல்பாக இரண்டு சொற்கள் சேர்வது இயல்பு புணர்ச்சி. எடுத்துக்காட்டு பலா + மரம் = பலாமரம்.
2. விகாரப் புணர்ச்சி - இரண்டு சொல் சேரும் பொழுது அதிலுள்ள எழுத்துக்கள் தோன்றியோ, மறைந்தோ, திரிந்தோ மாற்றம் ஏற்படுவது விகாரப்புணர்ச்சி ஆகும். எடுத்துக்காட்டு
பலா + பழம் - பலா ப் பழம் (தோன்றல்)
வெளி + ஊர் - வெளி யூ ர் (திரிதல்)
மரம் + மஞ்சள் - மரமஞ்சள் (மறைதல்) - ம் மறைந்து விட்டது
நாம் தினமும் பேசக்கூடிய சொற்களில் நிறைய சொற்கள் புணர்ச்சி விதிகளுக்கு உட்பட்டு வந்துள்ளது. அது தெரியாமலேயே நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். எடுத்துக்காட்டாக சொல் + அம்மா என்பதை சொல்லும்மா என்று கூறுகிறோம். நீங்களே அதை ஒரு முறை கூறி பாருங்கள். உங்களுக்கே அது புரியும்.
இதேபோல் கிராமங்களில் உள்ள குல தெய்வங்கள் அனைத்தின் பெயரும் ஏதோ ஒரு விதத்தில் புணர்ச்சி விதிக்கு உட்பட்டே வருகிறது. எடுத்துக்காட்டாக மாரி அம்மன் என்பது மாரியம்மன் என்று மாறி உள்ளது. அதேபோல் கருப்பு அண்ணன் சாமி என்பவரை நாம் கருப்பண்ணசாமி என்றும் முத்து கருப்பு என்பவரை முத்துக் கருப்பு என்றும் கூறுகிறோம். இதில் மாரியம்மன் என்று சொல்லில் எழுத்துக்கள் திரிந்து வந்துள்ளது. அதேபோல் கருப்பண்ணசாமியில் எழுத்துக்கள் மறைந்து வந்துள்ளது. முத்துக்கருப்பில் எழுத்து தோன்றியுள்ளது.
சகோதரன் சகோதரி ஆகிய இரண்டு சொற்களையும் நாம் பிரித்துப் பார்த்தோமானால் சக (ஒரே) உதரன் (வயிற்றில் பிறந்தவன்), சக (ஒரே) உதரி ( வயிற்றில் பிறந்தவள்) என்று வரும். இவை வடமொழிச் சொற்களாகும். வடமொழியிலும் தமிழ் மொழி போலவே புணர்ச்சி விதிகள் உள்ளன. அதனாலேயே இங்கும் அந்த சொற்கள் சரியாக புணர்ந்து உள்ளது.
கீழே உள்ள அனைத்து பாடல்களும் மெல்லிசை என்ற ஒற்றுமையை தவிர ஒரு பொதுவான ஒற்றுமை உள்ளது. இந்த அனைத்து பாடல் வரிகளிலும் ஏதோ ஒரு புணர்ச்சி விதி கலந்து வந்துள்ளது. என்னென்ன புணர்ச்சி விதிகள் உள்ளது என்பதை நான் கூறாமல் இந்த பாடல்களை கொடுத்துள்ளதால் உங்களால் இவற்றினை இனம் காண முடியாது. ஒவ்வொரு விதியாக பார்த்ததற்கு பின்னால் இந்த பாடல்களை கேட்கும் போது உங்களுக்கே அந்த விதிகள் புலப்படும்.
பூங்கதவே தாழ் திறவாய் பூவாய் பெண் பாவாய்
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது
பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடிப் பார்த்தேன்
தென்மேற்கு பருவக்காற்று தேனிப்பக்கம் வீசும் போது சாரல் இன்பச்சாரல்
மாரியம்மா மாரியம்மா திரி சூலியம்மா நீலியம்மா
மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட
முதலில் நாம் சுலபமாக புரிந்து கொள்ளக்கூடிய புணர்ச்சி விதிகள் இதோ.
பூப்பெயர் புணர்ச்சி
நிலைமொழியில் (முதல் சொல்லில்) ‘பூ’ என்ற ஒற்றை எழுத்து வந்து வருமொழியில் (அடுத்த சொல்லில்) வல்லினம் (க, ச, ட, த, ப, ற) முதலில் வந்தால், அந்த வல்லினத்தில் இனமான எழுத்து(க்-ங், ச்-ஞ், ட்-ண், த்-ந், ப்-ம், ற்-ன்) நடுவில் தோன்றும். இதற்குப் பெயர் பூப்பெயர் புணர்ச்சி.
இதனுடைய விதி -
பூப்பெயர் முன் இனமென்மையும் தோன்றும் - நன்னூல் 200
மேலே உள்ள விதியிலேயே இதற்கான எடுத்துக்காட்டு உள்ளது. பூ + பெயர் - பூப்பெயர்
எடுத்துக்காட்டு - பூ + காற்று - பூ’ங்’காற்று
பூ + கதவே - பூ’ங்’கதவே
பூ+ தென்றல் - பூ’ந்’தென்றல்
பூ + செடி - பூ’ச்’செடி, பூ’ஞ்’செடி
பூ+ பாறை - பூ’ம்’பாறை
பூ + புகார் - பூ’ம்’புகார்
பூ + தோட்டம் - பூந்தோட்டம்
அடுத்த புணர்ச்சி விதி -
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - நன்னூல் 204
முதல் சொல்லின் கடைசியில் ஒரு மெய்யெழுத்து (உடல்) வந்து அடுத்த சொல்லின் முதலில் ஒரு உயிர் எழுத்து வந்தால் அவை இரண்டும் இயல்பாக புணரும்.
இதை புணர்ச்சி விதியில் சொல்ல வேண்டும் என்றால்
நிலைமொழி ஈற்றில் மெய்யெழுத்து வந்து வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால் அவை இயல்பாகப் புணரும்.
எடுத்துக்காட்டு - தமிழ் + ஆசிரியர் - தமிழாசிரியர்
கல் + எறிந்தான் - கல்லெறிந்தான்
சொல் + ஆடல் - சொல்லாடல்
நடனம் + ஆடினாள் - நடனமாடினாள்
படம் + எடுத்தார் - படமெடுத்தார்
மரம் + ஏறினார் - மரமேறினார்
பண் + இசைத்தார் - பண்ணசைத்தார்
கண் + அடித்தான் - கண்ணடித்தான்
கொம்பு + ஏறி + மூக்கன் - கொம்பேறிமூக்கன் (ஒரு வகைப் பாம்பு)

Leave a comment
Upload