தொடர்கள்
கவர் ஸ்டோரி
விகடகவிக்கு ஏழாவது பிறந்தநாள் …ஆசிரியர் மதன் விறுவிறு பதில்கள் …!

விகடகவிக்கு ஏழாவது பிறந்தநாள் …ஆசிரியர் மதன் விறுவிறு பதில்கள் …!

20231101195229386.jpeg

நீங்கள் ஒரு நாள் பிரதமராக இருந்தால் சமையலுக்கு பயன்படும் எந்த பொருளின் விலையை குறைப்பீர்கள்?

நாம் அரிசி உண்ணும் மக்கள் முதலில் அரிசி விலையை பாதிக்கும் பாதியாக குறைப்பேன். பிறகு, வட இந்தியாவை பகைத்துக் கொள்ள முடியுமா? ஸோ, கோதுமை விலையையும் அதே நாளில் குறைப்பேன். சொல்லுங்கள் எப்போது பதவி ஏற்க வேண்டும்!!??

செயற்கை நுண்ணறிவைப் பார்த்து பயப்படுகிறீர்களா????

பயப்படுற மாதிரி AI இருக்காது. AI வந்தால் என் பதில்களை வேண்டாம் என்று சொல்லிவிடுவீர்களோ என்று கவலையாக இருக்கிறது!!

20231101195952681.jpeg

ஒரு தீர்ப்பு சொல்லுங்கள் சுஜாதா இலக்கியவாதியா, இல்லையா??

அவர் - எல்லாம்! எழுத்தில் அவர் என் குரு ஆச்சே!!

70களில் சபாக்கள் நாடகம் மிகப் பிரபலம் சென்னை வாசிகளின் பொழுதுபோக்கு என்று கூட சொல்லலாம் இப்போது அதை நாம் மிஸ் பண்ணுகிறோம்இதற்கு என்ன காரணம்?

70களில் சபாக்கள் நிறைய இருந்தன ஏராளமான நாடகங்களை மேடையேற்ற சபாக்களே காரணம். இப்போது எங்கே சபாக்கள்? தவிர விசு ,மௌலி, ஒய் ஜி எம், கிரேசி மோகன் போன்றவர்கள் மேடை மீது சக்கை போடு போட்டார்கள். அது நாடகத்துக்கு ஒரு பொற்காலம். இப்போது எல்லோருமே விதவிதமாக ரிட்டையர்டு.மீண்டும் ஒரு நாடகப் பொற்காலம் வரும் என்று பிரார்த்திப்போம்!

இப்போதைய தமிழ் சினிமாக்களின் பெயர் லியோ மாஸ்டர் ஜெயிலர் பில்டப் என்று வேற்று மொழி படத்தின் பெயரை ஆக்கிரமித்து விட்டது இதை எப்படி பார்க்கிறீர்கள்?

ஒரு circle வரும். எல்லாமே ஆங்கில பெயர்களாக இருப்பதை பார்த்துவிட்டு, அவர்களே சேச்சே!" திஸ் இஸ் டூ மச்" என்று முடிவு கட்டி தமிழ் பெயர்கள் வைப்பார்கள்.பிறகு மறுபடி ஒரு circle. ஆங்கில பெயர்கள் வைப்பார்கள். நாலு பேர் நல்ல தமிழ் பெயர்கள் வைத்து அவை பெரிய ஹிட் ஆனால் உடனே எல்லோரும் அதைப் பின்பற்றுவார்கள். அதான் சினிமா உலகம்!

இலவசங்களை எப்படி பார்க்கிறீர்கள் அது வாக்கு வங்கியா வறுமைக் கோட்டில் இருப்பவருக்கு உதவுகிறதா?

வறுமையாவது, கோடாவது? அரசியல்வாதிகள் கொண்டுவரும் எந்தத் திட்டமும் வாக்கு வங்கிக்கு தான். தேர்தல் என்கிற ஒன்று வருகிறதோ, என்னவோ ஏழைகள் தப்பித்தார்கள்!

தகுதி வாய்ந்தகுடும்பத் தலைவிக்கு ஆயிரம் டாஸ்மாக் இந்த ஒப்பீடு சரியா?

போன பதிலைப் படியுங்கள்!

மின்னம்பலம் துவங்கும் போது சுஜாதாவுக்கு இனி எல்லாம் மின்னிதழ் தான் என்று நினைத்து பின்னாளில் ஏமாந்ததாக சொன்னார். ஆனால் அந்த நிலையில் இருந்து மின் இதழ்கள் தாண்டி வந்திருக்கிறதா?

இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க சுஜாதா இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. எனக்கு மின்னிதழ் பற்றி எல்லாம் அவ்வளவு தெரியாமல் இருக்கும்போது தான் "விகடகவி அனுபவம்" ஏற்பட்டது ஜாலியாகத்தான் இருக்கிறது!

ஊடகங்களின் அசுர வளர்ச்சி போல ஊடகவியலாளர்களின் வளர்ச்சி இல்லையே ஏன்?

நல்ல கேள்வி! எனக்கே சற்று தூக்கிவாரிப் போட்டது! ஏன் இல்லை? பேட்டிகள் எடுத்து போடலாமே!

நடிகைகள் அரசியல் பேசினால் குற்றமா? ஏன் அவர்களைப் பார்த்து ஏளனம்?? ஒரே ஒரு ஜெயலலிதா தவிர யாரும் மிளிரவில்லையே??

உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. நடிகையாகவே ஒருவரை பார்ப்பது ஒரு கட்டம் வரை, அதற்குப் பிறகு தலைவியாக பார்ப்பது ஒரு கட்டம். இந்த இரண்டாவது கட்டத்திற்குள் போவது அவ்வளவு சுலபமில்லை!

நடிகைகளின் அந்தரங்கங்கள் மட்டும் ஏன் விமர்சிக்கப்படுகின்றன?? நடிகர்கள் அடுத்தவர் மனைவியை கவர்ந்தாலும் சமூகம் கண்டு கொள்வதில்லையே ஏன்?

இதெல்லாம் எங்கே நடக்கிறது? எனக்குப் புரியவில்லை. நீங்கள் சொல்கிற இரண்டுமே நடந்தாலும் மக்கள் கண்டு கொள்வது குறைந்துவிட்டது என்பதுதான் என் கருத்து. நம்ம மக்கள் அமெரிக்கர்களைப் போல மாறிக்கொண்டிருக்கிறார்கள்!

ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் தமிழில் படம் எடுத்தால் அவருடைய ஃபேவரைட் ஹீரோ யாராக இருக்கும்??

அகில உலகத்திலும் ஸ்பீடு படங்கள் ஓடும்போது எதற்கு அவர் தமிழில் படம் எடுக்கப் போகிறார்? அப்படியே எடுத்தாலும் அதில் புது முகம் தான் ஹீரோவாக இருப்பார். ( நைசா தப்பிச்சுட்டேனா?)

ஆன்மீக பயண கட்டுரைகள் எழுத முடியவில்லையே என்று வருந்தி யிருக்கிறீர்களா?

சத்தியமாக இல்லை. ஆனால் நான் ஒரு ஜர்னலிஸ்ட். ஜர்னலிஸ்ட்டால் எதுவும் எழுத முடியும்!.

ஆர் எஸ் மனோகர் நாடகம் பார்த்த அனுபவம் இருக்கிறதா??

நிறைய! படுஜோராக இருக்கும். நீங்கள் கேட்டவுடன் எனக்கு அந்த அனுபவங்கள் நினைவுக்கு வந்து... ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்!!.