
வர்ண தர்மத்தின்மீது சுமத்தப் படும் மற்றொரு குற்றச் சாட்டு பெண்களுக்கு சம உரிமை கொடுக்கப்படவில்லை என்பதாகும் என்று ஆரம்பித்து தொடர்கிறார் நமது சங்கரன்.
இந்தக் குற்றச் சாட்டு இன்றைய எல்லா நாடுகள் மீதும், எல்லாவித சமுதாயங்களின் மீதும், ஏன்! முன்னேற்றமடைந்த நவீன நாடுகள் என்று சொல்லப் படும் நாடுகளின்மீதும் சுமத்தப் படுகிறது. ஆனால் வர்ண தர்மத்தின்மீது இந்தப் பழி மிகவும் ஆக்ரோஷமாகச் சுமத்தப்படுகிறது.
இந்தக் குற்றச் சாட்டை நாம் அடிப்படையிலிருந்து நோக்க வேண்டும்.
மனித உருவத்தில் பல உறுப்புகள் இரட்டைகளாக இருக்கின்றன. இடம் வலம் என்று கண், கை, கால், காது, மூக்குத் துளை என்று வெளியில் நாம் காணும் உறுப்புகள் இரண்டாக இருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று சரிசமம் என்ற நிலை இல்லை. அவற்றில் சிறு சிறு வேறுபாடுகள் இருக்கின்றன. நாம் சுவாசிப்பது மூக்கின் ஒரு துளையில் உள்ளே சென்று மற்றதில் வெளியே வருகிறது. ஆக இவை சமம் என்று சொல்வதா இல்லை உயர்வு தாழ்வு சொல்வதா? இடது கையும் வலதுகையும் ஒரே போல் இருந்தாலும் அவற்றின் திறமைகள் செயல்பாடுகள் மாறுகின்றன. அவற்றில் உயர்வு தாழ்வு சொல்வதா?
மனித இதயம் சிறிது இடப்பக்கமாக இருக்கிறது. உணவு சென்று செரிமானம் தொடங்கும் இரைப்பையும் இடப்புறம் இருக்கிறது. முக்கியமான ஒரு உறுப்பான கல்லீரல் வலப்புறம் இருக்கிறது. நமது மூளையே இருபகுதிகளாக இருக்கிறது. அவற்றின் செயல்பாடுகளும் திறனும் வேறுபட்டு இருக்கிறது. இதற்காக நாம் இவற்றில் உயர்வு தாழ்வு பார்க்கிறோமா என்றால் இல்லவே இல்லை. மாறாக அதுதான் நமது பலம், ஒன்றை ஒன்று தாங்கி சமன் செய்து செயல்படுவதே நமக்கு நல்லது என்று இயற்கையை நாம் புகழ்கிறோம். ஆண் பெண் என்ற இரு பாலாக இயற்கை மனிதனைப் படைத்ததும் இப்படி ஒரு சமன்பாட்டிற்காகத்தான் என்பதை நாம் உணர வேன்டும்.
மனித இனம் என்ற நிலையில் ஆணும் பெண்ணும் சமம்.
அதை சநாதன தர்மம் என்றும் எங்கும் மறுக்கவில்லை.
ஆனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் என்று சில சிறப்புகளை இயற்கை கொடுத்திருக்கும்போது அதை மதித்து அந்தச் சிறப்புகள் குலையாமல் சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டும் என்று சில கோட்பாடுகளைச் சொல்கிறது.
பொதுவாக ஆணுக்கு உடல் வலிமை அதிகமாகவும் பெண்ணுக்கு மென்மை கூடுதலாகவும் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆகவே அவர்களுக்கு அதற்குத் தக்கவாறு தொழில்களும் நடைமுறைகளும் வகுக்கப் பட்டன. அதற்கேற்ற கல்வியியும் பயிற்சிகளும் அளிக்கப் பட்டன. இன்று திறமை சார்ந்த பிரிவு மற்றும் நிபுணத்துவம் (Division of Labour & Specialisation) என்ற பெயரில் மக்கள் பற்பல பிரிவுகளாகப் பிரிக்கப் படுகிறார்கள். மருத்துவம், கல்வி, தொழில் நுட்பம், பொறியியல் என்று பொதுவாக இருந்ததெல்லாம் பற்பல பிரிவுகளாகப் பிரிந்து ஒன்று மற்றதை ஏற்காத அளவுக்கு வளர்ந்திருக்கிறது. அவற்றில் நாம் ஏற்றத் தாழ்வு காண்கிறோமா? என்றால், இல்லை.
அதேபோல, பெண்மை என்பதற்கு இயற்கையால் கொடுக்கப் பட்ட சிறப்புத் திறமைகளை வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும். அந்தத் திறமைகள் ஆண்களுக்குக் கொடுக்கப் படவில்லை என்பது கண்கூடு. இசை, நாட்டியம், ஓவியம், உணவு என்று பலப்பல நுண்கலைகளில் பெண்களின் இயல்பான திறமை போற்றி வளர்க்கப் பட்டது. இன்று கலாசாரம் என்று நாம் சொல்லும் பலவும் அப்படிப் பெண்களால் காப்பாற்றப் பட்டதே.
தவிர, ஒரு குடும்பம் என்ற நிலையிலும் அதன் வரவு செலவுகளையும், அந்தக் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தையும் அதன் இளைய தலைமுறையினரின் நல்லொழுக்கத்தையும் கவனித்து வழிநடத்தும் பொறுப்பும் பெண்களுக்குக் கொடுக்கப் பட்டது. நாகரீகம் தலைக்குமேல் வளர்ந்த இந்த நாளிலும் குழந்தைகள் தாயின் சொல்லுக் கட்டுப்படுவதுபோல தந்தையின் சொல்லுக்குக் கட்டுப் படுவதில்லை.
‘மாத்ருதேவோ பவ’ – தாயைக் கடவுளாக வணங்கு, ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று அன்னையை முன்னிறுத்து ஒழுக்கத்தைக் கற்பித்தது சநாதன தர்மம்.
அந்த விதத்தில் மற்றெந்த கலாசாரமும் சமுதாயமும் பெண்ணைக் கொண்டாடவில்லை என்ற உண்மை உரக்கச் சொல்லப்படுவதில்லை.
ஆண் செய்வதை எல்லாம் பெண்ணாலும் செய்ய முடியும் என்று இக்காலத்தில் அடம்பிடித்து நிரூபிக்கிறார்கள்.
ஆனால் ஒரு பெண் செய்யும் எல்லாவற்றையும் ஆணால் செய்ய முடியாது என்ற சத்தியத்தை மறந்து விடுகிறார்கள். அப்போது பெண்ணால் மட்டுமே முடிந்த – மேலே சொல்லப் பட்ட குடும்பத்தை வழி நடத்துவது என்ற பெரும் பொறுப்பு உட்பட – செயல்களை யார் செய்வார்கள்?. போருக்குச் சென்ற அரசனுக்கு அவன் மனைவி தேரோட்டியதும், தனியாகத் தன் தனயனை வளர்த்தாலும் அவனை அரசனாக்கும் தகுதியோடு வளர்த்தது, பெரும் ஞானியர்க்கும் வேதாந்தத்தை விளக்கியதும் என்று பல சிறப்புச் சம்பவங்கள் நமது புராணங்களில் உண்டு. நாட்டை ஆண்ட ராணிகளும் போர் புரிந்த ராணிகளும் இன்னாட்டில் உண்டு. இவைகள் எடுத்துக் காட்டுகளாக, விதிவிலக்குகளாக, அவசர காலத்தின் தேவைகளாகப் பார்க்கப் பட்டன.
போன பகுதியில் பார்த்ததுபோல கல்வி என்பது அவரவர் வாழ்க்கைக்கு ஏற்றதாக அமைந்தது. அவ்விதத்தில் பெண்களுக்கு அவர்களின் வாழ்வை நல்லவிதமாக அமைத்துக்கொள்ளும் கல்வி கிடைத்தது.
பின்னர் வந்த இரண்டு அயலார் ஆதிக்கங்களும் பெண்களை வீட்டில் அடைத்து வைக்கும் கலாசாரத்திலிருந்து வந்ததால், பாரதப் பெண்களுக்கும் அந்த கொடிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலைக்குக் காரணம் அயலார் ஆட்சியே தவிர சனாதன தர்மம் இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.
சரித்திரத்தைப் புரட்டிப் பார் என்பவர்கள் கடந்த 200 ஆண்டுகளைப் பார்க்கிறார்கள். அது அயலாரின் ஆட்சி. ஆயிரம் ஆன்டுகளுக்கு முன்னால் சென்று பார்த்தால், உண்மையான பாரதத்தின் சரித்திரத்தைப் பார்த்தால் அதில் பெண் அடக்குமுறை என்ற வழக்கமே இல்லை என்பதை அறியலாம். அதிலும் குறிப்பாகத் தமிழகத்தின் புலவர்களும், அரசிகளும் இங்கே தர்மத்தின் ஆட்சியில் பெண்கள் பெருமையோடு வாழ்ந்ததைச் சொல்வர்.
இன்று பொதுக்கல்வி என்று வந்தபின் எல்லாருக்குமே அதே கல்வி. ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு இல்லை. ஆனால் எல்லாரும் ஏற்கும் கலாசார சீர்குலைவிற்கும் சமுதாயக் குழப்பங்களுக்கும் ஒழுக்கக் கேட்டிற்கும் பெண்களையும் ஆண்களாக மாற்றியதே என்பதில் ஐயமில்லை. ஒரு கார் மிக வேகமாக ஓடவேண்டுமானால் அதில் மற்றெல்லம் சரியாக இருந்தால் போதாது. நினைத்த நேரத்தில் அதை நிறுத்தும் ப்ரேக் சரியாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அந்த கார் மெதுவாகச் செல்லும் அல்லது தறிகெட்டு ஓடும். இரண்டு நிலையையும் நாம் இன்று உலகில் காண்கிறோம்.
எல்லாவற்றையும் பணத்தில் எடைபோடும் பழக்கம் பெண்மையயும் அந்த விதத்தில் எடைபோட்டு அவளுக்கு பண சுதந்திரத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டதுதான் காலத்தின் கோலம்!
தொடரும்......

Leave a comment
Upload