தொடர்கள்
தொடர்கள்
சந்திப்போம் , பிரிவோம் -3 அமெரிக்க அனுபவங்கள் - பொன் ஐஸ்வர்யா

20240303105413236.jpg

நாசா (NASA) நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்டு ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன், வெற்றிகரமான அமெரிக்க விண்வெளித் திட்டங்களின் செயற்கூடம்.

அமெரிக்கா வரை வந்து விட்டு, ஒரு எட்டு நாசாவைப் பார்க்காமல் போனால் எப்படி?

டாம்பாவிலிருந்து அர்லாண்டோ போய் வலது புறம் திரும்பினால் நாற்பத்தைந்தாவது மைலில் மெரிட் தீவில் அமைந்துள்ள கேப் கென்வரல் (Cape Canaveral) ஜான் எஃப் கென்னடி விண்வெளி மையம், நம்மை வரவேற்கிறது. காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை பார்வையாளர் அனுமதி உண்டு. கார் பார்க்கிங் கட்டணமாக பத்து டாலரை வாங்கிக் கொண்டு விசிட்டர் காம்ப்ளக்ஸ் கேட்டை திறந்து விடுகிறார்கள்.

20240303105517333.jpg

நுழைவாயிலில் நம்மை வரவேற்பது அடுத்து புறப்பட இருக்கும் விண்கலத்தின் டிஜிட்டல் “கவுண்ட் டவுண்” கடிகாரம். அதன் அருகில் பிரமாண்டமான 3D திரையில் இடைவிடாது ஒளிர்ந்தோடும் நாசா திட்டப் படங்கள். நுழைவுக் கட்டணமாக தலைக்கு எழுபத்தைந்து டாலர். ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு இலவசம். மூத்தக் குடிமக்களுக்கு (55 வயதுக்கு மேல்) ஐந்து டாலர் சலுகை. தொண்ணூறு டாலர் டிக்கட் வாங்கினால், சாவகாசமாய் ஆறு மாதத்திற்குள் இரண்டு முறை வந்து போகலாம். நூற்று ஐம்பது டாலர் பாஸ் ஒரு வருடம் முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம், சுற்றலாம்.

20240303105558957.jpg

பாதுகாப்புச் சோதனைகள் முடிந்து நுழைந்ததும் முகப்பிலேயே “ராக்கெட் கார்டன்”. இந்த ராக்கெட் தோட்டத்தில் இதுவரை விண்வெளிக்கு ஏவிய சின்னதும் பெரியதுமாய் பல “லைஃப் சைஸ்” மாதிரிகள் விதைக்கப் பட்டுள்ளன, இல்லை இல்லை நிறுத்தப் பட்டுள்ளன. மேலும் இங்கு ராக்கெட்டுகள் செங்குத்தாய் விண்ணில் பாயும் பொழுது, உச்சியில் விண்வெளி வீரர்கள் அமர்ந்து பயணிக்கும் இருக்கைகளைப் பார்க்கலாம். குழந்தைகள், பெரியவர்கள் விண்வெளி அந்த இருக்கைகளில் படியேறி அமர்ந்து படம் எடுத்துக்கொள்ளலாம்.

அன்றைய தினத்தின் சிறப்பம்சங்களை அட்டவணையாக பல மொழிகளில் அச்சிட்டு ஆங்கங்கே வைத்திருக்கின்றார்கள். நமக்கு ஆர்வம் உள்ள தகவல்களை தேர்ந்தெடுத்து நேரத்திற்கேற்ப பார்க்கலாம்.

லகின் பல நிபுணத்துவ விண்வெளி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய 2021 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்திய ஜே.டபிள்யூ.எஸ்.டி (James Webb Space Telescope) விண்வெளித் தொலைநோக்கி பற்றிய விரிவான விளக்கமும், அதிலிருந்து பெறப்பட்ட பிரமிக்க வைக்கும் வண்ண வண்ண படங்களையும் IMAX® தியேட்டரில் “டீப் ஸ்கை” என்று நாற்பது நிமிட குறும்படமாகக் திரையிடுகிறார்கள். பூமியிலிருந்து சுமார் பதினைந்து லட்சம் கிலோமீட்டர் தொலைவில் மிதந்து கொண்டிருக்கும் இந்த JWS மெகா டெலஸ்கோப் சூரிய மண்டலத்தைத் தாண்டி, மில்கிவேயைக் கடந்து பல நூறு ஒளியாண்டுகள் தூரத்திற்கு அப்பால் இருக்கும் எண்ணிலடங்காத விண்மீன்களையும் கோள்களையும் கண்டறிந்து துல்லியமான தகவல்களைத் தந்து கொண்டிருக்கின்றது.

இதைப் பார்க்கும் போது, எங்கோ வேற்று கிரகத்தில் வாழும் நம்மைப் போன்ற மனிதர்களைக் தேடிப் பிடித்து கால்ம் நம்மோடு கைகுலுக்கி உறவாட வைத்துவிடும் என்ற நம்பிக்கை வலுப்பெறுகிறது.

20240303105723252.jpg

டுத்து மிக முக்கியமான அப்பலோ நிலவு பயணப் பகுதி. கென்னடி விண்வெளி மையம் வரும் பார்வையாளர்கள் சுற்றிப் பார்க்க இலவச சொகுசு பஸ் டூர் வசதி உள்ளது. இந்த பேருந்துகள், விசிட்டர் காம்ப்ளக்ஸில் இருந்து ஐந்தாறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள அப்பலோ நிலவு பயணக் காம்ப்ளெக்ஸ்க்கு அழைத்துச் செல்கின்றன.

வழியில் பிரமாண்டமாய் நிற்கிறது வெஹிக்கில் அசம்ளி பில்டிங்(Vehicle Assembly Building). இந்த ஐகானிக் கட்டிடத்தை நாசா ராக்கெட் ஏவும் ஒவ்வொரு முறையும் தொலைக்காட்சியில் பார்த்திருந்தாலும் நேரில் பார்பது மிகவும் பரவசமான அனுபவம். இதன் பல்வேறு சிறப்பம்சங்களை நெடுக பேருந்தில் ஆடியோ விசுவலாக விளக்கிக் கொண்டே வருகிறார்கள்.

2024030310592485.jpg

ல்லா விதமான ராக்கெட்டுகள் விண்கலங்கள் இந்த கட்டிடத்தின் உள்ளேதான் கோர்த்து நிறுத்தப் படுகின்றன. க்ராவ்லர் (Crawler) எனப்படும் மணிக்கு ஒரு மைல் வேகத்தில் ஊர்ந்து செல்லும் ஊர்தியில், கோர்க்கப்பட்ட ராக்கெட்டுகள், கடற்கரையை ஒட்டி நெடுக அமைந்துள்ள லான்ச் பேடுகளுக்கு எடுத்துச் செல்லப் படுகின்றனவாம். நம் கண் முன்னே சில க்ராவ்லர்கள் ஓய்வாக நின்று கொண்டிருந்தன.

ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படும் நாட்களில் பார்வையாளர்கள் மூன்று மைல் தூரம் தள்ளி கேலரியில் அமர்ந்து ராக்கெட் புறப்பாட்டைப் பார்க்கலாம்.

ருகிலுள்ள நீண்ட ஏழடுக்கு மாடிக் கட்டிடத்தில்தான் மிஷன் டேட்டா கன்ட்ரோல் சென்டர் இயங்குகின்றதாம். இங்கு இருப்பவர்களின் விரலசைவில்தான் எங்கெங்கோ அண்டவெளியில் மிதக்கும் விண்கலங்கள் ஆடுகின்றன என்று உணரும் போது மனித குலத்தின் பெருமிதம் நம்மையும் அறியாமல் ஒட்டிக் கொள்கிறது.

சுவாரசியமான அப்பலோ நிலவுப்பயணங்கள் பற்றி தொடர்ந்து பேசுவோம்….