
குறள் 601
குடிஎன்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும்
மாசுஊர மாய்ந்து கெடும்
தான் பிறந்த நல்ல குடி ஆகிய அணையா விளக்கானது சோம்பல் என்னும் இருட்டு வர அணைந்து போகும்.
இந்த திருக்குறளை குழந்தைகளுக்கு எடுத்து சொல்வது அவசியம், வேலைகளை தள்ளிப் போடுதல், சோம்பல் போன்ற விஷயங்களால் குழந்தைகள் தவிக்கின்றனர். இதனை பார்க்கும் பெற்றோர்கள் அவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்பதை பார்ப்போம்.
தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பிக்கும் தருணம் இது. பெற்றோர்கள் முன்கூட்டியே பல திட்டங்கள், ஏற்பாடுகள் செய்திருப்பீர்கள். திட்டங்களை பட்டியலிடுங்கள். அதில் சுமார் 7 திட்டங்கள் இருக்கும் என்றால் அதில் பொருள் செலவு அதிகமாகும் திட்டங்கள் எத்தனை, நேரம் செலவு அதிகமாகும் திட்டங்கள் எத்தனை என்று பிரித்து எழுதுங்கள்.
அவற்றில் உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்க்கைக்கோ, படிப்பேற்கோ தேவைப்படுவது ஏதேனும் உள்ளதா என்று பட்டியலிடுங்கள்.
மகிழ்ச்சி சுற்றுலா, உறவினர் வீட்டு விசேஷம் இவை அனைத்தும் அவசியம், இவற்றில் படிப்பினை ஏதும் புகுத்த முடியாது. இவற்றை தவிர்த்து நீங்கள் ஏற்பாடு செய்த மற்ற வேறு விடுமுறை நாள் திட்டங்களில் குழந்தைகளுக்கான உபயோகமுள்ள, அவர்களை ஒழுங்கு படுத்துவதற்கான திட்டம் வைத்திருக்கிறீர்களா என்று பாருங்கள்.
நீங்கள் எழுதி தயார் செய்த அந்த அட்டவணையில். நாள், நேரம், நிகழ்வு குறித்து எழுதும் பொறுப்பை உங்கள் குழந்தைகளிடம் ஒப்படைக்க வேண்டும். உங்களுக்கு அலுவலக வேலை சுமை இருக்கும் அதற்காக இதை அவர்களிடம் கொடுத்து கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல பொறுமை இல்லாமல் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு இவற்றை இதுவரை செய்து வந்து இருக்கலாம் ஆனால், குழந்தைகளிடம் இத்தகைய பொறுப்புக்களை கொடுக்கும் பொழுது அவர்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி ஏற்படுவதை நீங்கள் உணர்வீர்கள்.
குழந்தைகளிடம் பொறுப்பு கொடுப்பது என்றால் என்ன?
நீங்கள் train ticket அல்லது flight ticket book செய்திருந்தால் கூட அவர்களுக்கு அதை பற்றிய ஒரு அறிவை கற்றுக் கொடுங்கள், டிக்கெட் விலை என்ன, எப்படி book செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு தெரிய வேண்டும். பிறகு போகும் ஊரில் நீங்கள் தங்கும் இடம் எது, அதன் ஒரு நாள் வாடகை எவ்வளவு, அங்கு உணவு உண்ண எங்கு செல்லலாம், உள்ளூரில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடம் செல்ல வண்டி வசதிகள் இருக்கிறதா? அல்லது நாம் புக் செய்யும் வண்டி வாடகை என்ன? இப்படி அவர்கள் முன்னிலையில் நீங்கள் கலந்து பேச வேண்டும். எந்த இடத்தில் செலவுகளை குறைக்க முடியும் என்று அவர்களுடன் சேர்ந்து திட்டமிடுங்கள். நீங்கள் சுற்றிப் பார்க்கும் இடம் கூட அவர்களை கேட்டு தேர்ந்தெடுத்து அந்த இடத்தை பற்றிய விவரங்கள் முடிந்தால் அந்த ஊர் பற்றிய வரலாற்றை அறிந்து கொள்ள செய்து அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம் அவர்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி வருவதுடன் அவர்கள் ஆர்வம் காட்ட ஒரு காரணமாக இருக்கும்.
பள்ளி முடிந்து விட்டது பரீட்சையின்போது அதிகம் படித்து விட்டோம், இப்போது இவை அனைத்தையும் தேட முடியாது என்று சோம்பல் உணர்வை குழந்தைகள் காட்டுவார்கள். இதற்கு அவர்களிடம் உற்சாகமாக நீங்களும் தேடுதலில் ஈடுபட வேண்டும், எந்த இடத்திற்கு செல்கிறோம் என்று தெளிவாக கலந்து பேசிய பின் அவற்றை பற்றி தெளிவான விவரங்களுடன் அவர்கள் அந்த இடங்களுக்கு செல்லும்போது தனக்கு இந்த இடத்தை பற்றி இத்தனை விஷயங்கள் தெரியும் என்று ஒரு தன்னம்பிக்கை பிறக்கும்.
எத்தனை நாட்களுக்கு செல்கிறீர்கள் என்பதை ஒரு சிறிய புத்தகம் ஒன்றில் நாள், நேரம், இடங்கள், கொண்டு செல்லும் பொருட்கள், அங்கிருந்து வாங்க வேண்டிய பொருட்கள் போன்றவற்றை பட்டியலிட்டு எழுதி பிறகு அவர்களை அந்த புத்தகத்தை வைத்துக்கொள்ள சொல்லுங்கள் எத்தனை நாள் ட்ரிப் என்பதன் விவரம் செலவு கணக்கு, வாங்கிய பொருட்கள் உணவு பில்கள் அனைத்தும் அவர்களிடம் கொடுத்து அதை பொறுப்பாக வைத்துக்கொள்ள சொல்லுங்கள், இப்படி செய்வதன் மூலம் அவர்களின் கவனம் சிதறாமல் பொறுப்புடன் நடந்து கொள்ள ஊக்கத்தை தரும்.
இப்படி அவர்களிடம் பொறுப்புக்களை கொடுக்கும்போது அவர்கள் ஏதேனும் தவறு செய்தாலோ தவறான விஷயத்தை சொன்னாலும் உடனே கோபப்படக்கூடாது, சரியாக கவனித்து சொல் என்று பொறுமையாக சொல்லுங்கள், அவர்கள் தவறு செய்வதை சுட்டிக்காட்டுவது நம் நோக்கமல்ல அவர்களை வாழ்க்கையில் பொறுப்புடனும் தெளிவுடன் கவனத்துடனும் இருக்க இது ஒரு பயிற்சி காலம் என்று தெளிவான ஒரு சிந்தனை பெற்றோர்களுக்கு வேண்டும்.
திரும்பி ஊருக்கு வந்ததும் அந்த மூன்று அல்லது நான்கு நாட்களில் நடந்தவற்றை குறிப்பு போல் எழுத சொல்லலாம் அல்லது பேசி ரெக்கார்ட் செய்ய சொல்லுங்கள் நீங்கள் அந்த ஊர்களில் எடுத்து கொண்ட புகைப்படங்களை சேர்த்து ஆடியோவையும் சேர்த்து ஒரு காணொளியாக போட்டு உங்கள் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நட்பு வட்டத்திற்கு பகிரலாம். இப்படி செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை பெருகும், ஊக்கம் கொள்வர், சோம்பல் இன்றி இவற்றில் கவனம் வைப்பார்கள் பேசும் திறன், எழுதும் திறன், சிந்திக்கும் திறன் அதிகரிக்கும்.
“ குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடங்களில்” தான் மதிப்புக் கூடுகிறது. நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் அவர்களுக்கு ஒரு சிறந்த ஊக்க மருந்து, நான் இத்தனை லட்சம் செலவு செய்தேன். இத்தனை நாட்கள் வெளியூர் சுற்றுலா கூட்டி சென்றேன். அங்கு வந்து கூட மொபைல் போன், கேம்ஸ் மட்டும் தான் விளையாடினார்கள் என்று அவர்களை குறை கூறுவதை தவிர்த்து இப்படியான யுக்திகளை கையாண்டு அவர்களின் திறமையை வெளிக் கொண்டு வர பெற்றோர்கள் முயற்சி செய்வது நல்லது.
தொடர்ந்து பேசுவோம்………..

Leave a comment
Upload