
நீங்கள் எந்த ஆடையையும்
உடுத்திக்கொள்ளலாம்,
உடன் ஒரு ஜோடி அழகான
‘ஷூ’க்களை அணிந்திருக்கும்போது....
-டெய்லர் மாம்சன் (அமெரிக்க நடிகை, பாடகி)
நவ நாகரிக யுகத்தில் ஆடைகளைப் போலவே ஒரு முக்கியமான அம்சமாகக் கருதப்படுவது பாதுகை, சப்பாத்து என்றெல்லாம் அழைக்கப்படும் ஷூ (Shoe).
ஒரு மனிதர் உங்களைச் சந்திக்கும்போது அவர் முதலில் உற்றுநோக்கும் அங்கம் உங்களது ‘ஷூ’க்கள் என்று கூறி ‘ஷூ’க்களின் முக்கியத்துவத்தையும் அதனைச் சரியான முறையில் பராமரித்து அணிவதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துகின்றனர் Personality Development பயிற்றுநர்கள்.
உலகளவில், 2020 இல் சுமார் 360பில்லியன் டாலர் கொண்ட இந்தக் காலணிகளின் சந்தை மதிப்பு 2024இல் 412 பில்லியன் டாலர் அளவுக்கு உயரும் என்று கணித்துள்ளனர் புள்ளியியலாளர்கள். 2018ஆம் ஆண்டுக் கணக்கீட்டின்படி ஓராண்டுக்கு 24.2 பில்லியன் ஷூக்கள் தயாரிக்கப்படுகின்றன என்கின்றன புள்ளிவிவரங்கள். இத்தனை பெரிய சந்தை மதிப்புள்ள ஷுக்கள் எதிர்காலத்தில் கூடுதல் தொழில்நுட்ப வசதிகளுடன் ‘Smart Shoe’க்களாக உருவெடுத்து இன்னும் பெருமதிப்புகொண்டவையாக வலம் வரப்போகின்றன என்பதில் ஐயமில்லை.
இப்படி, புறத்தோற்ற மதிப்பீட்டில் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஷூக்களுக்கும் நம் தமிழுக்கும் என்ன தொடர்பு என்பது பின்வரும் பெரும்பாணாற்றுப்படைப் பாடலைப் படிக்கும்போது விளங்கும்.
எல்லிடைக் கழியுநர்க்கு ஏமம் ஆக,
மலையவும் கடலவும் மாண்பயம் தரூஉம்,
அரும்பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள்
அடிபுதை அரணம் எய்தி படம் புக்குப்
பொரு கணை தொலைச்சிய புண்தீர் மார்பின்… (பெ.ஆ: வரிகள் 66 – 70)
வெயில் நேரத்தில் பயணம் செய்யும் வணிகர்களைப் பற்றிய விவரங்களைக் கூறுகின்றன இந்தப் பெரும்பாணாற்றுப்படை வரிகள்.
மலையிலிருந்தும் கடலிலிருந்தும் கிடைக்கக்கூடிய அரும்பொருள்களைக் கழுதை மீது ஏற்றிக்கொண்டு சென்று அவற்றைக்கொடுத்துத் தமக்கும் தம் சுற்றத்தினர்க்கும் வேண்டிய பொருள்களைப் பெறும் வணிகர்களின் ஆடை பற்றியும், பாதுகாப்புக்காக வைத்திருந்த வாள் பற்றியும், அவர்கள் மார்பில் கொண்டிருந்த அம்பு பட்ட புண்களின் வடுக்கள் பற்றியும் என அவ்வணிகர்களைப் பற்றிக்கூறும் இப்பாடலில் ‘நோன் தாள் அடிபுதை அரணம் எய்தி’ என்னும் வரிகள் ‘வலிமையான கால்களில் தங்கள் பாதங்களை மறைக்கக்கூடிய பாதுகாப்புக் காலணிகளை அணிந்துசென்றனர்’ என்று பொருள்படுகின்றன. பாதங்களை மறைக்கக்கூடிய பாதுகாப்புக் காலணி என்றால் வேறொன்றுமில்லை Safety Shoeக்கள்தாம். ஆக, Safety Shoe-வை “அடிபுதை அரணம் “ என்கின்றார் பெரும்பாணாற்றுப்படை ஆசிரியரான கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்பது விளங்குகிறது.
இதனோடு, பின்வரும் பரிபாடல் வரிகளில் நமக்கு இன்னொரு வியப்பான தகவலும் காத்திருக்கிறது.
புனல்மண்டி ஆடல் புரிவான் சனமண்டித்
தாளித நொய்ந்நூற் சரணத்தர் மேகலை
ஏணிப் படுகால் இறுகிறுகத் தாளிடீஇ.. (பரிபாடல் எண்: 10, வரிகள்: 9-11)
வைகையில் புதுப்புனல் (புதிய நீர்) வருகையை அறிந்த மதுரை நகரத்து மக்கள் எப்படியெல்லம் அதைக் கொண்டாடத் தயாராகினர் என்று போகிறது இந்தப் பாடல். இதில் குறிப்பாகத் ‘தாளித நொய்ந்நூற் சரணத்தர்’ என்னும் வரிகளின் பொருள் என்னவென்றால் ‘தாளுக்கு இதம் தரும் மெல்லிய நூலாலான காலணிகளை அணிந்தவர்கள்’ என்பதாகும். தாள் என்றால் கால்.

காலுக்கு இதம் தரக்கூடிய மெல்லிய நூலாலான காலணி என்றால் தற்போது நாம் பயன்படுத்தும் காலுறை – சாக்ஸ் அல்லவா!. அப்போதே சாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர் என்றும், பின்னல் தொழில்நுட்பம் வழக்கில் இருந்துள்ளது என்றும் நாம் இதன் மூலம் அறிகிறோம்.
புதுப்புனல் என்பது கடவுள் போல என்று கருதிய காரணத்தாலோ என்னவோ செருப்பு அணியாமல், காலுறை மட்டுமே அணிந்து புதுப்புனலை வரவேற்றிருக்கிறார்கள் அன்றைய மதுரை நகரத்து மக்கள்.
அடிபுதை அரணம் - பாதுகாப்புக் காலணி –( Safety Shoe)
தாளித நொய்ந்நூல் - காலுறை – (Socks)
சுமார் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே Safety Shoe-க்களையும் Socks-களையும் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்ற தகவல்களை நமக்கு அறியத் தந்த கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்கும், கரும்பிள்ளைப் பூதனார்க்கும் ஒரு தமிழ்முத்தம் தந்தோம்.
அவர்களுக்கும் நமக்கும் எப்போதும் ஒரு பாதுகாப்பு அணியாய் விளங்கும் நம் தமிழுக்கு இது மூன்றாவது முத்தம்.
தொடரும்.

Leave a comment
Upload