சென்னையின் தொன்மையான பெயர் புலியூர் கோட்டம்: ஊர்ஜிதம் செய்யும் திருநீர்மலை சோழர் கல்வெட்டுகள்

சென்னையின் தொன்மையான பெயர் புலியூர் கோட்டம் என ஊர்ஜிதம் செய்யும் திருநீர்மலை சோழர் கல்வெட்டுகள் பற்றி இந்த வாரமும் பார்க்கலாம்.
வீரராசேந்திரன் (மூன்றாம் குலோத்துங்கன்) ஆட்சி ஆண்டு 6; கி. பி. 1183, தொடர் எண் : 730/2017 , இ.க.ஆ. அறிக்கை 552/1912, கிரந்தங் கலந்த தமிழ் கல்வெட்டு படி, திருநீர்மலை நாயனார் நீர்வண்ணன் சன்னதியில் சந்தி விளக்கு ஒன்று வைப்பதற்கு 'கண்ட கோபாலன் மாடை' ஒன்றுத் தானமளித்துள்ளான். இக்கல்வெட்டு நந்தம்பாக்கம் பற்றியும் குறிப்பிடுகிறது. திருநீர்மலை நாயனார் நீர்வண்ணன் கோயிலில் நரசிம்மர் சன்னதி தெற்குச் சுவரில் இந்த கல்வெட்டு உள்ளது.
திரிபுவன வீராஜேந்திரன் (மூன்றாம் குலோத்துங்கன்) வுடைய இன்னொரு கல்வெட்டு (கிரந்தங் கலந்த தமிழ்) வரலாற்று ஆண்டு : கி.பி. 1190, தொடர் எண் : 73/2017,
இ.க.ஆ. அறிக்கை 540/1912, திருநீர்மலை நாயனார் நீர்வண்ணன் கோயிலில் தெற்குச் சுவரில் இக்கல்வெட்டு உள்ளது.
குறிப்புரை:
ஆமூர் கோட்டத்து புலிப்பாக்கம் எனும் சீலசிந்தாமணிச் சதுர்வேதி மங்கலத்தைச் சார்ந்த வடுகனாதன் மாரிப்பிள்ளை என்கிற அருமாதவன் என்பவன் திருநீர்மலை எம்பெருமானுக்குச் சந்தி விளக்கு வைக்க ஒரு மாடைப் பொன் அளித்துள்ளான். இக்கோயிலைச் சார்ந்த நைமிசை திருநீர்மலை நம்பி என்கிற பிரான் கோவிந்த பட்டன் என்பான் ஒரு மாடையைப் பெற்றுக்கொண்டு விளக்கெரிப்பதாகச் சம்மதித்துள்ளான்.
மூன்றாம் குலோத்துங்கன், வுடைய இன்னொரு கல்வெட்டு, ஆட்சி ஆண்டு 12, கி. பி. 1190, கிரந்தங் கலந்த தமிழ், நீர்வண்ணர் கோயில் வடக்குச் சுவரில் உள்ளது.
குறிப்புரை:
ஐயங்கொண்டசோழ மண்டலத்து புலியூர் கோட்ட சுரத்தூர் நாட்டு திருநீர்மலை ஊரிலுள்ள திருநீர்மலை நாயனார், சிங்கப்பெருமாள், நாயனார் நீர்வண்ணன் ஆகியோருக்கு திருபுதியிதுக்கு அமுதுபடி, சாத்துபடி போன்றவற்றிற்காக ஏற்றுக்காட்டுக் கோட்டத்து தியாகவல்லி வளநாட்டு கண்ணனூர் ஊரில் உள்ள ஐந்தரை வேலி நிலத்தினை மூலதனமாகக் கொண்டு நடத்திடுவதற்கு திரையனூர் என்கிற குலோத்துங்கசோழச் சதுர்வேதிமங்கலத்து மகாசபையார் இந்நிலத்தினைத் திருவிடையாட்டமாக அளித்துள்ளனர்.
இணைப்பு : கல்வெட்டுகள்:
நன்றி : த. நா. அ. தொல்லியல் துறை (கல்வெட்டு ஆதாரங்கள்)
தொடரும்

Leave a comment
Upload