தொடர்கள்
கற்பனை
காதல் கால[ய]ங்கள் 2 (அப்பாவுடன் ஒரு கற்பனை கலந்துரையாடல்) - நா பா மீரா

9) நான்‌: சந்தர்ப்ப சூழ்நிலையால்‌ காதலித்த நகுணனைத்‌ தவிர்த்து வேறு ஒருவரை மணக்க நேர்ந்த துளசியை விட, ஆரம்பத்தில்‌ கோபம்‌ கொண்டாலும்‌ பின்னால்‌ தன்னை நாடி வரும்‌ துளசிக்கு வாழ்வியல்‌ யதார்த்தத்தை உணர்த்தும்‌ சுகுணனின்‌ உருக்கமான, நெகிழ்ச்சியான வாய்மொழிகள்‌ இவற்றைத்‌ தாண்டி துளசி கதாபாத்திரத்தை உங்களுரையில்‌ உயர்த்திக்‌ கூறியிருக்கிறீர்களே?

அப்பா: ஆணுக்குப்‌ பெண்‌ சமம்‌ என்ற போர்வையில்‌, பல பெண்களும்‌ நெறி பிறழ்ந்த வாழ்க்கைப்‌ பாதையை நோக்கிச்‌ செல்லும்‌, தற்சமய

நவீன காலப்‌ பெண்ணியத்தைப்‌ பற்றி என்‌ கதாநாயகி துளசியின்‌ ஒழுக்கத்தைக்‌ குறைத்து மதிப்பிடுகிறாயோ என்று தோன்றுகிறது மகளே. ஒன்றைப்‌ புரிந்து கொள்‌, 'துளசி சுகுணன்‌ மீது கொண்ட காதல்‌

தன்னிச்சையானதல்ல, பத்திரிகையாளனான அவன்‌ கதை மற்றும்‌ கவிதைகளின்பால்‌ ஈர்க்கப்பட்டு அதுவே ஒரு காலகட்டத்தில்‌ காதலாக மாறியது. தன்‌ மனத்தைப்‌ பரிபூரணமாக சுகுணனிடத்தில்‌ சமர்ப்பித்த நிலையில்‌, அவளே எதிர்பாராத வகையில்‌ வேறொருவருடன்‌ திருமணம்‌ நடந்து விடுகிறது. சுகுணன்‌, தன்‌ உள்ளம்‌ கொள்ளை கொண்டதற்குக்‌ காரணமான படைப்புத்‌ தொழிலில்‌ இருந்து வறுமை காரணமாக விலகி விடக்‌ கூடாது என்ற தவிப்புதான்‌, அவன்‌ தன்மானம்‌ மற்றும்‌ பிடிவாதக்‌ கொள்கைகளை உணர்ந்து, அவனுக்குத்‌ தெரியாமலேயே 'டைம்ஸ்‌' பத்திரிக்கை வெளிவர அவள்‌ செய்த பண உதவிகள்‌. இன்னும்‌ தெளிவான கருத்தைப்‌ பதிய விரும்புகிறேன்‌ மீரா, பவித்திரமான காதலில்‌, ஒழுக்கம்‌ பிறழ்ந்த விகாரம்‌ இருக்க முடியாது,

விகாரமான காதல்‌ பவித்திரமாகவே முடியாது. மனமும்‌ உடம்பும்‌ ஒருங்கே இணைகிற ஆண்‌ பெண்‌ காதல்‌ அதிர்ஷ்டமானதுதான்‌. ஆனால்‌ அம்மாதிரியான அதிர்ஷ்டம்‌ சுகுணன்‌-துளசி மாதிரிப்‌ பல பேருக்கு வாய்ப்பதேயில்லை. தூய்மையான மனம்‌ என்ற நோக்கில்‌, துளசி மட்டுமல்ல நீ சொன்ன மாதிரி சுகுணனும்‌ ஒழுக்க சீலன்தான்‌, ஒப்புக்‌ கொள்கிறேன்‌.

10) நான்‌: சினிமாத்‌ துறையோடு அதிகத்‌ தொடர்புடைய உங்களது இரண்டு நாவல்களைப்‌ பற்றிச்‌ சில கேள்விகள்‌ கேட்க விரும்புகிறேன்‌? எந்த நாவல்கள்‌ என்று யூகிக்க முடிகிறதா?

அப்பா: நீலநயனங்கள்‌, மற்றும்‌ 'சமுதாய வீதி' சரியாம்மா?

20240230224255432.jpg

11) நான்‌: ஆம்‌ அப்பா. போலி அரிதாரங்கள்‌ பூசிய சினிமாத்‌ துறையில்‌, இங்கிதமும்‌, நடத்தையும்‌ ஒருங்கிணைந்து நீங்கள்‌ வடித்திருக்கும்‌ நந்தகுமார்‌, கெளரி கதாபாத்திரங்கள்‌ அற்புதமானவை மட்டுமல்ல அபூர்வமானவையும்‌ கூட, ஆனாலும்‌, இந்த இடத்தில்‌ ஒரு தர்மசங்கடமான கேள்வியை உங்கள்‌ முன்னிலையில்‌ வைக்கிறேன்‌. காதலில்‌ கட்டுண்ட இவர்கள்‌ இருவரும்‌, ஊரறிய திருமணம்‌ என்று வருகையில்‌ காந்தர்வ விவாகம்‌, களவு மணம்‌ என்ற பாணியில்‌ சிந்திப்பதற்கும்‌, இன்று மிக வேகமாகப்‌ பரவி வரும்‌ Living together கலாசாரத்திற்கும்‌ பெரிய வேற்றுமை தெரியவில்லையே? ஒரு வேளை இது இந்தத்‌ துறை சார்ந்த நாகரீகமோ?

அப்பா: நீ கேள்வியை முன்‌ வைக்கும்‌ நிலையிலிருந்தே உன்‌ மனக்‌ கொந்தளிப்பை என்னால்‌ உணர முடிகிறதம்மா. ஆனால்‌, இன்றைய வாழ்க்கை முறையில்‌ ஆண்‌-பெண்‌ உறவுகள்‌ தன்னிச்சையான போக்கினால்‌ கெட்டுச்‌ சிரழிந்ததில்‌ பிறந்தது தான்‌ இந்த Living together அதாவது வேண்டும்‌ வரைக்கும்‌ விரும்பிய முறையில்‌ வாழலாம்‌, வேண்டாவிட்டால்‌ பிரிந்து அதே வாழ்க்கையை வேறொருவருடன்‌ வாழ்வது என்ற கீழ்த்தனமான செயல்‌. தயவு செய்து என்‌ கதாபாத்திரங்களை இந்தச்‌ சொல்லாடலோடு இணைத்துப்‌ பார்க்காதே என்று வேண்டிக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌. என்‌ நாயகன்‌, நாயகி இருவரும்‌ நல்ல குடும்பப்‌ பிண்ணணி மட்டுமல்ல, மிகவும்‌ தரமான சமூகப்‌ பிண்ணணி கொண்டவர்கள்‌ என்பதைக்‌ கதையின்‌ போக்கிலிருந்து உணர்ந்து கொண்டிருப்பாய்‌. டைரக்டர்‌ நந்தகுமாரின்‌ கலைத்தாகம்‌ தேடிக்‌ கொடுத்த பொக்கிஷம்தான்‌ புதுமுக நடிகை கெளரி. சினிமாத்‌ துறையில்‌ நுழைகிற ஒரு பெண்‌ தன்‌ கற்பையும்‌, ஒழுக்கத்தையும்‌ பாதுகாப்பதே பிரம்மப்பிரயத்தனம்தான்‌. அந்த நிலையில்‌ தன்னை மட்டுமே நம்பி அத்துறையில்‌ காலடி எடுத்து வைத்த அந்தப்பெண்ணை ஒவ்வொரு கட்டத்திலும்‌ பாதுகாப்பாக நடத்திச்‌ சென்று பெயரையும்‌, மாபெரும்‌ புகழையும்‌ வாங்கிக்‌ கொடுத்த நந்தகுமார்‌ என்னும்‌ ஒழுக்க சீலனோடு வாழ்க்கைப்‌ பாதையில்‌ இணைந்து நடந்து செல்வதே கெளரிக்குப்‌ பெருமைதான்‌. இதனால்‌ அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மேளதாளத்தோடு தாலி கட்டி முறைப்படி உண்டாகும்‌ திருமண பந்தம்‌ தவறு என்று நான்‌ சொல்வதாக நீ புரிந்து கொள்ளக்‌ கூடாது. இப்படி நடந்த எத்தனையோ திருமணங்கள்‌ தவறான புரிதல்களால்‌ தோல்வியைத்‌ தழுவியிருக்கின்றன. அதுவும்‌ இன்றைய எல்லைகள்‌ தாண்டிய வரம்பு மீறிய நாகரீகச்‌ சூழலில்‌, கள்ள உறவு முதலிய கசடுகளில்‌ சுழன்று சிக்கித்‌ தவிக்கும்‌ நிலையில்‌, முறையான திருமணம்தான்‌ உயர்ந்தது என்று சொல்வது கூட அரிதாகிவிடும்‌ போலிருக்கிறதே. என்‌ மனதில்‌

படுவதைச்‌ சொல்கிறேன்‌, ஆண்‌, பெண்‌ மணவாழ்வு, எந்த முறையில்‌ அமைகிறது என்பது தாண்டி, அவர்கள்‌ இருவரின்‌ பரஸ்பர ஒற்றுமையிலும்‌, நம்பிக்கையிலும்‌, புரிதலிலும்‌ அமைந்தால்‌ அது அவர்களை நிச்சயம்‌ சரியாக வழி நடத்திச்‌ செல்லும்‌. நந்தகுமார்‌-கெளரி பாத்திர அமைப்பு அதற்கு ஒரு நேர்மறையான எடுத்துக்காட்டு.

12) நான்‌: நன்றி அப்பா, நீங்கள்‌ சொல்வது சரிதான்‌. இன்றைய 'சூழலில்‌ ஒழுக்கம்‌ என்பதே கேள்விக்‌ குறியாகத்தான்‌ இருக்கிறது. நீங்கள்‌ சொல்வதையெல்லாம்‌ பார்த்தால்‌ முத்துக்குமரனை மாதவி நாடியது தவறில்லை போலிருக்கிறதே.

அப்பா: முத்துக்குமரனைச்‌ சந்திப்பதற்கு முன்னே சினிமாத்‌ துறைக்கு வந்தவள்‌ மாதவி. கோபாலின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ அத்துறைக்கு உரிய நீக்குப்‌ போக்கோடு இருந்த மாதவியை முத்துக்குமரனின்‌ ஆண்மை, கம்பீரம்‌, ஆளுமை உணர்வு அவன்‌ பால்‌ ஈர்த்து ஒரு கட்டத்தில்‌ அவன்தான்‌ தனக்கு சகலமும்‌ என்ற நிலைக்கு வருகிறாள்‌. இருந்தாலும்‌ கோபாலின்‌ மீதான அவள்‌ பயத்தையும்‌, தயக்கத்தையும்‌, அச்சமே கீழ்களது ஆச்சாரம்‌ என்று சாடி அவளுக்கு, பெண்ணுக்கும்‌ நளினம்‌ தாண்டிய கம்பீரமும்‌, தைரியமும்‌ இருந்தால்தான்‌ தவறான நோக்கத்தோடு அணுகும்‌ இராவணர்களிடமிருந்து தப்ப முடியும்‌ என்று உணர்த்துகிறான்‌. வாழ்க்கை வீதியின்‌ பல விதமான சூழல்களில்‌ ஒரு தகுதியான ஆணின்‌ துணை ஒவ்வொரு பெண்ணிற்கும்‌ அவசியம்‌ என்று இந்தக்‌ கதையை நான்‌ முடித்திருக்கும்‌ போக்கைத்‌ தாண்டித்‌ தன்னைத்‌ தான்‌ காத்துக்‌ கொள்ள ஆணின்‌ அரவணைப்பைத்‌ தாண்டிய ஒரு பாதுகாப்பு வேலியும்‌ இன்றைய பெண்‌ சமுதாயத்திற்கு அவசியம்‌

என்பதையும்‌ இந்தக்‌ கதை வாயிலாக நான்‌ உணர்த்த விரும்புகிறேன்‌ மீரா.

அடுத்த வாரம் முடியும்.....