
எங்கள் கல்யாணம் முடிந்த அடுத்த வாரம்.
சேலத்தில் வசித்துவந்த என் அக்கா எங்களை விருந்துக்கு அழைத்திருந்தார்கள். அக்கா அங்கு நன்கு அறியப்பட்ட ஆசிரியை. தனது பெரிய நட்பு வட்டத்தையும் அழைத்து, மற்றுமொரு திருமண வரவேற்பு ஒன்றும் நடத்தினார்கள். பாட்டு, வாழ்த்து மடல்கள், பரிசுகள் என அமர்க்களப்பட்டது.
ஒரு மாலை, அங்கு நடைபெற்ற கண்காட்சி மைதானத்திற்கு எங்களை அழைத்துப் போனார்கள். அக்கா வாங்கித்தந்த அழகிய வெளிர்ப்பச்சை சேலையில் எனது புது மனைவி. அக்காவும் இவளும் கண்காட்சி ஸ்டால்களில் புகுந்து புறப்பட்டு ஏதேதோ வாங்கினார்கள்.
ஒரு ஸ்டாலில் ஆறுவகை பேனா நிப்புகள் பல்வேறு வடிவ முனைகளுடன், கூர்மையிலிருந்து 5செமி அகலப்பட்டை வரை இருப்பதைக் கண்டேன். வாங்கவும் செய்தேன். ஸ்டாலிலிருந்து வெளியே வந்த போது, அக்காவும் மாமாவும் கொஞ்ச தூரத்தில் சென்று கொண்டிருந்தார்கள்.
"சீக்கிரமா வா! அவங்களை பிடிச்சுடுவோம்."என்று அவள் கையைப்பிடித்து தரதரவென ஓட்டமும் நடையுமாக இழுத்தபடி முன்னேறினேன். கைவீசி நடந்த இந்தக் காளை, ஒரு மென்மையான கையைப்பற்றிச் செல்லும் சுகானுபவம். சொல்ல மாட்டேன் போங்க... ஆம்பிளைன்னா வெக்கமெல்லாம் இருக்காதா? மேலே நடந்தேனா...
அக்காவை நெருங்கி விட்டேன். எனக்குப் பின்னாலிருந்து 'அண்ணே... அண்ணே!' என்ற குரல் எழுந்தது. அக்காவும் மாமாவும் என்னை நோக்கித் திரும்ப, கூடவே அவர்கள் பக்கத்திலிருந்து திரும்பியது எனது வெளிர்ப்பச்சை சேலை வெண்ணிலா! இவள் எப்போது அங்கே போனாள்?
நான் யார் கையைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்?
வெடுக்கென கையை உதறினேன்.
"சாரி சிஸ்டர்! நீங்களும் என் மனைவி புடவைக்கலர்ல சீலை கட்டியிருக்கீங்களா? தப்பா நினைச்சிட்டேன். ரொம்ப சாரிங்க!"
அந்த திடீர்த்தங்கைக்கும் இவள் வயதுதான் இருக்கும். உயரம்கூட அதே தான். ஆனால் ஆளே வேறேயாச்சே? இப்படித் தலைகால் புரியாமலா அந்தப் பெண்ணை இழுத்து வருவேன்?
அந்தப் பெண் என்னைத் திட்டப் போகிறாள் என்று தயாரான நேரத்தில் அக்காவைப் பார்த்து“வணக்கம் டீச்சர்!" என்றாள்.
"அட நீயாம்மா? இவன் என் தம்பி. இப்போ தான் கல்யாணமாச்சு. இது இவன் மனைவி ஜெயந்தி. உங்கம்மா நல்லாருக்காங்களா?" என்று நிலைமையின் தீவிரத்தை அக்கா சகஜமாக்கினாள்.
என் முகத்தில் அசடுவழிய வழிய நின்றேன். "ஸாரிம்மா"
"பரவால்லேண்ணே! அப்படியே நீங்க ரமா டீச்சர் ஜாடைண்ணே" என்று என்னை மன்னித்து விட்டதை பிரகடனப் படுத்தினாள். "வரேன் டீச்சர்"
"வாம்மா! அம்மாவைக் கேட்டேன்னு சொல்லு!"
எப்போதும் பெரிதாக வாய்விட்டு சிரிக்காத அக்கா, என் தோளை அணைத்துக் கொண்டு குலுங்கிகுலுங்கிச் சிரித்தாள்.
மேலே நடந்தோம் அக்கா மாமா முன்னேயும், நாங்களிருவரும் பின்னேயுமாக.
"சீச்சீ ! லூஸாட்டம் அந்தப் பொண்ணைப் போய்... நீ ஏன் என்னைவிட்டு முன்னாடி போனே?" என்று பழியை மடைமாற்றிப் பார்த்தேன்.
"விடுங்க! இட் ஹாப்பன்ஸ்" என்றாள் கீட்ஸ் பரம்பரை மனைவி.
"ஓ.கே.. இனிமே நீதானா என்று பார்த்து விட்டு கையைப் பிடித்துக் கொள்கிறேன்"
"வேண்டாங்க! இனிமே நானே உங்க கையைப் பிடிச்சுக்கிறேன்”.
அன்று பிடித்த என் கையை இன்னமும் விடவில்லை இவள்.
அடுத்த வாரம் அடுத்த பல்புடன் வர்ட்டா......

Leave a comment
Upload