தொடர்கள்
தொடர்கள்
பெண்களுக்கான சுய அதிகாரம் - 18 - பத்மா அமர்நாத்

20240303150009345.jpg

பெண்கள் சுய நிர்ணயம் பெற்று முன்னேறிச் செல்ல தேவையான அடிப்படை அம்சங்களைப் பற்றி, தொடர்ந்து விகடகவியில் எழுதி வருகிறேன். சென்றக் கட்டுரையின் தொடர்ச்சியாக, தகவல் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை தெரிந்துக் கொள்வோம்.

Communication, தகவல் பரிமாற்றத்தின் முதல் அம்சம், கவனிப்பது.

“பேசும்போது உங்களுக்குத் தெரிந்த ஒன்றைத்தான் மீண்டும் மீண்டும் பேசுகிறீர்கள். ஆனால் கவனிக்கையில், உங்களுக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.” - தலாய் லாமா.

ஒவ்வொரு நபரும் ஒரு தீவு. இன்னொருவரின் பேச்சைக் கேட்கும் திறன் யாருக்கும் இல்லை என்றால், எல்லோரும் தனிமையைத் தான் உணருவார்கள். உங்கள் வலியை யாரிடமும் சொல்ல முடியாது. இன்று நமது சமூகத்தில், உளவியல் நிபுணர்கள் முக்கியமானவர்களாக மாறிவிட இது தான் காரணம். சைக்கோதெரபிஸ்ட்களின் முதல் பணியே, அமைதியாக உட்கார்ந்துக் கேட்பது. அவர்கள் குறுக்கிட்டுப் பேசக்கூடாது. அவர்கள் வாதிட்டாலோ, அவர்கள் திருப்பிப் பேசினாலோ, அவர்கள் உளவியல் நிபுணர்கள் அல்ல.

தகவல் பரிமாற்றத்தில், தகவல் அளிப்பவரும், தகவல் பெறுபவரும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். பேசும்போது குறுக்கிடாமல் அமைதியாய் கேட்பது என்பது, திறமையான மற்றும் சிறந்த குணமாகும். மேலும், கேட்பவர், பேசுபவரை விட மிகவும் பிரியமானவராகவும், காந்தத் தன்மை கொண்டவராகவும் இருப்பர்.

20240303150152124.jpg

பிறர் பேசுவதைக் கவனிப்பது என்பது, எல்லா உரையாடல்களிலும் மிக முக்கியமானது. பேசினால் மட்டுமே போதாது. தகவலைப் பெறுபவர் கவனித்தால் தான், நோக்கம் நிறைவேறும். அதேபோல, அடுத்த நபர் பேச ஆரம்பிக்கும் முன், முதல் பேசிய நபரின் உரையாடலை கவனித்துப் பின் பதிலளிக்க வேண்டும். ஒரு தன்னலமற்ற அணுகுமுறையை உருவாக்க, பேச்சாளரை முதலிடத்தில் வைக்க வேண்டும்.

முதலாவதாக,

'செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்

அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை'

கேட்கும் அதிர்ஷ்டம் உண்மையில் மிகப்பெரியது என்று தெளிவாகப் பறைச்சாற்றுகிறார் திருவள்ளுவர். சிறந்தவற்றைக் கேட்கும் கலையே மிகப் பெரியது திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். பல நேரங்களில் நாமே அவசரப்பட்டு, பாதிக் கேட்பதும், மீதியை நாமே யூகித்துக் கொள்வதும் தான், பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கும்.

அடுத்து, கவனித்துக் கேட்கும்போது, ஒரு நெருக்கம் உணரப்படும். மூன்றாவது, கவனித்தல், கற்றலுக்கு வழிவகுக்கும். கவனிப்பதன் மூலம், உலகத்தைப் புரிந்துக்கொள்ளலாம். கவனிக்கும் பழக்கம் என்பது, கற்றலுக்குச் சமமானது. அதைப் படிப்படியாக வளர்த்துக் கொள்ளவேண்டும். எல்லோரும் நமக்கு ஏதோ ஒன்றைக் கற்றுத்தரும் ஆற்றல் பெற்றவர்கள் தான், என்று நம்புகிறவர்களால் மட்டுமே, கவனிக்க முடியும்.

20240303150256153.jpg

இவ்வளவு சிறப்பம்சங்கள் இருப்பினும், கவனிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?

1.எல்லாம் எனக்குத் தெரியும் என்ற சிந்தனை - நிரப்பப்பட்ட குவளையாக பலர் தன்னை நினைத்துக் கொள்வதுண்டு. அப்படி இருந்தால், எந்த தகவல் சொன்னாலும், அது உள்ளே செல்லாது. வீணாக வழிந்தோடிவிடும்.

2.எதிர்மறை உணர்ச்சி - கேட்கப் போகும் தகவல் அவர்களுக்கு அதிர்ச்சியைத் தரலாம், கேட்க விரும்பாத உண்மையாக இருக்கலாம்.

3.பேச்சில் எளிமையின்மை - ஒருவர் பேசும்போது, எளிமையான சொற்களை உபயோகிக்காவிட்டால், கேட்பவருக்கு கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது.

4.பொறுமையின்மை - நம்முடைய கவனிக்கிற நேரமானது, குறைந்துக் கொண்டே வருகிறது. தினமும் டீவியில் காணும் விவாதங்களே இதற்கு உதாரணம். ஒருவர் பேசும் போது, அவரை முற்றிலுமாக பேசவிடவேண்டும் என்ற எண்ணம் நமக்கு இருக்க வேண்டும்.

முதல் திறனான கவனித்தலைத் தொடர்ந்து, அடுத்து வரப்போவது, body language எனப்படும் உடல் மொழி…

காத்திருங்கள்...