தொடர்கள்
ஆன்மீகம்
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர்- மதுராந்தகம் முனைவர் என்.பத்ரி

20240305160626138.jpg

தேவர்களின் துயர் துடைக்க திரிபுரத்தை எரிக்க சிவபெருமான் புறப்படுகிறார்.
முழுமுதற் கடவுளான விநாயகரின் அருளினைப் பெற்று அவர் புறப்படவில்லை.
எனவே,கோபமுற்ற விநாயகப் பெருமான் போது, ஈசனின் தேரின் அச்சினை முறித்து,தன் கோபத்தைக் காட்டிகிறார்.தேரின் அச்சு இருபாகமாகியது.பின்னர் அவரிடம் முறையான அனுமதி பெற்று, ஈசன் தன் வெற்றிப் பயணத்தை தொடங்கியதாக வரலாறு. அதனால், தேரின் அச்சு+இரு+பாகம் ஆன இடம் அச்சிறுப்பாக்கம் ஆனது.இது ஒரு வரலாறு.

அப்போது தேவர்கள் எல்லாம் அவருக்குத் தேராகவும், தேரில் உள்ள
பொருட்களாகவும் வந்தனர். தாங்கள்தான் சிவபெருமானைத் தாங்கப் போகிறோம் என்ற செருக்குடன் அவர்கள் இருந்தனர். அதனை உணர்ந்த சிவபெருமான், தனது திருவடியை தேரின் மீது வைத்த உடன் அதனைக் கூடத் தாங்க முடியாமல், தேரின் அச்சு முறிந்தது. தேவர்கள் தம் பிழையை உணர்ந்தனர்.அவர்கள் இடர் களையும் கணபதியிடம் வேண்ட, அவர் திருவருளால் தேர் சீரானது.ஈசனின் தேர், அச்சு இற்று,
அதாவது முறிந்து நின்ற இடம் என்பதால் இந்த தலம், ’அச்சு இரு பாகம்’
என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் ’அச்சிறுப்பாக்கம்’ என்றானது என்று மற்றொரு வரலாறு கூறுகிறது.

முன்பொருமுறை இவ்வூர் வழியே சென்ற பாண்டிய மன்னன் ஒருவன்,
காட்டு முல்லைக் கொடிகள் சூழ்ந்த காட்டின் வழியே செல்லும் போது, பொன்நிறமான உடும்பு ஒன்று ஓடுவதைக் கண்டான். அவன் அதை துரத்திச் சென்றான். அது ஓடிச்சென்று சரக்கொன்றை மரத்தின் பொந்து ஒன்றில் புகுந்து கொண்டது. அரசன் ஆணைப்படி ஏவலர்கள் அம்மரத்தை வெட்ட, குருதி வெளிப்பட சிவலிங்கம் வெளிப்பட்டது.

வெட்டிய தழும்புப்பட்ட இறைவனுக்கு, அரசன் "திரிநேத்திரதாரி " என்னும் முனிவரிடம் செல்வத்தைத் தந்து கோயில் கட்டச் செய்தான். அவரும் தன்னையும், மன்னனையும் ஆட்கொண்ட இறைவனுக்கு, இரு கருவறைகள் கொண்ட இக்கோயிலைக் கட்டினார். கோயிலைக் கண்ட மன்னன் இரு சந்நிதிகள் அமைந்திருப்பது கண்டு முனிவரைக் கேட்க, அவர் அரசே! உம்மை ஆட்கொண்டவர்
"உமையாட்சீஸ்வரர் "; எமையாட்கொண்டவர் "ஆட்சீஸ்வரர் " என்று மறுமொழி தந்ததாக வரலாறு கூறுகின்றது.

இத்திருக்கோயில் ஐந்து நிலைகளைக் கொண்டது. கிழக்கு நோக்கிய
ராஜகோபுரத்துடன் கூடிய வாயிலைக் கடந்து உள்ளே சென்றால்,நேரே உள்வாயில் அமைந்துள்ளது. உள்வாயிலில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை அமைந்துள்ளதை பார்க்க முடியும்.

எம்பெருமான் லிங்க வடிவில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். இவர்
குடியிருக்கும் கருவறை வாயிலில் இருபுறமும் துவார பாலகர்களாகச் சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன் மாலியும் காணப்படுகின்றனர்.தாரகனுக்கு அருகில் விநாயகரும்,வித்யுன் மாலிக்கு அருகில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமானும்
அருள்புரிகின்றனர்.

உள்வாயிலைக் கடந்து மேலும் சென்றால், வலது புறத்தில்
’ஆட்சீஸ்வரரையும்,’ மேலும் சற்று உள்ளே சென்றால் ’உமையாட்சீஸ்வரரையும் ’
தரிசிக்க முடியும். கருவறைக்குள் உமையாட்சீஸ்வரர் கிழக்கு நோக்கி லிங்க ரூபத்தில் காட்சி தருகின்றார்.லிங்க உருவின் பின்புறம் பார்வதியுடன் சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி தருகின்றார்.

உமையாட்சீஸ்வரர் கருவறை வாயில் இருபுறமும் அலமேலுமங்கை, ஸ்ரீனிவாச
பெருமாள், பழனி ஆண்டவர், உற்சவமூர்த்திகள், லட்சுமி, துர்க்கை, சரஸ்வதி,
ஆறுமுகசாமி ஆகியோர் சன்னதிகள் அமைந்துள்ளன.

இக்கோவிலுள்ள சரக்கொன்றை மரத்தில் சித்திரை மாத
திருவிழாவின் போது மட்டுமே பூக்கள் மலர்வது சிறப்பாகும். சிவனின் தேர் அச்சை முறித்த விநாயகர், ’அச்சு முறி விநாயகராக’ கோயிலுக்கு வெளியே தனி சன்னதியில் மேற்கு திசை பார்த்து அமர்ந்துள்ளார். கௌதமர், கண்வர் முதலியோர் வழிபட்ட தலமாகவும் இத்தலம் உள்ளது.

வெளிப்பிராகாரத்தில் தலமரமாகிய சரக்கொன்றை உள்ளது. இம்மரத்தினடியில் சிவலிங்கம், அம்பாள், எதிரில் நந்தி, பக்கவாட்டில் நின்று
கைகுவித்து வணங்கும் நிலையில் ’திரிநேத்திரதாரி’ முனிவரின் உருவம் முதலியவை உள்ளன. இறைவன், ;திரிநேத்திரதாரி" முனிவருக்குக் காட்சி தந்த நினைவாக, இன்றும் பெருவிழாவில் ஏழாம் நாள் மாலை கொன்றையடி சேவை விழா நடைபெறுகின்றது.கருவறைச் சுவரில் நிரம்பக் கல்வெட்டுக்கள் உள்ளன.;மதுராந்தகச்சதுர்வேதி மங்கலத்துத் தென்பால் தனியூர் அச்சிறுபாக்கம்; என்பது கல்வெட்டுக்குறிப்பு.

தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் இது 29 ஆவது
தலமாகும் சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்சவமும், பௌர்ணமியிலும், பிரதோஷ காலங்களிலும் விசேஷ பூஜைகள் இக்கோயிலில் சிறப்பாக
நடைபெறுகின்றன.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகத்தை அடுத்து 15 கி,மீ.ல் இவ்வூர் அமைந்துள்ளது.