
மனை வாங்கியபோது
அப்பா வந்திருந்தார்
இடத்தைப்பார்த்ததும் புருவம் உயர்த்தி
பெருமிதமாய் அம்மாவைப் பார்த்தார்
மனை அமைந்திருந்த தெருவும்
இருபக்கமும் வளர்ந்திருந்த மரங்களும்
அப்பாவின் கனவுச் சாளரங்களை
திறந்து விட்டிருக்க வேண்டும்
நிழல் விரித்த தெருவில்
இரண்டுமுறை நடந்து விட்டு வந்தார்
என் மனைவியின் கைகளைப்
பிடித்துக் கொண்டார்
வடக்கப்பார்த்த இடம் என்று
என்னைப் பார்த்து சிரித்தார்
அப்பா அன்று இரவே
வீட்டைக் கட்டி முடித்திருந்தார்
இன்று நமதுள்ளமே பாட்டை பாடச்சொன்னார்
பாட்டை சிலாகித்தார்
வாடகைக்குடியிருப்பில்
ஒரு ஆதுரத்துண்டு குளிர்நிழலில்
எப்போதும் நடக்கும் இசைக்கூடல்
நிழல் நிறையும் உப்பரிகை
கிரானைட் பதித்து
அப்பா வந்தால் அமர்வதற்கு, படுப்பதற்கு,
தொடைதட்டி ரசிக்கவுமான சேகரங்களுக்கு
ஏதுவாய் நீள் திண்ணையும் ஒரு தூணும்
அவசியம் வேண்டுமென்று வரைபடத்தில்
இணைத்திருந்தாள் என் மனைவி
உறவினர் திருமணத்தில் சந்தித்த
அப்பாவின் நண்பர்
“சுந்தர்ராஜனைப் பார்ப்பது போலவே
இருக்குடா” என்றார்
வீடு திரும்பியதும்
கண்ணாடியில் தேடினேன், இல்லை அவர்
அவருக்கான திண்ணையில் படுத்துக் கொள்கிறேன்
தனுப்பாய் இருக்கிறது கிரானைட் சிலாப்
அப்பாவின் வியர்வை நெடி
என்னுள்ளிருந்து எழுகிறது
அப்பாவின் வீட்டைத் தான் கட்டிமுடித்தேனா?
தொடர்கள்
கவிதை

Leave a comment
Upload