
டிசம்பர் 2 2023
சித்தார்த் மனைவி நாடலி யுடன்
இரண்டு நாள் முந்தி தான் அமெரிக்கா விலிருந்து இந்தியா வந்திருந்தான்.சென்னை -மதுரை விமானத்தில் வந்து காரில் நெல்லையை அடைந்து அங்கு ஹோட்டல் ஜானகிராமில் தங்கி இருந்தான்.
நாளை நல்லூர் போகணும்.
நல்லூரில் அவன் பூர்வீக வீடு,சொத்து எல்லாம் உண்டு என்றும் அது விஷயமா சித்தார்த் ஊருக்கு போக வேண்டியிருக்கும் என்றும்
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸில் அவன் அம்மா பூமா சொல்லி
இருக்கிறாள்.
என்ன சொன்னா?
"இதை கேட்டுக்கோ சித்தார்த்.
1986 இல் உனக்கு ரெண்டு வயசு இருக்கும் போது உங்க அப்பா தியாகராஜன்
உன்னையும் என்னையும் பிடிவாதமா கடத்திக்கொண்டு போய் அமெரிக்கால
செட்டில் பண்ணிட ஆசைப்பட்டார்.
அவருடைய எகனாமிக்ஸ் படிப்புக்கு
அங்கே அப்போ பெரிய வேல கிடைச்சுது என்பதாலே.
அப்போ எனக்கு 25 வயசு.
" நானும் , குழந்தையும் வர முடியாது. எங்க அம்மாவோட தான் இருப்போம்.நீங்க அமெரிக்காவோ ஆப்பிரிக்காவோ, எங்க
வேணும்னாலும் போய், எதுலவேணா வேல பாத்துட்டு அப்பப்ப இங்க வாங்க!"என்றேன்.
உங்க அப்பா.." அப்போ சரி.. டாடா.. நான் ஒரு நல்ல அழகான, சொல் பேச்சு கேட்கிற வெள்ளைக்காரியோ, இல்லை கருப்புக்காரியோ பாத்து ரெண்டாம் தாரமா கட்டிக்கிறேன்.". என்றதும் பயந்து விட்டேன். நிஜமா சொன்னபடி செய்துவிட்டார் என்றால் என்ன செய்வது என்று ஒரு அல்பமான பயம்.அம்மாவை தனியா
இங்க நல்லூர்ல விட்டுட்டு போக மனம் வரல.
என் அம்மா செல்லம்மா தான் எனக்கு தைரியம் சொன்னாள்.
"பூமா, நீ பாட்டுக்கு மாப்பிள்ளை யோடு
அமெரிக்கா போ. நான் பாத்துக்கறேன்.
என் தைரியம் உனக்கு தெரியாதா.?"
" இல்லம்மா. நான் தான் உனக்கு ஒரே பொண்ணு, குழந்தை,எல்லாமே.
உனக்கு நாற்பத்தஞ்சு வயசாகப் போறது.அப்பா நம்ம விட்டுட்டு போயி
23வருஷமாச்சு. நீ தனியா எப்படிம்மா இருப்பாய் இங்க, நான் வெளிநாடு போயிட்டேன்னா.? "
"உங்கப்பன் போனப்புறம் உன்னை படிக்க வெச்சு, பெரிய இடமா பாத்து கல்யாணம் பண்ணது யாருடி?
நான் தானே!
.உன்னை உருப்படியா வச்ச எனக்கு என்ன பாத்துக்க தெரியாதா?நில புலன் வித்தது போக இன்னும் சொத்து இருக்கு. அது போதும் எனக்கு.தவிர
பெரிசா நம்ம ஊர் வீடு இருக்கு.
உங்கப்பன் ஓடிப்போன நாள்ல இருந்து தினம் ஒரு,ரெண்டு பேராவது வந்து
அவங்க கிட்ட ஒங்க அப்பன் கடன் வாங்கினான்னு சொல்லி கடன்
பணத்த திருப்பி வட்டியோட கேப்பாங்க ,
இவங்க தொல்லை தாங்காம வீட்டை வெச்சு கடன் பணம் அடைக்கலாம் என்றால் வீட்டு பத்திரத்தைக் காணம். அப்புறம் பாத்தா, என் ஐநூறு பவுன் நகை எல்லாமும் காணம்.
உங்கப்பன் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு காணாம போய்ட்டான்.
வீட்டு பத்திரம் வெச்சிருந்த சின்ன டிரங்கு பெட்டில எல்லா நகையையும் சேத்து வெச்சு எடுத்துகிட்டு ஓடிட்டான் உங்கப்பன்."
"அப்பொறம்?"
"அப்பொறம் என்ன அப்பொறம்?
என் தலையெத்து. துப்பு இல்லாத புருஷன்.கடன் தாங்காம நகையோட
ஓடிட்டான். சரி. வீட்டு பத்திரத்தை ஏன்
எடுத்துக்கிட்டு ஓடுனான்?.அவனைத் தான் கேட்கணும்."
"சரி. நீ என்னம்மா பண்ணினே.?"
"ஒங்க அப்பன் புண்ணியத்தால நகையை வெச்சோ, வீட வெச்சோ பணம் ஏதாவது பாங்கில கடன் வாங்க முடியலே. நல்ல காலம் எங்கப்பா
அதான் உங்க தாத்தா அப்ப உசிரோட இருந்தாரு. அவர் துணைல நிறைய ஏக்கர் நிலத்தை வித்து பணம் கேட்ட கடங்காரங்களுக்கு கொடுத்து முடிச்சிட்டு அப்புறம் மீதி சொத்தோட கவுரவமா உன்ன வளத்து படிக்கவெச்சு கட்டி கொடுத்துட்டு வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்.நீ சின்னப் பொண்ணு. ஒங்கிட்ட எதுவும் சொன்னதே இல்லை."
"சரி. ஓடிப்போன அப்பா நகை வீடு எல்லாத்தையும் வித்து ஜாலியா
இன்னொரு பொம்பளயோட செட்டில்
ஆயிட்டாரா?" என்று காஷுவலாகக்
கேட்டாள் பூமா.
(தொடரும் )

Leave a comment
Upload