இலக்கியங்களே காலத்தின் கண்ணாடி!
கல்வெட்டுகள், சாசனங்கள், செப்பேடுகள், ஓவியங்கள், சிற்பங்கள் என்று சரித்திரம் பேசும் ஆவணங்கள் பல இருந்தாலும் இலக்கியம் போல வரலாறு கூறுவது வேறு ஒன்றில்லை.
தெய்வம் தொழவும் , அரசனைப் புகழவும் எழுதப்பட்டாலும் அக்கால மனிதரின் வாழ்க்கை நெறி , பண்பாடு, நாகரிகம் என அத்தனையும் பதிவு செய்வது இலக்கியங்களே .
சோழர் கால இலக்கியங்களும் அப்பணியைச் செவ்வனே செய்துள்ளன.
12 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கம்பராமாயணம் என்னும் இதிகாசம் தமிழருக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். பத்தாயிரம் பாடல்களுடன், ஆறு காண்டங்களுடன் ராம அவதாரத்தை வால்மீகி ராமாயணத்தை ஒட்டி எழுதிய போதும் தமிழ் மரபு மாறாமல் எழுதினார் "கவிச்சக்ரவர்த்தி" கம்பர்.
கம்பர் ஒட்டக்கூத்தரின் சமகாலத்தவர். இருவருக்கும் இடையில் இராமாயணம் எழுத போட்டி இருந்ததாக ஒரு வாய் மொழிக் கதை இருக்கிறது. இருவரும் எழுதி முடித்த பின்னர், கம்பர் எழுதியதே சிறப்பாக இருப்பதைக் கண்டு தான் எழுதிய இராமாயணத்தை ஒட்டக்கூத்தர் எரித்ததாக அக்கதை சொல்கிறது.
அக்கூத்து மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் தமிழுக்கு இரண்டு இராமாயணங்கள் கிடைத்திருக்க கூடும் . இருப்பினும் ஏழாம் காண்டமான , உத்திரகாண்டத்தை ஒட்டக்கூத்தர் எழுதினார் என்று சொல்லப் படுகிறது .
இக்காலத்தில் இயற்றப்பட்ட மற்றுமோர் தலைசிறந்த இலக்கியம் நளவெண்பா.
நிடத நாட்டு மன்னன் நளன் சரித்திரத்தை எழுதியவர் புகழேந்திப் புலவர். 'கலி' யின் சூழ்ச்சியில் சூதாட்டத்தில் நாடிழந்து மனைவி தமயந்தி, குழந்தைகளைப் பிரிந்து , துன்பப்பட்டு பின்னர் இழந்த அனைத்தும் திரும்ப பெறும் கதைதான் நளவெண்பா "வெண்பாவில் புகழேந்தி" என்னும் பெருமை பெற்றவர் புகழேந்திப் புலவர். 13 ஆம் நூற்றாண்டில் எழுந்த இந்நூல் 427 பாடல்களைக் கொண்டது.
பிள்ளைத்தமிழ், உலா, நிகண்டுகள் என்னும் இலக்கிய வடிவங்கள் உயிர் பெற்றதும் சோழமன்னரின் ஆட்சி காலத்தில்தான்.
இவ்வாறு பல்வேறு இலக்கிய நூல்கள் தமிழில் எழுந்தன . தம்மை ஆதரித்து, அள்ளி வழங்கிய மன்னர் புகழ் பாட புலவர்கள் தயங்கியதில்லை .
சோழ மன்னர்களின் பெருமையை, ஆட்சி முறையை சங்க இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன.
கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதிய பட்டினப்பாலை, கரிகாற் பெருவளத்தான் புகழைப்பாடுகிறது .அத்துடன் காவிரிப்பூம்பட்டினத்தின் எழிலையும் பதிவு செய்கிறது . சிலப்பதிகாரமும் , மணிமேகலையும் கதைக்களமாக கொள்வது இந்த புகார் நகரம் தானே .
உருத்திங்கண்ணனாரின் மற்றொரு சிறந்த நூலான பொருநராற்றுப்படையில் கரிகால் வளவன் என்று புகழப்படுகிறார்
"வெண்ணி தாக்கிய வெருவரு நோன்தாள்
கண்ஆர் கண்ணிக் கரிகால் வளவன்":
"அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல்
அன்னோன் வாழி"
(பொருநராற்றுப்படை)
நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி எனப்படும் கரிகாலனின் வாரிசுகள் தமக்குள் முரண்பட்டு சண்டை இட்ட போது கோவூர் கிழார் இருவருக்கும் அறிவுரை கூறுகிறார். உங்கள் இருவரில் யார் தோற்ற போதும் சோழர் குடிக்குத் தான் சிறுமையாகும் என்று கூறுகிறார்
ஒருவீர் தோற்பினும் தோற்பதுஉம் குடியே (புறநாநூறு 45)
கோப்பெருஞ்சோழன் மற்றும் பிசிராந்தையாரின் நட்பு இன்று வரை நட்புக்கு இலக்கணமாக இருப்பது. உறையூர் மன்னர் கோப்பெருஞ்சோழன் பாண்டிய நாட்டு புலவரைப் பார்க்காமலே நட்பு பாராட்டி , இருவரும் ஒன்றாக உயிர் விட்ட கதையைப் புறநானூறு பாடுகிறது.
அவர்கள் சந்தித்த போது பிசிராந்தையார் பாடிய பாடல், தனக்கு இன்னும் ஏன் நரை தோன்றவில்லை என்பதற்கான காரணங்களை விவரிக்கும் பாடலாகும்.
யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதிராயின்
மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான்கண் டனையர் என் இளையர்: வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதனதலை
ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்
பலர் யான் வாழும் ஊரே
- புறநானூறு 191
இவ்வாறு .தமிழ் இலக்கியங்களில் சோழரின் பெருமைகளைச் சொல்லும் பல இலக்கிய எடுத்துக் காட்டுகளைக் கூறிக் கொண்டே போகலாம்.
சோழர் கால இலக்கியங்கள் நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொக்கிஷங்கள்.
Leave a comment
Upload