உலகில் எல்லா போராளிகளும் உருவாகவில்லை உருவாக்கப்படுகிறார்கள் அவர்கள் இருப்பிடம் மாளிகையோ பெரிய ஆசிரமமாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை நடைபாதை ஓரம் கூட அப்படிப்பட்ட போராளிகள் நமக்கு கிடைக்கலாம். அதுபோன்ற ஒரு போராளி தான் நாம் சந்திக்க போகும் இந்த மனிதர். இவர் ஒரு காலணி உருவாக்கும் கலைஞர்.
காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த இவர் நெசவுத்தொழிலில் ஈடுபட்டிருந்தவர் அதன் பின்னர் விசைத்தறியில் தொழில் இணை தொடர்ந்தவர் அப்போது ஒரு சமயம் நடந்த விபத்து ஒன்றில் தனது இடது கையில் மணிக்கட்டில் இருந்து விரல்கள் வரை சேதம் ஆகிவிட, பின்னர் பலமுறை மருத்துவமனை சென்று ஓரளவு தனது இடது கையினை சரி செய்து வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருப்பவர். இடது கை சரியாக இயங்காததினால் நெசவு தொழிலை விட்டுவிட்டு சென்னை நோக்கி புலம் பெயர்ந்தார் அவருடைய பரம்பரை தொழிலான காலணி தைக்கும் தொழிலை எடுத்துக் கொண்டார்.
கோட்டூர்புரத்தில் ஒரு நடைபாதையில் தான் இவரது கடை. அவருடைய பொருட்கள் வைக்கும் மரப்பெட்டியில் அவரை ஆசிர்வதிக்கும் கடவுள்கள் , படங்களாக. தினமும் வாடிக்கையாக அவ்வழி செல்பவர்களுக்கும் அது ஒரு கோவில் தான், அவரைப்போலவே.
அவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த , செல்வாக்கு மிகுந்த சிலர் திரைமறைவுக் காரியங்கள் செய்தபோதும், தனியாளாய் நின்று போராடி, அடையாறு கார்பொரேஷன் அலுவலகம் சென்று, தனது தரப்பை எடுத்து சொல்லி , உயரதிகாரிக்கு புரிய வைத்து, கடை வைக்க லைசென்ஸ் வாங்கி இருக்கிறார். அவருடைய ஒரு வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது.
அவரின் நண்பர்கள் துப்புரவு பணியாளர்கள், அருகிலுள்ள ஆட்டோ ஸ்டாண்ட் தோழர்கள், அருகிலுள்ள அப்பார்மெண்டுகளில் வேலை செய்வோர், காய்கறி, தேநீர் விற்கும் தோழர்கள் என பெரிய லிஸ்ட் அது. இவர்கள் அனைவருக்கும் அவரின் இடம் ஓய்வெடுக்க, நலம் விசாரிக்க, அடுத்தவருக்கு கொடுக்க வேண்டியதை வைத்துச் செல்ல, மதிய உணவு உண்ண என அனைத்திற்கும் அது ஒரு மையம் .
அவரின் நல்மனது எனக்கு தெரிய வந்தது இரு நிகழ்வுகள் மூலம், அந்த பகுதி கவுன்சிலர் மூலம், தான் குடியிருக்கும் பகுதிக்கு குடி தண்ணீர் இணைப்பும், விளக்கு வசதியும் செய்தது. துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் போது விபத்தில் அடிபட்ட தோழரை மருத்துவமனையில் சேர்த்து இரத்தம் அளித்து உதவியது.
அடுத்தவருக்கு உதவ நமது நிலை என்றும் தடையில்லை என நிருபித்துக்கொண்டிருக்கும் இவருக்கு , இவரின் அன்னை வைத்த பெயரே பொருத்தமானது....தவமணி...
சந்திப்போம்...
Leave a comment
Upload