தொடர்கள்
தொடர்கள்
எழுதிக் கிழித்தவை 33 பொய்யும் மிகையும் எழுத்துக்கு இழுக்கு - மூத்த பத்திரிகையாளர் ஆர்.நடராஜன்

20250709004348602.jpeg

திரித்து எழுதப்பட்ட ஒற்றைச் சம்பவங்கள் நல்லதற்கோ கெட்டதற்கோ எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். சுமார் 45 வருடங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் ஒரு மழைக் காலத்தில் வீட்டை ஒட்டி ஓடிய மழை நீரில் கால் வைக்க தயங்கிய ஐந்து வயது சிறுவனை ஒன்பது வயது சிறுமி தண்ணீரை கடக்க உதவினாள். மழை நீரின் அகலம் இரண்டரை அடி மட்டும். ஆழம் அந்த குழந்தையின் முழங்காலுக்கும் கீழே. இது சர்வ சாதாரண நிகழ்வுதான். ஆனால் ஒரு தமிழ் பத்திரிகையின் உள்ளூர் நிருபர் அதை பெரிய வெள்ளத்திலிருந்து ஒரு சிறுவனை ஒரு சிறுமி காப்பாற்றிய வீர தீர செயலாக பெரிதுப்படுத்தி எழுதினார்.

சம்பவ இடத்துக்கு போய் உண்மையை தெரிந்து கொள்ளாத வேறு பத்திரிகை நிருபர்கள் மறுநாள் அதே செய்தியைக் கொஞ்சம் கைச்சரக்கு சேர்த்து எழுதினார்கள். அந்த சிறுமியின் பெயர் கல்யாணி. முழு விவரத்தையும் சரியாக விசாரிக்க தவறிய கவர்னர் அந்த சிறுமியை ராஜ்பவனுக்கு அழைத்து கௌரவித்தார். எல்லா பத்திரிகையிலும்

செய்தியானது. அந்தச் செய்தி ஒரு பாடப்புத்தகத்தில் ஆபத்துகால உதவியை விளக்கும் கட்டுரையாகச் சேர்க்கப்பட்டது. கல்யாணி மீது இப்படி விளம்பர வெளிச்சம் விழுந்தது, பொய்ச் செய்தியினால். தவறான செய்திகள் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

வேறு ஒரு செய்தி பல வருடங்களுக்கு முன்பு மாணவ மாணவிகளையும், பெற்றோர்களையும் கதி கலங்க வைத்தது. ஒரு தொடக்க பள்ளி சிறுமியை அவள் அணிந்திருந்த காலணியில் ஒளிந்திருந்த தேள் கொட்டிவிட்டது என்பதே செய்தி. அந்த தேள் வீட்டிலிருந்து வந்ததா? அல்லது பள்ளிக் கூடத்தில் சிறுமியின் காலணியில் நுழைந்ததா என்பது ஒரு விவாதமாகியது. விசாரித்ததில் தெரியவந்த விஷயம் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்பது.

முதல் செய்தி மிகை செய்தி. ஒரு விதத்தில் பார்த்தால் தேள்கடிச் செய்தியை பாதுகாப்பு எச்சரிகை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்காக அந்தச் செய்தி எழுதப்பட வில்லை. பரபரப்புக்காகவே எழுதப்பட்டது. உண்மைகளை எழுதுவதில் தாமதமிருக்கலாம். ஆனால் அவசரப்பட்டுப் பொய்களை எழுதிவிட கூடாது. அது பத்திரிகை தர்மமல்ல.

பொய் செய்தி நிருபரை பத்திரிகைப் பணியிலிருந்து நீக்கிவிடலாம். எனினும் பத்திரிகையின் பெயர் கெட்டுக் போனது கெட்டு போனது தானே? இந்த விஷயத்தில் மாதச் சம்பளம் வாங்கும் முழு நேர பத்திரிகையாளர்களின் பொறுப்பு. பகுதிநேர பத்திரிகையாளர்களை விட அதிகம். தேள்கடிச் செய்தியை எழுதிய பத்திரிகையாளரின் பெயருக்கு முன்னே ‘தேள்கடி’ என்ற அடைமொழி சேர்ந்து கொண்டது.

இட்டுக்கட்டி செய்தியை எழுதுவது போல சம்பவங்களை ஏற்படுத்தி செய்திகளை முந்தி தந்த ஒரு பத்திரிகை பற்றி இர்வின் வாலஸ் என்கிற அமெரிக்க எழுத்தாளர் ஒரு நாவல் எழுதினார். ஒரு பத்திரிகை எப்படி செயல்படக் கூடாது என்பதை சுட்டிக்காட்டிய நாவல் அது.

ஒரு பத்திரிகை தவறான செய்தியை வெளியிட்டதற்காக வருந்துகிறோம் என்று மறுப்பு வெளியிடுவது கௌரவக் குறைவு. அதற்கு நிருபர்களோ உள் அலுவலக பத்திரிகையாளர்களோ காரணமாக இருந்துவிடக் கூடாது. ஒவ்வொரு செய்தியையும் அதன் உண்மைத் தன்மையை உறுதிபடுத்திக் கொண்ட பிறகே எழுத வேண்டும். சந்தேகம் இருந்தால் சில தகவல்களை ஒதுக்கிவிட வேண்டும்.

சில பத்திரிகைகளில் புகைப்படங்களை வெளியிடும் போது அவசரத்தின் காரணமாக சில தவறுகள் நேர்வதுண்டு. ஒரு தேசிய கட்சி தன் விழா மலரில் காந்தியின் வேடத்தில் நடித்த அட்டன்பரோவின் படத்தை காந்தி என்று வெளியிட்டது. இதை என்னவென்று சொல்வது? வெளியிட்ட செய்திக்கு அல்லது புகைப்படத்திற்கு மறுநாள் திருத்தம் வெளியிட வேண்டியிருந்தால் அது அகௌரவம்.

ஒருமுறை ஒரு பெண்மணியின் புகைப்படத்தின் கீழே ஒரு தொழில் அதிபரின் மனைவி என்ற குறிப்பு இருந்தது. மறுநாள் திருத்தம் வெளியிட வேண்டியிருந்தது. அந்த குறிப்பிட்ட நபர் இன்னாரின் மனைவி அல்ல என்ற வார்த்தைகள் ஒரு விபரீத அர்த்தத்தை கொடுத்தன.

பல வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையின் ஒரு பிரமுகர் இறந்துவிட்டதாக செய்தி வந்தது. ஆனால் அவர் உயிருடன் இருந்ததால் திருத்தம் வெளியிடப் பட வேண்டியிருந்தது. திருத்தம் பற்றிய வாசகத்தில் வருந்துகிறோம் என்ற வார்த்தை இருந்தது. அவர் உயிரோடு இருப்பதற்காக வருந்துகிறோம் என்றபடி பொருள்பட்டது அந்த திருத்தம். எனவே செய்திகளில் உண்மை முக்கியம் அதை எடுத்துச் சொல்லும் சொற்களை அதே அளவுக்கு முக்கியமானவை.

அதனால்தான் இப்போதெல்லாம் மரணச் செய்தியை வெளியிட வேண்டியிருந்தால் சம்பந்தபட்டவரின் குடும்பத்தில் இருந்து மரணச் சான்றிதழை பத்திரிகைகள் கேட்டு வாங்கிக் கொள்கின்றன. அரசியல் களத்தில் வேண்டுமென்றே பொய்ச் செய்திகள் உலவவிடப்படும். அவசரப்பட்டு அவற்றை எழுதிவிடக் கூடாது. ஆனால் சில அரசியல்வாதிகள் பொய்யை மெய் போலும், மெய்யை பொய் போலவும் பேசும் சாமர்த்தியசாலிகள்.

அதிமுக்கியமான செய்தி இல்லையென்றால் ஒரு அரசியல்வாதி இன்னொரு அரசியல்வாதியைப்பற்றி குறை சொல்வதை உடனடியாக அப்படியே வெளியிடாமல் விசாரித்துப் பார்த்து உண்மையை தெரிந்து கொண்டு மறுநாள் வெளியிடலாம். ஏனென்றால் Disinformation ஐ Information போலவே தரும் சாமர்த்தியசாலிகள் அரசியல் தளத்தில் இருக்கிறார்கள்.

பொதுமேடையில் பேசியதை ஒரு அரசியல்வாதி மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஆனால் பேட்டிகளின் போது சொன்னதை மறுத்துவிடலாம் என்பது அச்சு ஊடகங்கள் மட்டும் இருந்தபோது நிலவிய சூழ்நிலை. காட்சி ஊடகங்கள் வந்தபிறகு பிரமுகர்கள் அப்படிச் சொல்லவில்லை என்று மறுக்க முடியாது. இப்போது வீடியோ ஆதாரங்கள் உண்டு. அதனால் தான் சமீபகாலமாக அரசியல்தரப்பில் இருந்து மறுப்பு செய்திகள் அதிகம் வெளிவருதில்லை.

பேட்டியை செய்தியாக்கும் போது அந்த பிரமுகர் இதைச் சொன்னார், ஆனால் இதில் நம்பகத்தன்மை இல்லை என்று எழுதுவதும் சங்கடமான காரியம் தான். அனேகமாக அப்படி யாரும் எழுதுவதில்லை. ஒரு பத்திரிகையில் அடிக்கடி இப்படி Disclaimer வெளிவந்தால் அந்தப் பத்திரிகையின் நம்பகத்தன்மை குலைந்துவிடும்.

எந்த பத்திரிகையின் நம்பகத் தன்மையையும் நிலை நிறுத்தும் பொறுப்பில் இருப்பவர்கள் பத்திரிகையாளர்கள். எனவே உறுதி செய்யப்படாத தகவல்களையும் அவர்கள் அவசரப்பட்டு எழுதி விடக்கூடாது. அதே நேரம் சரியான செய்தியை வெளியிடுவதில் தாமதமும் கூடாது.

கற்பனை (Fiction) வகை பத்திரிகைகளில் உள்ளடக்கத்தின் கீழே ஒரு Disclaimer இருக்கும். அதாவது கதைகளில் உள்ள சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே. அவை யாரையும் குறிப்பிடுவன அல்ல என்றபடி. செய்தி பத்திரிகைகளில் இந்த Disclaimer வெளியிட முடியாது என்பதால் பொய்களை களைந்து உண்மையையே வெளியிட வேண்டும்.

‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்ற எச்சரிக்கையை வேறு யாரும் மதித்தாலும் மதிக்காவிட்டாலும் பத்திரிகையாளர்கள் மதித்தாக வேண்டும்.