வகுப்பில் பஸ்கால் மாணவனா அல்லது ஆசிரியனா என்று கேட்கும் அளவுக்கு மிகவும் பெரியவனாகவும் தடிமனாகவும் இருந்தான்.
Pascal என்ற அவனது திருநாமம்தான் பஸ்கால் (Busகால் என்று பள்ளிக்கூடமே உச்சரித்தது.) என்று மாறிப்போயிருந்தது. ஆசிரியர்களே அவனை அப்படித்தான் அழைத்தார்கள். அவன் உள்ளூர் சேர்மன் பாய் அவர்களின் மகன். அந்த அரசுப் பள்ளிக்கூடம் உருவாகப் பெரும் காரணகர்த்தாவாக இருந்ததால், அவருக்கு இருந்த மரியாதை அந்த பள்ளியில் அவரது வழியாக அவரது புத்திரனுக்கும் பள்ளி செலுத்திக் கொண்டிருந்தது.
பஸ்கால் எந்த கெட்டது செய்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள். எனவே, அவன் எந்த நல்லதும் செய்வதே கிடையாது.
கண்ணுக்கு எதிரிலேயே பென்சிலையும் ரப்பரையும் எடுத்துக்கொண்டு போவான். மாணவர்கள் கொண்டுவரும் தின்பண்டம் எதையும் விட்டு வைப்பதில்லை. உரிமையோடு பறித்துச் செல்வான்.
ஒரு தடவை தன் பிறந்தநாளுக்கு அழகாகப் பாவாடை சட்டை அணிந்து, சிறு கொண்டை போட்டு வந்தாள் காயத்ரி. பள்ளி இடைவேளை மணியில் அவளது கொண்டையை பிடித்து இழுத்து, களைத்து விட்டான். அவள் அழுது கொண்டே நியாயம் கேட்டதற்கு, "எனக்கு இது பிடிக்கலை...!" என்று அனாயசமாகச் சொன்னான்.
அப்புறம் பள்ளிக்கூட ஆயாவை வைத்து அவளது கொண்டையை சரி செய்து, வீட்டிற்கு சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தார்கள்.
ஆசிரியர்களும் அவனைத் தூக்கி கொண்டாடினார்கள்.
கைவினை வாத்தியார் உள்ளே நுழைந்ததும் எங்களை எல்லாம் விட்டுவிட்டு, பஸ்காலை நோக்கி, "பஸ்கால்! காந்தி நகர் மார்க்கெட்ல உன்னைப் பார்த்தேன்...!" என்று ஐஸ் வைப்பார். அவன் அதற்கு பதில் அளிக்கும் விதமாக "அப்படியா சார்?" என்பான்.
கணக்கு வாத்தியார், "வாப்பா எப்படி இருக்கிறார்?" என்று கேட்பார்.
ஒரு விதமான கட்டை குரல் பஸ்காலுக்கு. தான் படிக்கவில்லை என்பது பற்றி அவன் கவலைப்பட மாட்டான். ஏழாவதுவரை ஃப்ரீ பாஸ் போட்டு விட்டார்கள். அவன் எட்டாவது வகுப்பை பற்றியும் கவலைப்படவே இல்லை.
கொண்டை தீண்டலுக்குப் பிறகு, பஸ்கால் காயத்ரியின் பரம எதிரியாகிப் போனான்.
வகுப்பில் அவனுக்கு நண்பர்களாக, படிக்காத பல மாணவர்கள் உண்டு. அவர்களோடு பஸ்கால் தனது மிக நெருங்கிய நண்பனாக சுப்புணியையும் சேர்த்துக் கொண்டான். சுப்புணி படிப்பில் படு சுட்டி. பஸ்கால் மற்றும் அவனது நண்பர்கள் கேட்கும் ஒரே கேள்வி:
"எப்புடிரா நேத்து சொல்லிக் கொடுக்கிறதை இன்னைக்குப் பக்கம் பக்கமா நீயும் காயத்ரியும் எழுதி தள்ளுரீங்க...?" என்பதுதான்.
மாணவர்களை பள்ளி வாழ்க்கையிலிருந்து துரத்தும் அல்ஜீப்ரா ஃபார்முலாக்களை கடகடவென்று ஒப்பிக்கும் சுப்புணியை ரசிப்பான் பஸ்கால். அதே சமயம், காயத்ரி ஒப்பித்தால் ஏனோ கடுப்பாவான்!
இப்படியாக வசந்த காலத்தில் வாழ்ந்துகொண்டு வந்த பஸ்காலுக்கு ஒரு வில்லன் வந்து சேர்ந்தார்.
சில்வர் ஸ்டார் என்ற ஆங்கிலோ - இந்தியன் வாத்தியார்தான் அவர்!
சுத்தமான இந்திய வாத்தியார் இங்கிலீஷ் நடத்தினாலே புரியாத உலகத்தில், ஒரு ஆங்கிலோ இந்தியர் இங்கிலீஷ் பாடம் எடுத்தது பஸ்காலுக்கு புரியவே புரியவில்லை என்பது ஆச்சரியமில்லை!
நிறைய மாதிரி வகுப்புகளை எடுத்துவிட்டு, கேள்விகள் கேட்க ஆரம்பித்தார் சார். சிலர் சரியாகப் பதில் சொல்லவும் சிலர் பாதியாகப் பதில் சொல்லவும், பஸ்கால் பதில் சொல்லவே இல்லை. அவனை அருகில் அழைத்த சார், "உடம்பு மட்டும்தான் வளர்ப்பியாக்கும்...?" என்று கேட்டுவிட்டு, அவனைக் கையை முறுக்கி, குனிய வைத்து, நடு முதுகில் ஓங்கி கும்மாங்குத்து ஒன்று விட்டார்.
பஸ்காலுக்கு அடி எல்லாம் சாதாரண விஷயம். ஆனால், வகுப்பில் எல்லோர் முன்னிலையில், குறிப்பாக காயத்ரி முன்னிலையில் அவன் அடி வாங்கியது பெரும் அவமானமாக ஆகிப்போனது!
மறுநாளிலிருந்து அவன் பள்ளிக்கு வரவில்லை. இனிமேல் அந்தப் பள்ளிக்கு வரமாட்டான் என்ற தகவலும் எங்களை வந்து சேர்ந்தது.
*****
முப்பது வருடங்களுக்குப் பிறகு, பஸ்காலை பாண்டிச்சேரியில் வைத்து பார்த்தான் சுப்புணி.
"இம்போர்ட் எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்றேன்...!" என்று சொன்னான் பஸ்கால். அவனது பக்கத்தில் பர்தா அணிந்த பெண்மணியை எங்கேயோ பார்த்ததுபோல இருந்தது.
அவனே சொன்னான்:
"இது யாரு தெரியுதா? காயத்ரி! நம்ம கூட படிச்ச பொண்ணு. இப்ப என்னோட மனைவி...!" என்றான்.
*****
Leave a comment
Upload