வழக்கம்போல் மாதுரி அலுவலகத்திற்கு சற்று முன்னதாகவே வந்து விட்டாள். வாட்ச்மேன் அப்போதுதான் ஷட்டரை திறந்து கண்ணாடி மாளிகையைப் போல் காட்சி தரும் அந்த கம்பெனியை திறந்திருந்தான்.துணைதேவதை பரபரப்பாக வந்தாள். துடைப்பத்தை எடுத்து இங்கொன்றும் அங்கொன்றுமாக கூட்டி வாரி முறத்தில் அள்ளி பக்கெட்டில் நீர் எடுத்து துடைப்பானால் இரண்டு இழு இழுத்து விட்டு சற்று ஓய்வெடுத்தாள்!
பிறகு கண்ணாடிக் கதவுகள், அலமாரிகள், மேசைகளைத் துடைத்து விட்டு, கையலம்பி விட்டு, எவர்சில்வர் குடத்தில் தண்ணீர் எடுத்து வைத்து மூடினாள்.
"எல்லாம் முடிச்சாச்சா?" வாட்ச்மேன் கேட்டதும் "பாத்துட்டு தானே இருக்க?" என்றாள்.
"அதனாலத் தான் கேட்கிறேன். அரையும் கொறையுமா, ஏதோ வேலை செய்யுற. கேட்டா சத்தம் போடுற" என்றதும் சட்டென திரும்பினாள்.
"ஆங், ஓனர் குடுக்குற துட்டுக்கு இது போதும், கேக்க வந்துட்ட" என்றவாறே மணிப்பர்சையும், டச் மொபைலையும் கைகளில் திணித்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
மாதுரிக்கு ஆச்சரியமாக இருந்தது. வாட்ச் மேனிடம் எதுவும் கேட்கவில்லை. தன் கேபினுக்குச் சென்று வேலைகளைத் துவங்கினாள்.
மறுநாள் அந்த துணைதேவதை வருவதற்குள் சுத்தமாகப் பெருக்கித் துடைத்து, தண்ணீர் எடுத்து வைத்து எல்லா வேலைகளும் முடிந்திருந்தது.
மல்லிகாவிற்கு ஆச்சர்யமும், கோபமும் வந்தது. வாட்ச் மேனிடம் சற்று குரலை உயர்த்தி "என்ன ஆள மாத்திட்டாங்களா? என் பொழப்புல மண்ணப் போட்ட அந்த சிறுக்கி யாரு?" எனக்கேட்டாள்.
அவன் கை காண்பித்த இடத்தில் மாதுரி நின்றிருந்தாள். மல்லிகாவிற்கு அதிர்ச்சியானது.
"என்னம்மா, நீதான் எல்லாம் செஞ்சு முடிச்சியா? ஒனக்கெதுக்கு கண்ணு இந்த வேலையெல்லாம்?" கொஞ்சம் குரலை உயர்த்தவே மாதுரி "உஷ்ஷ்ஷ் கத்தாத, அமைதியா கேளு" என்றாள்.
"நேற்று நீ என்ன சொன்ன? ஓனர் கொடுக்குற சம்பளத்துக்கு தகுந்த மாதிரி வேலை செய்யறேன்னு சொன்ன இல்ல"? என்றதும்
"ஆமாம்மா, துட்டு நிறையா கொடுத்தா தானம்மா நல்லா செய்ய முடியும்?" என்று பெரிய உண்மையை சொன்னது போல் இறுமாப்புடன் கேட்டாள்.
"ஓனர், நீ செய்யற வேலைக்கு அந்த சம்பளம் போதும்னு நெனைக்கிறாரோ என்னவோ. அவர் வந்து பாக்கும் போது அப்படித்தானே நினைக்கத் தோணும்?" என்று கேட்டாள்.
"ஆமாம்மா, எனக்கு குடும்ப கஷ்டம். பணம் அதிகமா தேவைப்படுது. என்ன செய்யமா?" என்றாள் மல்லிகா.
"நீ இன்னிக்கு ஓனர் வர வரைக்கும் அப்பிடி ஒக்காந்துக்கோ. வந்ததும் பாரு" - மாதுரி.
கதிரேசன் உள்ளே நுழைந்ததுமே அலுவலகம் வழக்கத்துக்கு மாறாக சுத்தமாக இருப்பதை உணர்ந்தார். தன் அறைக்கு சென்றதும் பெல் அடித்து கூப்பிட்டார்.
அவரின் பி ஏ வான மாதுரி எழுந்து உள்ளே சென்றாள்.
அதற்கு முன் மல்லிகாவை அறையின் முன் வந்து நிற்கச் சொன்னாள்.
"மார்னிங் சார், சொல்லுங்க" என்றாள்.
"நம்ப மல்லிகாம்மா இன்னைக்கு சுத்தமா வேல செஞ்சுருக்காங்களே" என்றார்.
"வழக்கமா தூசியெல்லாம் அப்படியே இருக்கும். ஏதோ கடனுக்கு வேலை செய்யறாங்கன்னு நெனைப்பேன். ரொம்ப வருஷமா செய்யறாங்க. சொல்லவும் கஷ்டமா இருக்கும்".
"ஏதாவது உதவி செய்யலாம்னா கூட அவங்க செய்யற வேலைய நெனைச்சா எனக்கு உதவத் தோணாது."
இன்னிக்கி மாதிரி நல்லா சுத்தமா செஞ்சாங்கன்னா, அடுத்த மாசத்துலேந்து அவங்களுக்கு சம்பளமும் கூட்டிக் கொடுக்கலாம்."
"அவங்க புள்ளைங்கப் படிப்புக்குக் கூட எதாச்சும் உதவி செய்யலாம்" கதிரேசன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
"ஐயா, மன்னிச்சிருங்கய்யா, ஒங்க நல்ல மனசு தெரிஞ்சும் தப்பு பண்ணிட்டேன். இனிமே பத்து நிமிஷம் முன்னாடியே வந்து சுத்தமா என் வேலையை செய்றேங்கய்யா" என்று கண்ணீர் மல்க கை கூப்பினாள்.மாதுரியும் கதிரேசனும் பேசி வைத்துக் கொண்டது மல்லிகாவிற்கு தெரியாது.
மாதுரிக்கு மனம் நிறைய சந்தோஷம். கதிரேசனுக்கு மாதுரியை நினைத்துப் பெருமை. மறுநாள் முதல் அந்த அலுவலகம் 'பப்பளபளபளதான்' போங்களேன்.பூஜை சாமான்கள் தங்கம் போல் மின்னியது. காபி டம்ளர்கள் நன்றாக தேய்த்துக் குளித்து புதியது போலானது.
Leave a comment
Upload