தொடர்கள்
பொது
வைரமுத்து சர்ச்சை பேச்சு- லண்டனிலிருந்து கோமதி

20250716073709957.jpeg

சென்னை கம்பன் கழகத்தின் ஐம்பத்தி ஒன்றாவது கம்பன் விழா, பொன்விழா நிறைவு விழாவாக கொண்டாடப்பட்டது.

தமிழக முதல்வர் ஸ்டாலின், கம்பன் கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன் மற்றும் சுகி சிவம் என பல தமிழ் அறிஞர்கள் பலரும் இதில் பங்கு பெற்றனர்.

வெள்ளிக்கிழமை அன்று துவங்கிய நிகழ்வில்,ஆழ்வார்கள் ஆய்வு மையம் நிறுவியுள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பர் விருது கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய வைரமுத்து, எப்பொழுதும் போல், புதுமையாக பேசுவதாக நினைத்து, ராமன், வாலி வதைப் படலத்தை ஒட்டி பேசியது, கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது . ராமனின் வாழ்வில் களங்கம் உள்ளதால் இராமச்சந்திரன் என்று பெயர் பெற்றதாகவும், வாலி வதைப் படலத்தில் ராமன் மறைந்து நின்று அம்பெய்தி வாலியை கொன்ற தீராப் பழியிலிருந்து, கம்பர் தன் பாட்டின் மூலம் அவனை விடுதலை செய்ததாக மிகவும் புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து பேசினார். "ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த தேவியை, பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை" என்ற வாலியின் கூற்றை மேற்கோளாகக் கூறி, இந்தப் பாடலில் வரும் "திகைத்தனை போலும் செய்கை" என்ற வரிக்கு "புத்தி சரியில்லாதவன் செய்த செயல்" என்கிற புதிய விளக்கத்தை அளித்துள்ளார். இந்த விளக்கத்தை கேட்ட சபை செய்வதறியாது மௌனம் காத்தது. கம்பன் இவ்வாறு எழுதி, ராமனை மனிதனாக்கினான், கம்பன் கடவுளானான் என்று மேலும் கூறினார். என்ன பேசுகிறோம் என்பதை தெரிந்து, உணர்ந்து பேசினாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

இவ்விழாவில் பேசிய சுகி சிவம் மற்றும் கம்பவாரிதி ஜெயராஜ் வைரமுத்துவின் கருத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

சுகி சிவம் கூறுகையில், திகைத்தனை என்கிற சொல்லின் பொருள் அதுவல்ல என்று விளக்கம் கூறி, வைரமுத்து பேசியதில் தனக்கு உடன்பாடில்லை என்று கூறினார்.

கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், "காப்பியத்தின் கதாபாத்திரங்களை நாம் உயர்வு செய்யவில்லை என்றாலும், தாழ்த்த கூடாது, எந்த விதத்திலும் களங்கம் ஏற்படுத்த கூடாது" என்ற கூற்றோடு, ஆண்டுதோறும் நாம் இந்தக் காப்பியத்தை ஆராய்ந்து, இதைப் பற்றி பேசிக் களிக்கிறோம் என்று கூறி கம்பனின் புகழை தூக்கிப் பிடித்தார்.

அடுத்த தலைமுறைக்கு தமிழின் பெருமையையும், கம்பனின் புகழையும் எடுத்துச் செல்லவேண்டியது நமது தலையாய கடமையாகும்.

இதனை விடுத்து, தனது வாழ்வின் சுய விருப்பு வெறுப்புகளோடு பேசிய வைரமுத்துவின் பேச்சு, கேட்கும் நம் அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது.