தொடர்கள்
அனுபவம்
காடறிதல்-8 ஆனைச்சாத்தனும் ஒற்றை யானையும்

20250715180021836.jpeg

சூரியன் உன் வாழ்விலிருந்து மறைந்ததற்காய் நீ அழுதால், நீ பார்க்க வேண்டிய நட்சத்திரங்களை உன் கண்ணீர் மறைத்து விடும்.. தாகூர்..

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் யானைகள் மேல் ஒரு ஆசை உண்டு. நாம் யானைகளிடம் எதைப் பார்க்கிறோம் ?. “யானை ஒரு மஹா மௌனம்!” என குறிப்பிடுகிறார் எழுத்தாளர் எஸ். ரா அவர்கள். யானை தன்னை வேடிக்கை பார்க்கும் உலகின் மீது அக்கறை கொள்வதில்லை.

அது தன் இயல்பில் இயங்குகிறது. உலகில் வேறு எந்த மிருகமும் இவ்வளவு வியப்போடு திரும்ப திரும்ப பார்க்கப் படுவதில்லை என்றே எனக்குத் தோன்றியது. யானையை பார்க்கும் தோறும் ஏற்படும் பரவசம் அதனால் ஏற்படும் ஆபத்துக்களை தெரிந்து கொண்ட பிறகும் கூட நமக்கு வடிவதில்லை. சின்ன வயதில் யானைச் சாணியை ரோட்டில் பார்க்க நேர்ந்தால், ஐயா! நம் ஊருக்கு யானை வந்திருக்கிறது என்று மகிழ்வாய் குதியாட்டம் போட்ட நாட்கள் இன்னும் நினைவில் இருக்கிறது.

யானை நம் ஊரில் தங்கி இருக்கிறது என்பதை அறிந்து ஒரு கூட்டமாய் நாங்கள் சிறுவர்கள் அம்மாவிடமிருந்து காசு வாங்கி கொண்டு போய் பலவேசம் கடையில் வாழை பழங்களை கை நிறைய வாங்கி கொண்டு போய் பாகனருகில் நின்றோம்.

"என்ன பாப்பா, சுந்தரிக்கு பழமா ? நீங்களே குடுங்க" என்றார் எங்களிடம். யானையை கிருஷ்ணர் கோவிலுக்கு எதிரிலிருந்த தென்னை மரத்தில் கட்டி இருந்தார்கள், அது சாவகாசமாக தென்னை மட்டைகளை ஒடித்து மென்று கொண்டிருந்தது. காற்றில் அலையும் அதன் துதிக்கையை நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது, அப்போது ஏற்பட்ட மனக் கிளர்ச்சியை என்னால் வார்த்தைகளில் விளக்க முடியவில்லை.

பழத்தை கொண்டு போன அனைவரும் என் கையில் அதை தந்துவிட்டு பின்வாங்கிவிட, நான் மட்டுமே அதன் அருகில் சென்று அதன் துதிக்கையில் பழங்களை கொடுத்தேன். பயந்து கொண்டே செய்தாலும் யானையின் துதிக்கையில் ஒரு பகுதியை என்னால் தொட்டு உணர முடிந்தது. அது ஒன்றும் நான் நினைத்ததை போல அவ்வளவு மென்மையாக இருக்கவில்லை, கடினமான தோல் கொண்டதாக தான் அது இருந்தது. பழைய நினைவுகளுக்கு ஒரு நிற்க போட்டுவிட்டு காட்டிற்குள் போகலாம்.

இத்தனை நாட்களாக சோலை காடுகளை பற்றி ஒன்றுமே தெரியாது, அந்த சோலை காடுகளை அழியாமல் பாதுகாத்தால் மட்டுமே நம் நதிகளும் பல்லுயிர்களும் அழிந்து போகாமல் பாதுகாக்கலாம் என்பதெல்லாம் அறியாமல் தான் இத்தனை நாட்கள் வாசிப்பு உலகத்திற்குள் இருந்திருக்கிறேன். யானைகளை பற்றி நிறைய தகவல்களை அறிந்து கொண்ட போது இரவு நன்றாக சூழ்ந்து விட்டது.

குளிரும் பசியும் சேர்ந்து கொண்ட போதும் மனம் குதூகலிக்கவே செய்தது. சுடச்சுட சப்பாத்தியும் ஆவி பறக்க நெய்சோறும் தயாராக இருந்தன, அதன் வாசம் வேறு மேலும் பசியை கூட்டியது. நன்றாக சாப்பிட்டு முடித்த பிறகு எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கூடாரத்திற்கு சென்றோம்.

நாங்கள் எதிர்பார்த்ததை விட கூடாரங்கள் வசதியாகவே இருந்தன. ஆனால் குளிர் அதிகமாவே இருந்தது. காலுறைகளை அணிந்த பிறகே அந்த குளிரை தாங்க முடிந்தது. எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டது, அப்படி இயற்கையான குளிரில் திளைத்து, செயற்கையான குளிர்ச்சிக்கு வேறு வழியின்றி பழகி போயிருந்த உடல் இயற்கையை ரசித்து திளைத்தது. சின்ன வயதில் முதல் முதலில் ஊட்டி, கொடைக்கானல் போன போது ஏற்பட்ட பரவசங்களுக்கு இந்த குளிரும் ஒரு காரணமாய் இருந்திருக்கிறது. எப்போதுமே சற்றே வெக்கையான பிரதேசங்களில் வாழ்ந்து பழகிவிட்டு குளிர்ச்சியான மலை வாழ் ஸ்தலதிற்கு போகும் போது அங்குள்ள சீதோஷணம் எப்படி இருக்குமோ என்ற பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், என்னுடைய சின்ன வயதில் திருநெல்வேலி, மதுரை தாண்டி அதிகம் வேறு ஊர்களுக்கு சென்றதில்லை. ஆனால் எப்போது பள்ளிச் சுற்றுலா கூட்டிபோனாலும் தவறாமல் கலந்து கொள்வேன், அதில் பெரும்பாலும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் இடம்பெற்று விடும்.

பள்ளிச் சுற்றுலா போகும் போது போட்டுக்கொள்ள ஸ்வெட்டர் வாங்கி தர சொல்லி அடம் பிடித்த நாட்கள் பசுமையானவை. ஓர் இரு முறை தவிர அந்த ஸ்வெட்டராக பட்டது அணியப்படாமல் அப்படியே மடித்து வைக்கப்பட்டிருக்கும் எனினும் எப்போதாவது அதை அணிய நேர்வது அந்த குளிர் பிரதேசத்திற்கே சென்று வந்த ஒரு மகிழ்வை தரும்.

குழந்தைகளுக்கு அந்த இயற்கையான குளுமை சற்றே அதிகமாக தோன்றினாலும் காலுறைகள், ஸ்வெட்டர் மற்றும் போர்வையோடு களைப்பும் சேர்ந்து கொள்ள நன்றாகவே உறங்கினார்கள். சில் வண்டுகளின் ரீங்காரம் சற்றே ஓங்கி ஒலித்தது, காட்டில் வாழும் இரவாடிகள் எப்போதாவது எழுப்பிய சிறு சிறு ஒலிகளை தவிர காடு அமைதியாகவே இருந்தது. முன்பு சிறுவயதில் பொதிகையில் உள்ள அத்திரி மலையில் தங்கி இருந்த போது கூட கரடி பயம் இருந்தது, ஆனால் நாங்கள் தங்கி இருந்த முகாம் பாதுகாப்பானதாகவே தோன்றியது.

மறுநாள் காலை விடியல் அற்புதமானதாக இருந்தது. விதவிதமான பறவைகளின் கீச்சொலிகளும், காட்டிற்கே உரிய பிரத்யேக வாசனையும் எங்களைச் சுற்றி நிறைந்திருந்தது. இலைகளில் பனித்துளிகள் இன்னும் மிச்சமிருந்தன....

மலைகளுக்கு இடையே ஆரஞ்சு பந்து போல எழும்பி வந்த சூரியனை காண கண் கோடி வேண்டும். மூலிகை தேநீரை பருகியபடியே சூரிய உதயத்தை ரசித்து மகிழ்ந்தோம். எங்களுடன் வந்திருந்த பறவை ஆர்வலர் மற்றும் ஒளிப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள ஜீவிதா அதி நவீன ஒளிப்பட கருவிகளை கொண்டு விதவிதமாக பறவைகளை படம் பிடித்துக் கொண்டிருந்தார்.

தூரத்தில் இருந்து பார்க்கும் போது அவ்வளவு துல்லியமாக தெரியாத பறவைகள் கூட அவர் எடுத்திருந்த படங்களில் மிக தெளிவாய் தெரிந்தன.

மைனாக்கள் ஜோடி ஜோடியாய் விளையாடிக் கொண்டிருந்தன, கரிச்சான் என்று அழைக்கப்படுகிற வால் குருவி அருகில் அமர்ந்து ஓசை எழுப்பிக் கொண்டே இருந்தது. அப்போது தேக்கன் குளித்து தயாராகி வந்தார்.

எங்களை பார்த்த உடன் காட்டில் கழித்த இரவு எப்படி இருந்தது என்று கேட்டார், கடும் குளிராக இருந்தாலும் நன்றாகவே உறங்கினோம் என்றே பலரும் சொன்னோம்.

குளிரிலும் தூக்க கலக்கத்தில் அமர்ந்திருந்த குழந்தைகளின் அருகில் சென்று "நல்லா தூங்கினீங்களா கண்ணுகளா ?" என்று பிரியமாய் கேட்டார் தேக்கன். "ஓ நல்லா தூங்கினோமே பறவைகள் சத்தம் தான் எங்களை எழுப்பி விட்டுச்சு" என்றான் மகன்.

உடனே தேக்கன் "ஆமா இந்த பறவைகள் ஏன் ப்பா காலையிலும் மாலையிலும் மட்டும் இப்படி சத்தம் போட்டுக்கிட்டு இருக்கு ?" என்று குழந்தைகளிடம் கேட்டார். உடனே மகன், "அதுக்கு ஒரு வேளை பசிக்குமா இருக்கும்" என்றான்,

மகளோ "அதுக்கு இன்னும் தூக்கம் வருமா இருக்கும் அவங்க அம்மா எழுப்பி விட்டதால் கோபமா கத்துதோ" என்றாள்.

அவர்களின் பதிலில் சிரித்தபடியே "அப்படி இல்ல கண்ணுகளா, இங்க தான் நான் இருக்கேன் இது என்னோட இடம்னு மற்ற பறவைக்கு சொல்லவும், ஆண் பறவை அதோட இணையான பெண் பறவையை ஈர்ப்பதற்கு காலையில் சத்தம் எழுப்பும்" என்றார்

"அப்போ சாயங்காலம் எதுக்கு கத்துது ? என்று கேட்டாள் மகள். "மாலை வேளையில், பறவைகள் இரவில் தங்குமிடத்திற்கு திரும்புவதற்கு முன், தங்கள் கூட்டாளிகள் மற்றும் பிற பறவைகளுக்கு தங்களின் இருப்பிடத்தை தெரியப்படுத்துகின்றன" என்று சொன்னார்.

மீண்டும் ஓசை எழுப்பியது கரிச்சான், இம்முறை மீண்டும் ஓசை எழுப்பியது கரிச்சான்.

2025071417044047.jpeg

இம்முறை"ஆனைசாத்தன் என்று இதற்கு பெயர் எதற்காக வந்தது ஐயா, இதுதான் ஆனைசாத்தனா அல்லது வேறு எதுவுமா ?" என்று கேட்டேன் நான்.

ஆண்டாள் பாடலான "கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!" என்ற பாடலில் ஆண்டாள் இந்த கருங்குருவி/கருவாட்டுவால் குருவி/இரட்டைவால் குருவி/கரிச்சானை தான் குறிப்பிடுகிறாள்.

ஏனென்றால் அது அதிகாலை மூன்றரை மணிக்கெல்லாம் எழுந்து முதலில் கூவும். தம்பி சொன்ன மாதிரி அதுக்கு காலைலயே பசிக்கும், சுமார் நாலரை மணியில் இருந்து தொடங்கி ஆறு மணிக்கு முன்பே பெரிய பெரிய பூச்சிகளை வேட்டையாடி உண்ணும்.

ஆங்கிலத்தில் இதற்கு black drongo என்று பெயர். இது உயரமான மரக்ககிளைகளில் கூடுகட்டும், மேலும் கூட்டை சுற்றிசுற்றி வந்து நோட்டமிடும்.

பருந்தோ அல்லது காக்கையோ குஞ்சுகளை கொல்ல வந்தால் அதி விரைவாக பறந்து அவற்றின் முதுகில் தாக்கும், அவை பயந்து திரும்பி பறந்து போய் விடுமாம், பாதுகாப்பிற்காக இதன் கூடுகளுக்கு கீழேயே கூடு கட்டிக் கொள்ளுமாம் புறாக்களும் வேறு சில குருவிகளும். இதனால் இதற்கு சாத்தன் என்ற பெயர் வந்திருக்கலாம்" என்றார் தேக்கன்.

என்னுடைய அம்மாவிற்கு ரெட்டைவால் குருவி என்றால் மிகவும் பிரியம், அதை கண்டால் அதிர்ஷ்டம் என்பாள்.

எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கம்பத்தில் அடிக்கடி வந்து அமரும் அதை பார்த்தால், "அம்பாள் வந்துட்டா" என்று கன்னத்தில் போட்டுக் கொள்வாள்.

இது என் அம்மாவின் தனிப்பட்ட நம்பிக்கை என்று நினைத்திருந்தேன், ஆனால் சூழலியலாளரும் எழுத்தாளருமான மா. கிருஷ்ணன் தன்னுடைய நூலான மழைக்காலமும் குயிலோசையும் என்ற நூலில் இந்த குருவியை கண்டால் அதிர்ஷ்டம் என்று நினைப்போருக்காக தானே ஒரு நவீன கவிதையை எழுதி இருக்கிறார் :

வால் நீண்ட கருங்குருவி

வலமிருந்து இடஞ்சென்றால்

கால் நடையாய் சென்றவரும்

காரில் திரும்புவாரே ! என்று நகைச்சுவையாய் எழுதி இருக்கிறார்.

அடுத்து நாங்கள் கண்டது பார்ப்பதற்கு அழகாக கருப்பும் வெளுப்புமாக இருந்த ஒரு பறவை, அதன் பெயர் பட்டாணிச் சிட்டு என்று கூறினார் தேக்கன். இது சிலந்திகளையம் பூச்சிகளையும் விரும்பி உண்ணுமாம்.

அதை முதலில் காந்தளூர் வனப்பகுதியில் மட்டுமே பார்த்ததாக கூறினார் தேக்கன். அது பெரிய பூச்சிகளை பறக்கவிட்டு துரத்தி போய் பிடித்து வேட்டையாடுமாம், ஆங்கிலத்தில் இதை black lored tit என்று அழைப்பார்கள் என்றும் கூறினார்.

வெயில் உச்சிக்கு ஏறும் முன்பு நாம் விரைவாக கிளம்பினால் தான் சின்னாறு பகுதிக்கு சரியான நேரத்தில் போய் சேர முடியும் என்று எங்களை கிளம்பச் சொன்னார் தேக்கன் ஐயா.

20250714170538297.jpeg

நடுங்கும் குளிராக இருந்தாலும் குளிப்பது உடம்பை குளிர்விப்பது என்பதால் விரைவாக குளித்து தயாரானோம். சுடச்சுட ஒரு பொங்கலும் கேசரியும் வைத்தார்கள், அந்த கேசரி வித்தியாசமான சுவையுடன் அற்புதமாக இருந்தது.

விசாரித்ததில் அதில் மலரிதழ்களை சேர்த்து செய்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. எங்களுடைய உடமைகள் அனைத்தையும் எடுத்து ஜீப்பில் வைத்து விட்டு தங்குமிடத்திற்கு பிரியாவிடை கொடுத்து கிளம்பினோம்.

போகும் வழியில் ஒருவருக்கு சாப்பிட்ட பொங்கல் தொல்லை தர அவர் ஜீப்பை நிறுத்தத் சொன்னார், அப்போது ஜீப்பின் ஓட்டுநர் எங்களுக்கு எதிரில் இருந்த மலையில் யானை ஒன்று நின்று கொண்டு மரத்தை முறிப்பதை காட்டினார்.

எங்களிடம் தோலை நோக்கி இல்லாததால் தெளிவாக தெரியவில்லை என்றாலும் அது யானை தான் என்பது அது நகர்ந்த விதத்திலும் துதிக்கையை அது தூக்கி மரத்தை முறித்த விதத்திலும் தெளிவாக புலப்பட்டது.

அருகில் பார்க்க முடியாதது ஏக்கமாக இருந்தாலும் காட்டு யானைகளிடம் கவனமாக இருக்க வேண்டும் என்பதும் மிக முக்கியமல்லவா!

ஒரு யானையையாவது பார்த்து விட்டோம் என்று மகிழ்வாக இருந்தது. தொடர்ந்து பயணித்து மறையூர் சர்க்கரை ஆலை முன்பு போய் நின்றோம்.

2025071417071088.jpeg

காற்றில் கரும்பின் தித்திப்பு கமழ்ந்து வந்தது. உள்ளே ஒன்றிய அரசின் புவிசார் குறியீடு பெற்ற மறையூர் சர்க்கரை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. ரசாயன கலப்பில்லாத தூய சர்க்கரை அது, துளியளவு நமக்கு சுவைக்க கொடுத்தார்கள் இயக்கையான சுவையுடன் அற்புதமாக இருந்தது. இந்த சர்க்கரையின் சுவையை நம் தேக்கன் ,

"மறையூர் சர்க்கரையை துளியளவு ருசித்தால் ... வாயூரும் நீரை வயலளவுக்கு பாய்ச்சலாம்" என்றார், அந்த கூற்றில் துளி அளவு கூட பொய்யில்லை என்பேன். நம் கண் பார்க்கவே கரும்பின் சாறு வெல்லமாக காய்ச்ச படுகிறது.

நாட்டுச் சர்க்கரையில் சுக்கு கலந்தது, வாசனை பொருட்கள் கலந்த நாட்டுச் சர்க்கரை, தூய சர்க்கரை மற்றும் மண்டை வெல்லம் என்று பை நிறைய வாங்கி கொண்டு, வெளியில் விற்ற கரும்புச் சாறையும் ருசி பார்த்து விட்டே ஜீப்பிற்கு திரும்பினோம்.

வெயில் கொஞ்சம் கொஞ்சமாய் ஏறத் தொடங்கியது ஆனால் நாங்கள் போய் சேர்ந்த இடம் குளுமையும் இனிமையும் செறிந்த முல்லை நிலம் ....

தொடர்ந்து பயணிப்போம்......