தொடர்கள்
கல்வி
விலகும் மன அழுத்தம்- மரியா சிவானந்தம்

20250715192207864.jpg

சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் எட்டு லட்சம் மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள்.

இனி பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பொதுத்தேர்வு எழுத வேண்டி இருக்கும். இதே நேரத்தில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை "ஆல் பாஸ்" என்ற தற்போதைய நடைமுறையும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்ற அறிவிப்பும் வந்துள்ளது.

2021 ஆம் ஆண்டு தமிழக அரசால் அமைக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கென்று தனித்துவம் வாய்ந்த மாநில கல்விக் கொள்கையை வரையறை செய்ய நீதிபதி முருகேசன் தலைமையில், கல்வியாளர்கள், வல்லுநர்கள் அடங்கிய 14 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

தேசிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) லிருந்து, இந்த மாநில கல்விக் கொள்கை 2025 (SEP 2025) மாறுபட்டு, புதிய தொலை நோக்குடன் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இக்குழுவின் பரிந்துரைப்படி, தமிழ் பண்பாடு,கலாச்சாரம் இவற்றை உயர்த்திப் பிடிக்கும் வகையில் இருமொழிக் கொள்கை, கூடுதலாக தாய்மொழி கற்கும் வாய்ப்பு, மூன்றாம் வகுப்பு முடியும் முன் அடிப்படை அறிவை மேம்படுத்தும் (BLN) எண்ணும்,எழுத்தும் என்னும் திட்டம், மேல் வகுப்புக்கான STEAM (Science, Technology, Engineering, Arts, Mathematics), ஆகிய பிரிவுகளில், சிறப்பான விதத்தில் பயிற்றுவிக்கும் திட்டம் என பலவித திட்டங்கள் மாணவர்களை முன்னேற்றப் பாதையில் செலுத்தும் விதமாக தீட்டப்பட்டுள்ளன. அவ்வாறே கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளை கவனத்துடன் வழி நடத்துதல் இக்கொள்கையின் ஒரு பகுதியாகும்.

கல்வி டி .வி , மணற்கேணி ஆப் வழியாக 21 ஆம் நூற்றாண்டின் நவீன தொழிற்நுட்பங்களான AI , ரோபோடிக்ஸ், போன்றவற்றில் மாணவருக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. புத்தகங்கள் தரும் அறிவைக் கொடுக்கும் வகுப்பறை போலவே பரிசோதனைக் கூடங்கள் வழியாக கற்பிக்கும் கல்வி பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது.

இப்புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரையால் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை மாணவர்களும் , ஆசிரியர்களும் வரவேற்கிறார்களா என்று அறிய முற்பட்டோம்.

தி.பரமேசுவரி கல்வியாளர், சென்னை இது குறித்து கருத்து கேட்டோம்.அவர் சொல்கிறார்.

“இது நிச்சயமாக ஒரு அருமையான முடிவு. இதை மாணவர், ஆசிரியர், பெற்றோர் எல்லோரும் வரவேற்பார்கள்.

“பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு” என்பது இடையில் செருகப்பட்டதே. அது அமல் படுத்தப்பட்ட போதே அதை எதிர்த்தவர்கள் பலர். பத்து முதல் 12 ஆம் வகுப்பு வரை மூன்று பொதுத் தேர்வுகளுக்கு மாணவர் தயாரிக்கும் போது தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கடும் மன அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள். 11 ஆம் வகுப்பில், தோல்வி அடைந்தால் , அரியர் பேப்பர்களையும் அவர்கள் திரும்ப எழுத வேண்டும். இதனால் பிள்ளைகளின் மனஅழுத்தம் இரட்டிப்பாகிறது.

இந்த பொதுத்தேர்வு ரத்து அவர்களை அழுத்தத்தில் இருந்து சற்று விடுவிக்கிறது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை அணுகும் தன்னம்பிக்கையும், உறுதியும் பெறுகிறார்கள் . டீன் ஏஜ் குழப்பங்கள், பள்ளி மற்றும் பெற்றோரின் நெருக்கடி, தேர்வு குறித்த அச்சம் ஆகிய சங்கடங்கள் இதனால் குறைகிறது. 11 ஆம் வகுப்பில் கற்கும் அடிப்படை விவரங்கள் அவர்கள் அடுத்த வருடம் சிறப்பாக தேர்வுக்குத் தயாரிக்க போதும். அதை உறுதிப் படுத்துவது ஆசிரியர்கள் வசமே உள்ளது.

“1-8 வரை “ஆல் பாஸ்” சலுகையால் கல்வித்தரம் குறைந்துப் போவதாக ஒரு கருத்து நிலவுகிறதே.கணிதம், அறிவியல் மட்டுமன்றி மொழிப்பாடங்களிலும் மாணவர்கள் பின் தங்கி இருக்கிறார்கள். பனிரென்டாம் வகுப்புப் பாடங்களை பதினோராம் வகுப்பிலேயே ஆசிரியர்கள் நடத்துவதால் அவ்வகுப்புக்குரிய பாடங்களைப் படிக்காமல் விட்டு விடுகிறார்கள். இது போன்ற காரணங்களால் உயர்கல்வி கற்கும் போது அவர்கள் அடிப்படை அறிவு இன்றி சிரமப்படுவார்கள்” இல்லையா? “ என்று நாம் கேட்ட போது,

“ இதை ஆசிரியர்கள் தான் ஆர்வத்துடன் செய்ய வேண்டும். பொதுத் தேர்வு இல்லை என்பதால் அவ்வகுப்புக்குரிய பாடங்களை நடத்த வேண்டாம் என்பதில்லை. ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அவர்கள் நல்ல முறையில் பயிற்றுவிக்க வேண்டும்., வழி நடத்த வேண்டும். மாணவர்கள் முயற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். மேலும், மாணவரின் படைப்புத்திறன், உடற்பயிற்சி, விளையாட்டு இவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.

அதே போல் ஆல் பாஸ் என்பதால், எவ்வித சுணக்கமும் இன்றி பாடங்களைக் கற்பித்தல் ஆசிரியரின் கடமை. இந்த சலுகையால் கிராமப்புறங்களில் “இடை நிற்றல்” குறைந்துள்ளது.” என்றார்.

இவ்வித திட்டங்கள் , சலுகைகள் மாணவரின் கல்வி முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தீட்டப்படுகின்றன. ஆசிரியர் தரும் பயிற்சியிலும், மாணவரின் தொடர் உழைப்பிலும் அவை நல்ல பலனைக் கொண்டு வரும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

கல்வி என்னும் செல்வம் அனைவருக்குமானது அதைத் தடையின்றி தர உதவும் சலுகைகளை வரவேற்போம்.