இந்தியாவில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஶ்ரீகிருஷ்ணர் அவதரித்த தினத்தை நாம் கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடி மகிழ்கிறோம். இப்பண்டிகையைக் கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி போன்ற பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரின் பாதத்தைக் கோலமாகப் போடுவதின் மூலம் குழந்தை கிருஷ்ணன் தன் பிஞ்சுப் பாதங்களால் நடந்து நம் வீட்டுப் பூஜை அறைக்கு வருவதாக ஐதீகம்.
“பரித்ராணாய சாதுனாம் வினாஷாய ச துஷ்க்ரிதம்
தர்ம-ஸன்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே”
ஶ்ரீகிருஷ்ணர் “எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அங்கு அவதரிப்பேன் யுகம் யுகமாக” என்பது கீதாசாரம்.
கிருஷ்ணர், தீமைகளை அழித்து நன்மைகளை நிலைநாட்டுவதற்காக அவதாரம் எடுத்தவர் என்பதால் அவரை மனதார வழிபட்டால் நம் வாழ்வில் ஏற்படும் இன்னல் அனைத்து நீங்கி, கிருஷ்ணரின் அருளால் நன்மைகள் நடக்கும் என்பது நம்பிக்கை. மேலும் அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி அன்று வழிபடும் போது நமக்கு நல்ல ஞானமும், மனத்தெளிவும் கிடைக்கும்.
கிருஷ்ண ஜெயந்தி 2025:
துவாபர யுகம், ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியில் தேவகிக்கும், வசுதேவருக்கும் எட்டாவது குழந்தையாக ஶ்ரீ கிருஷ்ணர் அவதரித்தார். இந்த ஆண்டு (2025) ஆடி மாதத்திலேயே கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. அதாவது, ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் துவங்கும் நாளான ஆகஸ்ட் 16ம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.
குழந்தை கிருஷ்ணரின் பாத கோலம்:
ஒரு முறை நாரதர் ஒவ்வொரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோர் வீட்டிலும் கிருஷ்ணர் இருப்பதைக் கண்டு ஆச்சரியமுற்றார். அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியைச் சிவபெருமானே தரிசித்து பரவசமும், ஆனந்தமும் அடைந்தார். இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம் கிருஷ்ண பரமாத்மா.
நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன், காப்பேன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வொருவர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டைக் கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கிறோம். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தை கிருஷ்ணரின் கால் தடங்களை அரிசி மாவால் கோலமாகப் போடுகிறோம். ஏனென்றால் கிருஷ்ணனே தன் பிஞ்சுப் பாதங்களை வைத்து நடந்து, நம் வீட்டுப் பூஜை அறைக்கு வருவதாக ஐதீகம்.
கிருஷ்ண ஜெயந்தி பூஜைமுறை:
கிருஷ்ணர் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் மாலை முடிந்து இரவு ஆரம்பிக்கும் நேரத்தில் பூஜைகள் நடத்தப்படுகிறது. பூஜை அறையில் ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம் அல்லது படம் ஏதேனும் ஒன்றை வைத்து சந்தன குங்குமம் இட்டு, மாலை அணிவித்து அலங்காரம் செய்ய வேண்டும். விளக்கு ஏற்றி, ஸ்ரீகிருஷ்ணருக்குச் சொல்லப்பட்டிருக்கும் அஷ்டோத்திர (108) மந்திரங்களைச் சொல்லி ஒவ்வொரு மந்திரத்துக்கும் உதிரிப் பூக்களை ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம் அல்லது படத்திற்கு அர்ச்சிக்க வேண்டும்.
மந்திரம் சொல்ல நமக்குத் தெரியவில்லை என்றால் ‘ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’ என்ற நாமத்தைச் சொல்லலாம். அன்று பகவத் கீதை, கீத கோவிந்தம், ஸ்ரீமத் நாராயணீயம், கிருஷ்ண கர்ணாம்ருதம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்றவற்றை வாசிக்கலாம், தங்களுக்குத் தெரிந்த ஸ்ரீகிருஷ்ணர் பாடல்களைப் பாடலாம், அல்லது கேட்கலாம்.
பிறகு வெல்லச் சீடை, உப்புச் சீடை, முறுக்கு, தேன்குழல், லட்டு, திரட்டுப்பால், அதிரசம், அப்பம், வடை, பாயசம், அவல், நாட்டுச் சர்க்கரை, வெண்ணெய், தயிர் போன்றவற்றையும், பழ வகைகளில் நாவல், கொய்யா, வாழை, விளாம்பழம் போன்றவற்றை நைவேத்தியம் செய்த பின் கற்பூர தீபம் காண்பிக்க வேண்டும். இனிப்புகள், பலகாரங்கள் செய்ய முடியாதவர்கள் ஒரு பிடி அவல் மற்றும் சர்க்கரை கலந்து வைத்து வழிபடுவதாலும் கிருஷ்ணரின் அருளைப் பெற முடியும். நைவேத்திய பலகாரங்களைச் சிறு குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுப்பது, அந்த கண்ணனே நம்முடைய வீட்டிற்கு வந்து சாப்பிட்டதற்குச் சமமாகும்.
சிலர் தன் குழந்தைகளுக்கு பாலகிருஷ்ணன் வேடமிட்டும் வழிபாட்டில் இடம் பெறச் செய்கின்றனர். வீட்டில் பூஜை முடித்த பிறகு அருகில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தலாம்.
கிருஷ்ண ஜெயந்தி பூஜை பலன்கள்:
கிருஷ்ண ஜெயந்தி தினத்தில், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், ஸ்ரீமத் பகவத் கீதையில் உள்ள ‘தசம ஸ்காந்தம்’ படித்தால், குழந்தைச் செல்வம் தருவதுடன் சகல சௌபாக்கியங்களையும் அருளி முக்தி நலத்தையும் ஸ்ரீகிருஷ்ணர் தருவார். மேலும் மங்களகரமான பலன்கள் நமக்கு அனைத்தும் கைகூடும்.
கிருஷ்ண மந்திரம்:
"அச்சுதம் கேசவம் கிருஷ்ண தாமோதரம் ராம நாராயணம் ஜானகி வல்லபம்"
ஶ்ரீகிருஷ்ண காயத்ரி :
“ஓம் தேவகிநந்தனாய வித்மஹே,
வாசுதேவாய தீமஹி,
தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்.”
‘ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’
Leave a comment
Upload