-
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமே விசைத்தறி தொழில் தான்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதி மக்களின் வருமானம் சொல்லிக் கொள்கிறார் போல் இல்லை.
விசைத்தறி தொழில் நசிந்து போனதுதான். எனவே மக்களை வறுமை வாட்டி வதைக்கிறது.
அப்பாவி மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களுக்கு ஆசை வார்த்தை சொல்லி சட்டத்துக்கு புறம்பாக அவர்களது சிறுநீரகங்களை விற்று தங்கள் வறுமையை போக்கிக் கொள்ள பெரும்பாலான நெசவாளர்கள் ஈடுபட்டு வருவது தற்சமயம் தெரிய வந்திருக்கிறது.
சட்டத்துக்கு புறம்பாக இந்தப் பகுதியில் கிட்னி விற்பனை என்பது நீண்ட நாள் தொடர்கதை என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.
ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் கிட்டத்தட்ட 52 ஆயிரம் பேர் ஒரு கிட்னியை விற்று ஒரு கிட்னியுடன் வாழ்கிறார்கள். இவர்கள் பெரும்பாலோர் பெண்கள்.
பள்ளிப்பாளையத்தை அடுத்த அன்னை சத்யாநகர் பகுதியில் விசைத்தறி தொழிலில் ஈடுபடும் பெண்களின் வறுமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மூன்று லட்சம், ஐந்து லட்சம் என்று பேரம் பேசி சிறுநீரகங்கள் பெறப்பட்டு வந்துள்ளன .
அப்பாவிப் ஏழைகளுக்கு மூன்று லட்சம், ஐந்து லட்சம் என்று தந்து விட்டு அவர்களின் சிறுநீரகங்களை பிரபலமான மருத்துவமனைகள் சிறுநீரகம் தேவைப்படுபவர்களுக்கு 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை வாங்கிக் கொண்டு இந்த அப்பாவிப் பெண்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்திருக்கிறார்கள்.
இப்படி சிறுநீரக விற்பனைக்கு என்று அந்த பகுதியில் சில தரகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பேரம் மூலம் சில லட்சங்கள் கிடைக்கும்.
தரகர்கள் கிட்னி விற்பனை செய்த நபர்களிடமே உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் யாராவது தர தயாராக இருந்தால் அவர்களை அழைத்து வாருங்கள்.
உங்களுக்கும் தனியாக கமிஷன் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் சொல்லி இருக்கிறார்கள். அவர்களும் பணத்துக்காக இந்த வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த விஷயம் சமீபத்தில் சில தனியார் தொலைக்காட்சிகளில் ஆதாரங்களுடன் ஒரு செய்தி தொகுப்பாக வெளிவந்ததும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையில் எந்த அளவுக்கு உண்மை என்று விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த மோசடி கிட்னி திருட்டு வெளிவந்ததற்கே காரணம் ஒரு குறிப்பிட்ட நபரிடம் சிறுநீரகம் பெற்றுக் கொண்ட ஒரு மருத்துவமனை சொன்ன தொகையை தராமல் ஏமாற்றியதுதான் .பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக சுட்டிக்காட்டுவது ஆனந்தன் என்பவரை தான்.
இவர் திமுகவில் கழகப் பேச்சாளராகவும் இருப்பதால் இவர் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளூர் போலீஸ் தற்சமயம் யோசிக்கிறது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஆனந்த தற்சமயம் தலைமறைவாகி விட்டார்.
முதல் கட்ட விசாரணையில் தெரிந்தது பெரும்பாலும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பிரபலமான மருத்துவமனைகளில் இப்படி சட்டத்துக்கு புறம்பான சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு வரும்போது அவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு அப்பாவிகளுக்கு சில லட்சங்களை தந்து விட்டு பெரிய மருத்துவமனைகள் இந்த மோசடியில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான்.
இந்த விவகாரம் தற்சமயம் வெளிவந்ததை தொடர்ந்து விதிமுறைகளை சரிவர பின்பற்றாமல் உடல் உறுப்புகள் மாற்று என்று குற்றம் சுமத்தி ஈரோடு மற்றும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளை விசாரித்து அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கியதுடன் தற்போது அவர்கள் அறுவை சிகிச்சை செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கிறது .
இந்த கிட்னி திருட்டு என்பது ஈரோடு, சேலம், நாமக்கல் பகுதியில் ஒரு தொழிலாகவே நடக்கிறது என்கிறார்கள். பிரபலமான மருத்துவமனைகள் அரசு அலுவலர்கள் இடைத்தரகர்கள் ஒருங்கிணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு அவசியம் என்பது தான் சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
தமிழகத்தில் விவசாயத்துக்கு அடுத்து மிகப்பெரிய சமூகம் என்றால் அது நெசவாளர்கள் சமூகம் தான்,அவர்கள் தொழிலுக்கும் அரசாங்கம் முறையான செயல் திட்டத்தை உருவாக்கியதாக தெரியவில்லை.
இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகள் கொடுப்பது மட்டுமே அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தாது.
நூல் நூற்று துணி நெய்து நமது மானத்தை காப்பாற்றும் நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் சிறுநீரகம் விற்று பிழைப்பை நடத்தும் இடத்தில் தான் இருக்கிறது என்பது சமூக அவமானம்.
இதற்காகவே அரசாங்கம் வெட்கி தலை குனிய வேண்டும்.
Leave a comment
Upload