தொடர்கள்
கதை
நவராத்திரி காண்டம் - கொலு ஸ்பெஷல் - வி.பிரபாவதி

20250820065913251.jpeg

மஹாளயம் வரும்போதே வயற்றில் புளி கரைத்தது மகாதேவனுக்கு.

இருக்காதா பின்னே? என்னென்ன கூத்து நடக்கும் தெரியுமா? பாதி காய்கறிகள் சேர்க்க மாட்டாள் மரகதம். வெளிச்சாப்பாடு மூஊஊஊச்! ஒரு வேளைச் சாப்பாடுதான். பலகாரத்திற்கு மத்யான கொழம்பும், ரசவண்டியும் தான் சைட் டிஷ்!

அமாவாசைக்கு ரெண்டு நாள் முன்னாடி

கொலு வேறு வந்திடுமே. அப்பப்பா மரகதத்தின் கெடுபிடிகள் தாங்க முடியாது. சின்னப் பொடியனைத் தேடிக் கூட்டி வந்து பரணையில் ஏத்தி விடணும்.

“பாத்துடா, பத்ரமா, ஐயியோ அதப்புடிங்கோ, ஆட்டிடாம, சொல்லிட்டே இருக்கேனே, இந்தப்பக்கம் புடி, புடி, இங்க எறக்கு, அங்க எறக்குன்னு அம்மாடியோவ்!

சின்னதும் பெரிசுமாய் பொட்டி சட்டியெல்லாம் எறக்கியாச்சு.

ஆங்கில்ஸ் செட் பண்ணி ஸ்க்ரூ போட்டு முடுக்கி, இப்படி சாய்த்து, அப்படி சாய்த்து ஒன்னப்புடி, என்னைப்புடி என்று கொலு ஸ்டாண்டு செட் பண்ணியாச்சு.

குட்டிப் பையனும், அவனைக்கூட்டி வந்த பெரிய பையனும் மரகதம் கொடுத்த காபி, தட்டை, முறுக்கு தின்ற பிறகு கேட்டதை விட அதிகமாகவே பணம் வாங்கிக் கொண்டு செல்ல முயன்றனர்.

“அடேய், மணி, பரமு ரெண்டு பேரும் கொலு வச்சதும் வாங்க. சுண்டல் ஸ்வீட்டெல்லாம் தறேன். ஆங், மறந்துட்டேனே, விஜயதசமி ஆனதும் மறுபடி வந்து ரெண்டு பேரும் பொட்டியெல்லாம் மேல ஏத்திடுங்க சரியா” என்றாள் மரகதம்.

“ஸ்டான்டெல்லாம் பழையபடி பிரிச்சு அடுக்கிடுங்க, என்ன புரிஞ்சுதில்ல? என்றாள்.

“கண்டிப்பா வரோம் பாட்டி” சொல்லிக் கொண்டே கிளம்பினர். “நீங்க ரெண்டு பேரும் தப்பிச்சிட்டீங்க. என்ன பாடு படப்போறேனோ?” நினைப்பதற்குள் கையிலிருந்த தட்டையைப் பிடுங்கி வைத்தாள்.

“மசமசன்னு நிக்காம பொட்டிலேந்து பொம்மையெல்லாம் செட்டு செட்டா பிரிச்சு எடுத்து வைங்கோ. தலயப் புடிச்சுத் தூக்கி ஒடச்சுடாம, மெதுவா பாத்து எடுக்கணும் தெரிஞ்சுதா?” என்றாள்.

“அதெப்படி ஒரு வருடம் கூட ஒரு பொம்மையைக் கூட தொடாமல் விரட்டி விரட்டி வேலை வாங்குவதில் மன்னாதி மன்னி.

ஒவ்வொரு செட்டாக பொம்மைகளை எடுத்து அடுக்கினேன். தசாவதாரம், அஷ்டலக்ஷ்மிக்கெல்லாம் பின்னாடி நம்பர் இருக்கும்.

இதோ வேஷ்டிகளைப் போட்டு கொலு ஸ்டாண்டை மறைத்தாயிற்று. சீரியல் லைட்டுச் சரங்களை எடுத்து மரகதம் சொன்னபடி இப்படி இழுத்து அப்படி சுத்தி டேப் ஒட்டி ஸ்விட்சைப் போட்டதும் பளிச்சென எரிந்து என் வயிற்றில் பால் வார்த்தது.

இரவல் வாங்கிய இரண்டு ஸ்டூல்களை இரண்டு பக்கமும் போட்டு ஏறி இறங்கி பொம்மைகள் வைத்தாயிற்று. எத்தனை அட்ஜஸ்ட்மன்ட்! அப்பப்பா! “மரகதம் பொம்மையெல்லாம் போரும், இனிமே வாங்காத. நம்ப புள்ளையாண்டான் அமேரிக்காலேந்து வந்து இங்க கொலு வக்கப்போறானாக்கும். சொன்னா கேழு” என்றார்.

“நல்லக் கதையாயிருக்கே, நா இந்த தடவ அஷ்ட விநாயகர் செட் வாங்கலாம்னு இருக்கேன். குறுக்க வராதீங்க” என்று திட்டவட்டமாக! சொல்லிவிட்டாள்.

இப்போதான் ட்விஸ்டே! பார்க் வைக்க மண்ணுக்கு அலைஞ்சு கொண்டு வந்து கொட்டி பரப்பி, பொம்மைகள், வாகனங்கள், பறவைகள், மிருகங்கள், டான்ஸ் செட், பாட்டு செட், டிஸ்கோ க்ளப் செட்டுன்னு எல்லாம் செட்பண்ணிட்டு பதினோரு மணிக்கு வோலினி, மூவின் உதவியுடன் படுக்க வந்தால் மரகதத்தின் குறட்டை!

“ஐயோ எப்பிடித் தூங்குவேன்” வாய்விட்டுப் புலம்பினார் மகாதேவன்.

அதெல்லாம் கூட பரவாயில்லை, தினமொரு பட்டுப்புடவையும், நாளொரு ஆன்லைனில் வாங்கிய மேட்ச்சிங் மேட்ச்சிங் நகைகளும் போட்டு மினுக்கிக் வருவோர் எல்லோரிடமும்

“வருஷா வருஷம் இத வச்சு எடுத்து வைக்கறத்துக்குள்ள, அப்பப்பா இடுப்பே போகுது. போதும் போதும்னு தோனுது” என்று கூசாமல் சொல்லுவாள். இந்த டிவிஸ்ட் தான் வருடா வருடம் மகாதேவனை ஆச்சரியப்படுத்துகிறது.