தொடர்கள்
ஆன்மீகம்
நவராத்திரி நாயகியும்..! விஜயதசமியும்…!! - ஆரூர் சுந்தரசேகர்.

The heroine of Navratri..! And Vijayadashami…!!

உலகம் அனைத்தும் 'சக்தி மயம்' என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம்’ தர்மத்திற்கு எப்பொழுதெல்லாம் தீங்கு ஏற்படுகிறதோ அப்பொழுது பராசக்தி பல தோற்றங்களை எடுத்து அதர்மங்களை வீழ்த்தி தர்மத்தை நிலைபெறச் செய்திருக்கிறார். மகிஷாசுரனை வதம் செய்ய பராசக்தி எடுத்த அவதாரம் தான் ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி எனப் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
அசுரன் மகிஷாசுரனின் கொடுமைகளில் இருந்து இவ்வுலகைக் காப்பாற்றிய ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினிக்கு ஒன்பது நாட்கள் தொடர்ந்து பூஜை செய்து வழிபடும் தெய்வீகத் திருவிழா நவராத்திரி.
நவராத்திரி என்பது துர்கா தேவி போர் புரிந்த ஒன்பது நாள் இரவுகளையும், பத்தாம் நாள் அவர்கள் பெற்ற வெற்றியையும் குறிக்கிறது. ஆகவே ஒன்பது நாட்களை நவராத்திரி தினமாகக் கொண்டாடி பத்தாம் நாள் விஜய தசமியாகக் கொண்டாடப்படுகிறது.

The heroine of Navratri..! And Vijayadashami…!!

விஜய் – என்றால் வெற்றி; தசமி என்றால் – பத்து (தசம் = பத்து). இதனையே விஜய தசமி எனக் கொண்டாடுகிறோம். எனவே ஒன்பது நாட்களும் விரத மிருந்து வழிபடுவோர், பத்தாம் நாள் அன்னையின் வெற்றியைக் கொண்டாடி விரதத்தை முடித்துக்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

நவராத்திரி நாயகி ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி்:
மகிஷாசுரன் என்ற அசுரன் பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். அவனது தவத்தைக் கண்டு மனம் இரங்கிய பிரம்மதேவர், மகிஷாசுரனின் முன்பு தோன்றினார். அவரைக் கண்டதும் மகிஷாசுரன் தனக்கு மரணமில்லாத வரத்தைத் தருமாறு பிரம்மதேவரிடம் கேட்டான். உடனே பிரம்மதேவர்
“பிறந்த அனைவருக்கும் இறப்பு நிச்சயம். எனவே, வேறு வரம் கேட்கும்படி” கூறினார்.
மகிஷாசுரன் “பெண்கள் பலம் இல்லாதவர்கள் என்பதால் தன்னை அழிக்க முடியாது என்ற காரணத்தால் ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும்” என்று வரம் பெற்றான். எந்தப் பெண்ணிற்கும் எனையழிக்கும் அளவிற்கு வலிமையும், துணிவும் இல்லை என்ற எண்ணத்தில், தனக்கு அழிவே கிடையாது என்ற முடிவுக்கு வந்துவிட்ட மகிஷாசுரன் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என அனைவரையும் கொடுமைப்படுத்த ஆரம்பித்தான். மகிஷாசுரனின் தொல்லையால், தேவர்கள் அனைவரும் துன்பம் அடைந்தனர். துன்பம் எல்லையைக் கடந்ததால் தேவர்கள் அனைவரும் பிரம்மனின் ஆலோசனைப்படி சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
தேவர்களின் நிலையினை அறிந்த சிவபெருமான், பிரம்மனின் வரத்தின்படி மகிஷாசுரனின் அழிவு ஒரு பெண்ணால் தான் என்பதால் அவ்வரத்திற்கேற்ப ஒரு பெண் சக்தியின் அவசியத்தை அறிந்து, சிவன் தமது சக்தியை வெளிக்கொணர்ந்து ஒரு ஒளியை உருவாக்கினார். இதனைப் போன்றே பிரம்மா, விஷ்ணு தங்களது உடலிலிருந்து சக்தியினை வெளிக்கொணர்ந்து ஒரே வடிவில், ஒளிவடிவில் மூன்றும் ஒன்றாகக் கலந்தன. அந்த ஒளிப்பிழம்பில் இருந்து துர்காதேவி தோன்றினாள். மற்ற தேவர்களும் தங்களது படைக்கருவிகளை அவளுக்குக் கொடுத்து உதவினர் என்பதை மார்க்கண்டேய புராணமும், துர்கா சப்தசதியும் கூறுகின்றன.
துர்காதேவி அனைத்து தெய்வங்களிடம் இருந்து ஆயுதங்களைப் பெற்று, தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மகிஷாசுரனை அழிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்றாள்.

The heroine of Navratri..! And Vijayadashami…!!

துர்காதேவி, ஒன்பது நாட்கள் போரிட்டு பத்தாம் நாளில் எட்டுக்கரங்கள் உடைய துர்க்கையாக விஸ்வரூபம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்தார். கொடியவனான மகிஷாசுரன் அழிந்ததால் தேவர்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள். மகிஷாசுரனை வதம் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி” என்று துர்கையைப் போற்றினார்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் அவர் வெற்றி பெற்றதால் விஜயதசமி உருவானது. அந்த வெற்றித்திருநாளையே விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம்.

புராணத்தில் விஜயதசமி:
வால்மீகி ராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று இராமன், இராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்குப் புறப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

The heroine of Navratri..! And Vijayadashami…!!

மகாபாரதத்தில் அரசாட்சி, அதிகாரம், நாடு முதலானவற்றை இழந்த பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் அஞ்ஞானவாசம் முடிந்த பின் வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்த தங்களது ஆயுதங்களை வெளியே எடுத்து அர்ஜுனன் ஸ்ரீதுர்கையை வழிபட்ட நாள் வழிபட்ட நாள் விஜயதசமி.

விஜயதசமி மகிமை:
எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் நாம் வெற்றி பெற வேண்டும் என்றே எல்லோரும் ஆசைப்படுவோம். அந்த வெற்றியை நமக்குத் தரும் நாளே விஜயதசமி ஆகும். அன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும்.
விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு அக்ஷர அப்பியாசம் – எழுத்துப் பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது ஐதீகம். மழலை குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடனப் பயிற்சி, பிறமொழிப் பயிற்சி, புதிதாக ஒரு தொழிலைக் கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் மிகுந்த பலனைத் தரும். இதைத்தவிர எந்தவொரு சுப நிகழ்ச்சியைத் தொடங்கினாலும் அதில் சுலபமாக வெற்றி பெறலாம். மேலும் நிறுவனங்களில் புதிய கணக்கு தொடங்குதல், புதிய முயற்சி எடுத்தல், ஒப்பந்த பேச்சு வார்த்தை போன்றவற்றையும் ஆரம்பிக்கலாம்.

The heroine of Navratri..! And Vijayadashami…!!

மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம்:
அசுரனை அழித்த ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினியின் கோபத்தைச் சாந்தப் படுத்த இந்த ஸ்லோகம் பாடப்பட்டது…ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி ஸ்லோக பாடல் சில வரிகள்…
“அயிகிரி நந்தினி நந்தித மேதினி விச்வ வினோதினி நந்தநுதே கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி பூரிகுடும்பினி பூரிக்ருதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே”
பொருள்: மலையரசனின் மகளே, உலகை மகிழ்விப்பவளே, விளையாட்டாக உலகை நடத்திச் செல்பவளே, நந்தனால் வழிபடப்பட்டவளே, சிறந்த மலையான விந்திய மலையில் உறைபவளே, திருமாலுக்குப் பெருமை சேர்ப்பவளே, வெற்றி வீரர்களால் துதிக்கப்படுபவளே, பகவதி, நீலகண்டரின் பத்தினியே, உலகமாகிய பெரிய குடும்பத்தை உடையவளே, அரியவற்றைச் சாதிப்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
இந்த ஸ்லோகத்தை நவராத்திரியின் ஒன்பது நாட்கள் மற்றும் விஜயதசமி அன்று துதித்து வழிபடுவது மிகவும் விசேஷமானது. மகிஷாசுரமர்தினி ஸ்லோகம் ஒலிக்குமிடங்களில் எல்லாம் அன்னை மகாசக்தி எழுந்தருளி அருள் செய்வாள்.

The heroine of Navratri..! And Vijayadashami…!!

ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி காயத்ரீ
(துயரம் நீங்கி செல்வம் பெருக)
''ஓம் மகிஷாசுரமர்த்தினி ச வித்மஹே,
விஸ்வ விநோதின்யை க்ருஷ்ணப்ரியாய ச தீமஹி
தந்நோ துர்க்கா ப்ரசோதயாத்"
(மகிஷனை அழித்த விஷ்ணுவின்
பத்தினியே வறுமை துயரம்
துடைப்பாய், வரமருள் துர்க்கையே.)

என்ற மகிஷாசுரமர்த்தினி காயத்திரியைச் சொல்லி வணங்குவோம் ஞானத்தையும், வெற்றிகளையும் பெறுவோம்.

விஜயதசமி அன்று சக்தியை வழிபட்டு, வாழ்வில் வளம் பெறுவோம்!!
ஓம் சக்தி.. பராசக்தி…