
அது அந்த நகரின் பிரபலமான பள்ளி.அந்த பள்ளியின் ஹிந்தி டீச்சர் இந்த மாதம் மூன்றாவது முறையாக கீதாவை வந்து பார்க்கச் சொல்லி இருக்கிறார். அரை மணி நேர காத்திருப்புக்குப் பிறகு ஹிந்தி டீச்சரின் அறைக்குள் தன் மகள் மலருடன் நுழைந்தாள் கீதா. மலர் அந்தப் பள்ளியில் முதல் வகுப்பில் படிக்கிறாள்.
உள்ளே போனவளை எதிரில் இருந்த நாற்காலியில் அமரக் கூடச் சொல்லவில்லை அந்த டீச்சர். ’ஹிந்தி பாடத்தில் மலர் நன்றாக படிக்கவில்லை” என்ற ஒற்றை புகாருக்குத்தான் இந்த அழைப்பு.
’எனக்கு ஹிந்தி தெரியாது. அதனால் அவளுக்கு என்னால் வீட்டில் சொல்லிக் கொடுக்க முடியவில்லை.நீங்கள்தானே சொல்லிக் கொடுக்கவேண்டும்.அதுதானே உங்கள் வேலை.’என்று மனதில் சொல்லிக் கொண்டே,’ நீங்கள் வேண்டுமென்றால் பள்ளி நேரத்திற்கு பின்பு கூடுதல் சிறப்பு வகுப்பு…..’ என்ற சொல்லத் தொடங்கிய கீதாவின் பேச்சினை சட்டென நிறுத்தச் சொன்னாள் ஹிந்தி டீச்சர் அர்ச்சனா.
’எனக்கு வேறு வேலை இல்லையா?’ என்ற ஹிந்தி டீச்சர், ’நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது. அடுத்த மாத டெஸ்ட்டில் உங்கள் மகள் 60 மார்க்குக்கு மேல் எடுக்கனும். அதற்கான வேலையைப் பாருங்க” என்று சொல்லிவிட்டு அடுத்த பெற்றோரை உள்ளே வரச்சொன்னார்.
ஹிந்தி டீச்சரின் புகாருக்கு ஒரு விளக்கத்தையும் கொடுக்க முடியாததை எண்ணி வருத்தப்பட்டாள் கீதா.’இந்தப் பள்ளியில் 2 லட்சம் நன்கொடை வேறு கொடுத்து தன் மகளுக்கு சீட் வாங்கியது வீண்’ என மனதுக்குள் புழுங்கினாள்.
வெளியே இருந்த அலுவலக ஊழியர் ஒருவர்,’அந்த டீச்சர் பள்ளி நிர்வாகியின் மருமகள்மா. எல்லா பெற்றோரிடமும் இப்படித்தாம்மா நடந்துக்கறாங்க. வேணும்னா நீங்க முதல்வர் கிட்ட போய் பேசிட்டு போங்க’ என்று ஓர் ஐடியாவைக் கொடுத்துவிட்டு,வேறு வேலையை பார்க்கப் போனான். அவர்கள் மாமியார்,மருமகள் என்னும் கூடுதல் விவரம் அவளுக்கு பயனுள்ளதாக இருந்தது.
பள்ளியில் சேர்ந்து மூன்று மாதத்திலேயே ஹிந்தியை சரளமாக எழுதுவது ஒரு முதல் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு சாத்தியமா? எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு வந்தால் எதற்கு பள்ளி?எதற்கு டீச்சர்? என்று புலம்பிக் கொண்டே முதல்வரை பார்க்க காத்துக் கொண்டு இருந்தாள் கீதா.
அவளுடைய பெண் மலர்,’ வேண்டாம்மா. வீட்டுக்கு போயிடலாம். நாளைக்கு கிளாஸ்ல அந்த டீச்சர் என்னை வெச்சு செஞ்சுடுவாங்க’ என்று கெஞ்சினாள். கீதா அவளின் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கீதா முதல்வரின் அறைக்குள் சென்றாள் கீதா. தன்னை அந்த பள்ளியின் ஒரு பெற்றோர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவள்.’எனது தாய், தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. உங்கள் கணவரின் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். அவருடைய அப்பாயிண்ட்மெண்ட்டை வாங்கித் தரமுடியுமா?’என்று கேட்டாள்.
’நல்ல வருமானம் வருகிறது’ என்று நினைத்துக் கொண்ட பள்ளியின் முதல்வர் தன்னுடைய கணவனுடன் கைப்பேசியில் பேசினாள். கணவன் மருத்துவரும் மனைவியின் அழைப்பு என்பதால் உரிய மரியாதையைக் கொடுத்து அழைப்பினில் உடனே வந்து பேசினான். கீதாவின் பெற்றோர்களுடைய நோய்களைப் பற்றி கேட்டறிந்து, அவள் சொன்ன தகவல்களை தன் கணவனுடன் ஆர்வத்துடன் பரிமாறிக் கொண்டாள்.
உடனே சில இரத்த பரிசோதனைகளை வாட்ஸ் அப்பில் அனுப்பிவைத்தார் அந்த மருத்துவர். அதன் முடிவுகளுடனும்,நோயாளிகளுடனும் அடுத்தநாள் மாலை 4 மணிக்கு அவரை மருத்துவமனையில் பார்க்கச் சொல்லி கைப்பேசியை வைத்து விட்டார் அந்த டாக்டர் கணவன்.
கணவர் சொன்ன தகவல்களை கீதாவிடம் சொன்ன முதல்வர்,’ இதுக்குத்தான் வந்தீங்களா? இல்ல, பள்ளிக்கு வேறு வேலையாக வந்தீங்களா? வந்த வேலை முடிந்துவிட்டதா?’என்று அக்கறையுடன் அவளிடம் கேட்டார் பள்ளி முதல்வர்.
ஹிந்தி ஆசிரியர் அவளிடம் செய்த அலப்பரைகளை போட்டு உடைத்தாள் கீதா.
’சரி. சரி. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொன்ன முதல்வரிடம், கீதா,’ என்னுடைய பெற்றோர்கள் உங்கள் மருத்துவமனைக்கு நோயாளியாக வர வேண்டுமா? நோய் தீர்ந்த பிறகு வர வேண்டுமா?’ என்று கேட்டு வைத்தாள்.
முதல்வரின் மனதில் ஏதோ உரைத்தது. அடுத்த நிமிடம் அர்ச்சனாவிற்கு அழைப்பு சென்றது. அர்ச்சனாவிற்கு அவளுடைய அறையில் அர்ச்சனை தொடங்கி விட்டது.’அர்ச்சனாவுக்கு அர்ச்சனை’ என்று அம்மாவிடம் சொல்லிக் கொண்டே அம்மாவுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தாள் மலர்.ஆனால்,கீதாவின் மனதிற்குள் இது மாமியார்- மருமகள் சண்டையாகுமா?முதல்வர்-டீச்சர் சண்டையாகுமா?என்ற ஐயம் மனதில் தொடங்கியது.அடுத்த முறை அவள் பள்ளிக்கு போன போது புது ஹிந்தி டீச்சர் சிரித்துக் கொண்டே அவளை வரவேற்றாள்.

Leave a comment
Upload