தொடர்கள்
பொது
  அமெரிக்க கடற்கரையில் சர்வதேச மணல் சிற்ப திருவிழா- சரளா ஜெயப்ரகாஷ்

2025924114721719.jpg

சர்வதேச மணல் சிற்ப திருவிழா,அமெரிக்காவில் பாஸ்டன் நகருக்கு அருகில் உள்ள ரிவியர் (Revere) கடற்கரையில், கடந்த ஜூலை மாதத்தில் நடந்தது. இங்கு உலகப் புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞர்கள் தங்களின் அரிய கலைத்திறனை வெளிப்படுத்தி, நுண்மணலால் சிற்பங்களை உருவாக்குகிறார்கள். இதனைக் காண வருடா வருடம் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகின்றார்கள். இந்தத் திருவிழா 2004 ல் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த விழா வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் கொண்டாட்டமாக உள்ளது.

இந்த விழா, அமெரிக்காவில் மற்ற சில இடங்களில் நடைபெறும் மணல் சிற்ப திருவிழாவைவிட மிகவும் புகழ் பெற்றதாகவும் மதிப்பு மிக்கதாகவும் திகழ்கின்றது. அதற்கு காரணம் இந்த ரிவியர் கடற்கரையாகும். இந்த இடம் பொழுது போக்கிற்கு ஒரு முன் உதாரணமாக விளங்கப்படுகின்றது.இந்த கடற்கரை, பொதுமக்கள் வருகைதரும் முதல் கடற்கரையாகும். பல ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் உள்ள அதிகமான கடற்கரைகள் எல்லாம் தனியாருக்கு சொந்தமாகவோ அல்லது மக்கள் அந்த இடத்திற்குப் போக வசதிகள் இல்லாமலோ இருந்தன. முதன்முதலாக இந்த கடற்கரைக்குத்தான் மக்கள் எளிதாக வந்து போகும் வகையில் ஏற்பாடுகள் அமைத்து கொடுக்கப்பட்டன. இந்த கடற்கரை இருக்கும் ரிவியர் நகரத்தில்தான் பால் ரிவியர் (Paul Revere) எனும் புகழ் வாய்ந்த சுதந்திர போராட்டத் தலைவர் இருந்தார். அவருடைய நினைவாகத்தான் அந்த இடத்திற்கு ரிவியர் என பெயர் சூட்டப்பட்டது.

இவற்றால் இந்த இடம், மற்ற இடங்களை விட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த கடற்கரை பரந்து விரிந்து இருப்பதால் பொதுமக்கள் வருகை தர சௌகரியமாகவும் உள்ளதால், மணல் சிற்ப திருவிழா வருடா வருடம் இங்கு நடக்கின்றது.

இந்தத் திருவிழா,தொழில் சார்ந்த போட்டியாகவும்,பொது விழாவாகவும் கொண்டாடப்படுகின்றது. நான் இந்த ரிவியர் கடற்கரைக்கு நேரில் சென்று, போட்டியில் இடம் பெற்ற மணல் சிற்பங்கள் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்தேன். நம் நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு அச்சுகளின் மூலம் களிமண்ணால் விநாயகர் சிற்பங்களை உண்டாக்குவோம். ஆனால் இங்கு வெறும் மணலையும் தண்ணீரையும் பிரதானமாக வைத்து இவ்வளவு அழகான மணல் சிற்பங்களை உருவாக்கி இருந்ததை கண்டு ஆச்சரியமாக இருந்தது. நம் நாட்டிலும் ஒடிசா,மைசூர் ஆகிய இடங்களில் இது போன்ற மணல் சிற்பங்கள் கலைஞர்களால் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அவை பெரும்பாலும் கடவுள் அல்லது பண்டிகை காலத்திற்கு தொடர்புடைய உருவங்களாக இருக்கின்றன. ஆனால் இங்கு, மன உணர்வுகளை மணல் சிற்பங்களின் மூலம் தத்ரூபமாக வெளிப்படுத்தி இருந்தது என்னை மெய்சிலிர்க்க வைத்தது. காகிதத்தில் வரைந்தது போல சிக்கலான வடிவமைப்புகளையும், துல்லியமாக குறுமணலில் செதுக்கி இருந்தது அற்புதமாக இருந்தது. பிறகு இவற்றைப் பற்றிய விவரங்களையும் சேகரித்தேன். அவை சுவாரஸ்யமாக இருந்தன.

ஒவ்வொரு வருடமும் மணல் சிற்பக்கலை போட்டிக்கு ஒரு தலைப்பு கொடுக்கப்படும். அந்த தலைப்பின் அடிப்படையில் மணல் சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன. அமெரிக்காவுக்கு சுதந்திரம் கிடைத்து, தற்போது 250 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதன் நினைவாக இந்த வருடம் American Revolution (அமெரிக்க புரட்சி) என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

போட்டியில் பங்குபெற்ற கலைப்படைப்புகளில், பெரும்பாலானவை மறைமுகமாக சுதந்திர உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தன. இவற்றில் சில முக்கியமான மணல் சிற்பங்களை இங்குப் பார்க்கலாம்.

2025924115313854.jpg

படம் :1

இந்த சிற்பத்தில் பால் ரிவியர் (Paul Revere) குதிரை சவாரி செய்வது போல செதுக்கப்பட்டிருந்தது. Paul Revere’s Midnight Ride என்னும் அமெரிக்க புரட்சியின் ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வை இது குறிப்பிடுகின்றது.

இந்த சிற்பம் போட்டியில் இடம் பெறவில்லை. இது விழாவின் அடையாள சின்னமாக (Logo) இருந்தது.

முதல் பரிசு- Delicate Balance (நுட்பமான சமநிலை)

2025924115417311.jpg2025924115503658.jpg

படம் -2

இதன் சிற்பி கனடா நாட்டைச் சேர்ந்தவர். இந்த சிற்பம், அமெரிக்கப் புரட்சியின் போது இருந்த பயம் மற்றும் நம்பிக்கை ஆகிய இரண்டையும் சமநிலைப்படுத்திய மனநிலையை வெளிப்படுத்தியது.

சிறுமி ஊதும் விதைகள் போல, சுதந்திரக் கனவுகள் மென்மையாக மக்களின் சிந்தனையில் பரவி, புதிய எதிர்காலத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்தின. ஒரு மண்டையோடு வடிவமும் இருந்தது. இதன் அர்த்தத்தை கலைஞர் நேரடியாக உணர்த்தவில்லை என்றாலும், அது வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை குறிப்பிடுவதாக இருந்தது.

இதனைப் பார்த்தவுடன், மகாகவி பாரதியார் தன் பாடல்களின் மூலம் படிப்படியாக மக்களின் மனதில் சுதந்திர எழுச்சியை ஏற்படுத்தியது என் நினைவிற்கு வந்தது.

2025924115609349.jpg

இரண்டாம் பரிசு – Deep Sleep (ஆழ்ந்த தூக்கம்)

படம் -3

இதனை உருவாக்கியவர் போலந்து நாட்டைச் சேர்ந்தவர். இது கடினமான பயணத்திற்கு பின் வரும் அமைதியை உணர்த்துகிறது.
விடுதலைக்காக பல ஆண்டுகள் நடந்த போராட்டத்திற்குப் பின் கிடைத்த ஓய்வையும் நிம்மதியையும் பிரதிபலிக்கும்விதமாக இந்த சிற்பம் இருந்தது.

இதற்கு சரியான உதாரணமாக என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு இருந்தது. என் மகள் பன்னிரண்டாவது வகுப்பின் பொதுத்தேர்வின் கடைசித்தேர்வு அன்று, நுழைவுச்சீட்டை முன்தினம் தேர்வு அறையிலேயே தவறவிட்டு வந்ததை நள்ளிரவுதான் கவனித்தோம். தேர்வு எழுதும் பள்ளி, அவள் படிக்கும் பள்ளியல்ல. அது வீட்டில் இருந்து சற்று தொலைவில் இருந்தது. மறுநாள் காலை நான்கு இடங்களுக்கு அலைந்து, புதிய நுழைவு சீட்டை எடுத்து, தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து வாங்கி, என் மகள் கடைசி மாணவியாக தேர்வு அறையில் நுழைந்து எழுதி முடித்தாள். அன்று இரவு நான் தூங்கி, காலையில் எழுந்த பிறகு தெரிந்து கொண்டேன் ஆழ்ந்த தூக்கம் என்றால் என்னவென்று.

2025924115702749.jpg

மூன்றாம் பரிசு- I see you( Can you see yourself ?)

நான் உன்னை பார்க்கிறேன் (நீ உன்னை பார்க்கிறாயா?)

படம் -4

இதன் சிற்பி கனடா நாட்டை சேர்ந்தவர்.இந்த கலைப்படைப்பு, பிறர் பார்வையில் நம்மைத் தேடுவதிலிருந்து, நம்மை நாமே நேசிக்கக் கற்றுக்கொள்வதற்கான பயணத்தை குறிக்கிறது.

ஒரு கண் வடிவத்திற்குள் தாய்-குழந்தை உருவமும், அதன் எதிரில் ஒரு இளம்பெண், அதனைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவும் சிற்பங்கள் இருந்தன. தாயின் அன்பிற்காக ஏங்கும் குழந்தையின் உணர்வையும், அதன் மூலம் சுய அன்பைக் கண்டுபிடிக்கும் வலிமையையும் வெளிப்படுத்துகிறது.


ஒரு நாடு தன் அடையாளத்தையும் சுயமரியாதையையும் கண்டுகொள்வது போல, இது சுயஅறிவு மற்றும் சுயவலிமை பற்றிய செய்தியைப் பகிர்கிறது.

என் தோழி அவள் திருமணத்திற்குப் பிறகு, மாமியாரிடம் தாயின் அன்பை எதிர்பார்த்து எதிர்பார்த்து, பல வருடங்கள் கழித்தும் கிடைக்காமல், அதற்காக வருந்துவதை விட்டுவிட்டு, அவள் சுய வலிமையை வளர்த்துக் கொண்டாள். இந்த சிற்பத்தைப் பார்த்தவுடன், அதுதான் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.

வெற்றி பெற்ற இந்த மூன்று படைப்புகளும் நேரடியாக அமெரிக்க விடுதலைப் போரின் காட்சிகளைச் சொல்லாவிட்டாலும், அதைச் சார்ந்த நம்பிக்கை, அமைதி, சுய வலிமை போன்ற உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இருந்தன.

2025924115842564.jpg

படம் -5

Catch your dreams (உன் கனவுகளை நனவாக்கு)

இந்த சிற்பத்திற்கு எந்த பரிசும் கிடைக்கவில்லை. ஆனால் இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் இருந்த துல்லியமான வெட்டுகள், வளைவுகள் என்னை மிகவும் கவர்ந்தன.

முயற்சி,கவனம் மற்றும் நம்பிக்கையுடன் நமது கனவை நனவாக்கலாம் என்பதனை இந்த சிற்பம் உணர்த்துகின்றது.

“கனவு காணுங்கள்; அந்த கனவு நனவாக்க உழையுங்கள்” என்ற அப்துல் கலாம் ஐயாவின் வாசகமும் இதனையே ஒத்து உள்ளன.

படம் -6

2025924115947793.jpg

உயர்ந்த இந்த கலைப் படைப்புகளை எல்லோராலும் எந்த கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக பார்க்க முடிவது இந்த மணல் சிற்பத் திருவிழாவின் சிறப்பு அம்சமாக விளங்குகின்றது. நேரடி இசை, உணவு கடைகள், உணவு வண்டிகள், பட்டாசுகள் வெடிக்கும் நிகழ்வு ஆகியனவும் இந்த விழாவில் இடம்பெற்றன. பெரிய கடற்கரை, உலகத்தரம் வாய்ந்த கலைத்திறன், பாஸ்டனின் கலாச்சார பாரம்பரியம் ஆகிய அனைத்தும் சேர்ந்து இந்த ரிவியர் கடற்கரையை ஒரு மறக்க முடியாத இடமாக வட அமெரிக்காவில் மணல் சிற்பத்திற்கு விளங்குகின்றது.

பாஸ்டனுக்கு அருகில் உள்ள மாநிலமான நியூ ஹாம்ப்ஷயர் (New Hampshire) -ல் உள்ள மணல் குவாரியிலிருந்து மிக நுண்ணிய மணல் இங்கு கொண்டு வரப்படுகின்றன. மிக நுட்பமான வடிவங்களை உருவாக்க, குறிப்பாக சிற்பங்களில் துல்லியமான வெட்டுகளை தக்க வைக்க இந்த குறுமணல் உதவுகின்றது. இது கடற்கரை மணலை விட மெல்லியதாக இருக்கும்.

குழந்தைகள் கடற்கரைக்கு வரும்போது,வாளி எடுத்துச் சென்று மணல் வீடு கட்டுவது போல, சிற்பிகளும் வாளி மற்றும் வேறு சில பொருட்கள் மூலம் மணலைப் போட்டு, மரம் அல்லது பிளாஸ்டிக்கால் ஆன சட்டத்தை வைத்து ஒரு திடமான அடித்தளத்தை சிற்பம் செய்ய உருவாக்குகிறார்கள்.

மணல் சிற்பங்களை செதுக்க கொத்தனார் உபயோகிக்கும் சாதனங்களையே சிற்பிகளும் உபயோகப்படுத்துகிறார்கள். கரணை, மண்வெட்டி, எண்ணெய் வண்ண ஓவியங்களுக்கு (oil painting) பயன்படுத்தும் கலவை கரண்டிகள், கத்தி ஆகியவற்றை அவர்கள் உபயோகிக்கிறார்கள்.

சிற்பிகள், இந்த மணலில் சிற்பங்களை உருவாக்கும் போது சிறு தவறு செய்துவிட்டாலும், அந்தப் பகுதி கீழே விழுந்து விடும். அப்படி விழுந்துவிட்டால், அந்தப் பகுதியில் மீண்டும் மணல் சேர்த்து செய்வது கடினம். செதுக்கும்போது ஒவ்வொரு படியிலும், ஒவ்வொரு கண நேரமும் நூறுசதவிகித கவனம் அவர்களுக்கு இருக்க வேண்டும். மணலை ஒவ்வொரு அடுக்காக நெருக்கி, நெருக்கி செதுக்க வேண்டும். சிற்பிகள், இவ்வளவு கடினமான வேலையையும் உணர்ந்து அழகாக வடிவமைக்கிறார்கள். இந்த மணல் சிற்பங்களை “அழகான ராட்சசி” என குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

சிற்பிகள், சிற்பங்களை செதுக்கும் போது பெரும்பாலும் மேல் இருந்து ஆரம்பித்து கீழ் வரை செல்கிறார்கள். மழைத்தூறலால், சிற்பங்கள் பாதிக்கப்படாமல் நிலையாக இருக்க, அவற்றின்மேல் நீர்த்த பசையை தெளித்து வைக்கிறார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தார்ப்பாய் அல்லது கூடாரம் போட்டும் மணல் சிற்பங்களை மூடி, மழையிலிருந்து அவற்றை பாதுகாக்கிறார்கள். ஆனால் பலமான மழை அல்லது காற்று இருந்தால் எதுவும் செய்ய முடியாது.

இரவில் கடற்கரைக்கு மேலே வானத்தில் வான வேடிக்கைகளை கண்டுகளிக்கலாம். பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் குதூகலிக்க கூடிய ராட்சத ராட்டினம் (ferris wheel) , சுற்றுச்சந்தி (carousel) உட்பட பல பொழுதுபோக்கு சவாரிகள் (amusement rides), பல வகையான விற்பனைப் பொருட்களை கொண்ட கடைகள், பல்சுவை உணவு கடைகள் என பொழுது சாயும்போது இந்த இடம் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக இருக்கும்.

சாயந்திர வேளையில் இத்தனை குதூகல நிகழ்வுகள் இருந்தாலும், காரை நிறுத்துவது (Parking) கடினம் என்பதால், நான் என் குடும்பத்தினர் மற்றும் மூன்று நண்பர்களின் குடும்பத்தார்களுடன் காலை 8:00 மணிக்கே கடற்கரைக்குச் சென்று விட்டேன். வெயில் இல்லாமல் வானம் மந்தமாக இருந்தது. இரவு நேரத்தில் இருக்கும் பொழுதுபோக்கு அம்சங்களை தவற விட்டாலும், அந்த காலைப் பொழுது இனிமையாக இருந்தது. காலையில் மக்கள் குறைவாக இருந்ததால் என்னால் ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனிக்க முடிந்தது.

2025924120151777.jpg

படம் -7

மணல் சிற்பங்களை ஆர்வத்துடன் பார்வையிட்டு, புகைப்படங்கள் எடுத்தேன். மொத்தம் 11 சிற்பங்கள் இருந்தன. ஒவ்வொரு சிற்பத்தைச் சுற்றிலும் தடுப்புகள் போடப்பட்டிருந்தன. கடற்கரை மணலில் நண்பர்கள் குடும்பத்தினருடன் பந்து விளையாடினேன். தோழி ஒருவர் கொண்டுவந்த பிரெஞ்சு டோஸ்ட் (French toast) மற்றும் தர்பூசணி பழத்துண்டுகளை அனைவரும் சாப்பிட்டோம். சிறிதுநேரம் கலகலப்பான அரட்டை நடந்தது. பின்னர் மணலில் சிறிது தூரம் காலாற நடந்து விட்டு வந்தேன். கரையில் ஒதுங்கியிருக்கும் உயிரற்ற நண்டை நண்பரின் பிள்ளைகள் கையில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அங்கே விமானம் தாழப் பறந்து கொண்டிருந்தது.

படம் -8

202592412025767.jpg

கரையில் ஆங்காங்கே சீகல் பறவைகள் காணப்பட்டன. சில அங்கும் இங்குமாக பறந்து கொண்டிருந்தன. கரையோரம் அதிகமாக இருந்த கிளிஞ்சல்கள், கடற்கரையை ஒட்டி உள்ள உயரமான கட்டிடங்கள் என காண்பவை அனைத்தும் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தன. 2025 ஆம் ஆண்டின் ரிவியர் கடற்கரையில் நடந்த மணல் சிற்பக்கலை போட்டியின் வெற்றியாளர்கள், American Revolution என்ற தலைப்பை தங்கள் தனித்துவமான கலைமொழியில் புதிதாகப் படைத்திருந்தனர்.

மணலும், கற்பனையும் சேர்ந்து உருவாக்கப்படும் இந்த அற்புதமான கலைப் படைப்புகள், பார்வையாளர்களுக்கு ஆழமான சிந்தனையை கொடுக்கின்றது மற்றும் இந்த திருவிழா மக்களுக்கு என்றும் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய மகிழ்வான நிகழ்வாகவும் இருக்கின்றது.

பி.கு: அப்படியே நம்ம ஐயாவிடம் (AI) விகடகவியாரையும் மணலிலே ஒரு சிற்பமாக வடிக்க முடியுமா என்று கேட்டதில் இப்படி வந்தது. இருந்தாலும் மனிதர்கள் செய்யும் அசல் சிற்பம் போல வராது போல.......

2025924184437385.jpeg