
இந்தியாவில் இன்றுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியாத ரகசியங்களை கொண்ட பல கோயில்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ளன. இந்த ரகசியங்களைக் கண்டு, வெளிநாட்டவர்களும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற பஞ்ச பூதங்கள் மற்றும் நவக்கிரகங்களின் சக்திகளை வெளிப்படுத்தும் விதத்தில் முன்னோர்களால் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவை காலம் காலமாக மக்களின் பல்வேறு சிக்கல்களை, நம்பிக்கை மற்றும் பிரார்த்தனைகளின் மூலம் தீர்ப்பதை அன்றாட வாழ்வில் பலரும் உணர்ந்திருக்கிறார்கள்.

மழை வருமா? வராதா? என்பதை பொதுவாக எல்லோரும் வானத்தைப் பார்த்து அறிவதுதான் வழக்கம். ஆனால், ஒரு ஊரில் உள்ள மக்கள் வானத்தைப் பார்க்காமல், அங்குள்ள கோயிலுக்குச் சென்று அறிந்துக்கொள்வார்கள்
மழை அளவைக் கணிக்கும் அந்த அதிசய ஜெகந்நாதர் கோயில் உத்தரபிரதேசம் கான்பூர், பிதார்கவான் பெஹதா என்ற இடத்தில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் வருடங்கள் பழைமையான இந்தக் கோயிலின் மேற்கூரையிலிருந்து வருடா வருடம் திடீரென நீர் சொட்டுகிறது. சொட்டும் நீரின் அளவை வைத்து, அந்த ஆண்டின் மழைப்பொழிவு எப்படி இருக்கும் என்பதை உள்ளூர் மக்கள் கணிக்கின்றனர். இந்த அதிசய நிகழ்வால், இக்கோயில் "மழைக்கோயில்" என்றும் அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக அந்தக் கோயிலின் உள்பகுதியில் மழை நீர் சொட்ட ஆரம்பித்துவிடுகிறது. ஏழு நாட்கள் இந்த மழை நீர் நிற்பதே இல்லை. ஆனால், வெளியில் பருவ மழை பெய்யத் தொடங்கியதும் கோயிலின் உள்ளே மழை நீர் சொட்டுவது நின்று விடுகிறது. மழை நின்ற உடனே, கோயிலின் மேற்கூரை உட்புறமாக முற்றிலும் காய்ந்து விடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். கோயிலை சுற்றி மரங்கள், மலை இப்படி ஏதுவும் இல்லாமல் எப்படி கோயிலுக்குள் தண்ணீர் வருகிறது என்பது அதிசயமாக உள்ளது.
இதற்கான காரணம் இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை. அந்தக் கோயிலின் உள்ளே மழை நீர் சொட்டத் தொடங்கிய ஏழு நாட்களில் அந்த ஊரில் பருவ மழை தொடங்கிவிடும் என்பது அந்தப் பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. கோயிலின் மேற்கூரையில் வெறும் ஈரப்பதம் மட்டும் இருந்தால், மழையின் அளவு சாதாரணமாக இருக்கும் என்றும், நீர்த்திவலைகள் உருவாகி நின்றால் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்றும், நீர்த்திவலைகள் உருவாகி கீழே சொட்டுச்சொட்டாக விழுந்தால் அந்த வருடத்தில் பெரும் மழை பெய்யும் என்றும் அப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.

ஈரப்பதம் அல்லது நீர்த்திவலைகள் ஏதும் தோன்றவில்லை என்றால் அந்த வருடத்தில் மழை இருக்காது என்பதும் ஆச்சரியமான ஒன்றாக இருந்து வருகிறது. இதற்கான காரணத்தை கண்டறிய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் இங்கு வந்து ஆய்வு செய்து பார்த்தும் இதை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த தெய்வீக நிகழ்வை காண பல மாநிலங்கள், நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள்.
இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள கிராம மக்கள் இங்கு சொட்டும் நீரின் அளவைப் பொறுத்தே அந்த வருடத்தில் தங்கள் நிலத்தில் என்ன பயிரிடலாம் என்பதை முடிவு செய்கின்றனர். மற்றும் சரியாக 7 நாட்களில் பருவமழை துவங்கி விடும் என்ற நம்பிக்கையால், முன்பே இப்பகுதி விவசாயிகள் உழவுப் பணிகளை துவக்கி விடுகிறார்கள். அதோடு, இந்தக் கோயிலில் வருடா வருடம் சிறப்பு பூஜை செய்து அதிக அளவில் நீர் சொட்ட வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றனர்.
கோயில் வரலாறு :

அசோகர் காலத்து ஸ்தூபி வடிவத்தில் இந்த கோயில் வடிவமைக்கப்பட்டது. இது போன்ற அமைப்பு இப்பகுதியில் வேறு எங்கும் இல்லை. இந்தக் கோயில் எப்போது, யாரால் கட்டப்பட்டது என்பதும் தெரியவில்லை. ஆனால், 11வது நூற்றாண்டில் கடைசியாக இந்த கோயில் புனரமைக்கப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த கோவில் முற்றிலும் சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்டுள்ளது. மற்றும் கோயிலின் மேற் கூரையில் உள்ள சக்கர வடிவ அமைப்பில் மின்காந்த சக்தி இருப்பதால், மழைக்காலங்களில் ஏற்படும் இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களால் இதுவரை பாதிக்கப்படவில்லை.
வித்தியாசமான கட்டமைப்பு கொண்ட இந்த மழைக்கோவில், இப்போது இந்திய தொல்லியல் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் உள்ளது
கோயில் அமைப்பு:

கிழக்கு நோக்கிய இக்கோயிலின் நுழைவாயில் ஒரு அரண்மனையின் நுழைவாயிலை போல் அமைந்துள்ளது. இதன் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள வட்ட வடிவிலான அமைப்பு எத்தகைய உலோக கலவையால் செய்யப்பட்டுள்ளது என்று இதுவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த கோயில் கருவறையில் மூலவரான ஜெகந்தாதர் சிலை 6 முதல் 7 அடி உயரத்தில் அருள்பாலிக்கின்றார். ஜெகந்நாதரின் இரு புறங்களிலும் சுபத்ரா தேவி மற்றும் பாலபத்ரா ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். மிக அரிதான பஞ்சமுக விநாயகர் சிலையும் இக்கோயிலில் உள்ளது. இதைத்தவிர இந்தக் கோயிலில் லட்சுமணர், மகாவிஷ்ணு, சந்திரன், சூரியன் ஆகியோரின் சிலைகளும் உள்ளன. இக்கோவிலின் சுவர்களில் தசாவராத கோலங்களும் கருங்கல்லால் செதுக்கப்பட்டுள்ளன.
நூறடி ஆழம் கொண்ட கிணறு ஒன்று இக்கோயில் வளாகத்தில் உள்ளது.

நம் இந்திய நாட்டில் மழை வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் ஒரு அதிசயக் கோயில் இருப்பதை நினைத்து நாம் பெருமைக் கொள்வோம்!!


Leave a comment
Upload