தொடர்கள்
தொடர்கள்
சினிமாவும் இலக்கியமும் 5 - தி.குலசேகர்

2025925080219128.jpg

அந்நாளில் முக்கியமான ஒரு மாற்று சினிமாவாக இந்தப்படம் பார்க்கப்பட்டது. இது அசகாயசூரரை கதை நாயகனாக கொண்டிருக்கவில்லை. மிகுந்த துணிச்சலோடு, சப்பாணி என்கிற ஒரு விளிம்புநிலை மனிதனை நாயகனாக முன் நிறுத்தியது. அதுகாறும் திரைநாயகர்களின் வசீகரத்திற்காக படம் பார்க்கச் சென்றவர்களை, பதினாறு வயதினிலே அந்த படங்களில் பணியாற்றியிருக்கிற தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என பாத்து ரசிக்க வைத்ததன் மூலம் சினிமா ரசனையை ஒரு அடி முன்னெடுத்து வைக்கச் செய்தது. ஸ்டுடியோவை விட்டு முற்றிலுமாக வெளிப்புற பகுதிகளிலேயே படப்பிடிப்பை அது நடத்தியிருந்தது. யதார்த்தம் மிகுந்திருந்தது. ஒரு வகையில் நியோ-ரொமான்டிக் திரைப்படமென இதனைச் சொல்லலாம்.

அதுவரை என்னைத் தேடி வந்த படங்களை பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு தரமான, சுவாரஸ்யமான செமிகிளாசிக், கிளாசிக் படங்களை தேடிப்போய் பார்க்க ஆரம்பித்தேன். நல்ல படங்களை தேடிப்போய் தான் பார்த்தாக வேண்டும். தமிழ், இந்திய மொழிப்படங்கள், உலகத்திரைப்படங்கள் என்று அப்படி பத்தாயிரம் படங்களுக்கு மேலே பார்த்திருப்பேன்.

திரைமொழி என்பது மௌனத்தை பிரதான மொழியாக கொண்டது. உதாரணத்திற்கு சிந்து பைரவி படத்தில் சிந்துவும், ஜே.கே.பியும் நேசம் ததும்ப இணையப் போகிறார்கள் என்பதை பாலசந்தர் காட்சித்துளிகள் வழியாகவே உணர்த்தியிருப்பார். ஜே.கே.பி கரம் சிந்துவின் கரத்தை பற்றும். உறையோடு இருக்கிற ஒரு வீணையின் துணியாலான உறையை ஒரு கரம் மென்மையாக அகற்றும். இப்போது வீணை நிர்வாணமாக சுடரும். அவ்வளவு தான் காட்சி. அத்தனையையும் அது உணர்த்தி விடுகிறது. பார்க்கிறவர்கள் இதயங்களில் ஒரு சங்கமம் அரங்கேறிவிடுகிறது.

இன்னொரு காட்சி. நாயகன் பேருந்தில் பயணித்துக்கொண்டிருக்கிறான். அவன் கண்கள் நினைவுகளின் தாலாட்டில் கவிந்திருக்கின்றன. அப்போது அவன் அருகில் அவன் விரும்புகிற பெண் வந்து நிற்கிறாள். அவளுக்கு அவனைப்பற்றி தெரியாது. அவனுக்கு அவளைப்பற்றி எல்லாம் தெரியும். அப்போது திடீரென காற்று குதூகலமாகி வேகம் கூட்ட, அவளின் தாவணி அவன் முகத்தில் படபடக்கிறது. தன்னையறியாமல் அவன் விழிகளில் கண்ணீர் திரண்டு கொள்கிறது.

ருத்ரய்யா இயக்கிய அவள் அப்படித்தான் படத்தில் ஸ்ரீப்ரியா ஏற்றிருந்த மஞ்சு கதாபாத்திரம் பதின்பருவத்திலிருந்தே பாலியல் துரோகங்களுக்கு ஆட்பட்டிருக்கும். அதுவரை அவள் சந்தித்திருந்த ஆண்கள் ஏதோ ஒரு விதத்தில் அவளை நைச்சியமாக பயன்படுத்திக்கொண்டு, அவளை விட்டு விலகி விடுவார்கள். இது ஒரு பெண்ணின் பார்வையிலான ஆட்டோகிராஃப் கதை. மஞ்சு தன் வாழ்க்கையில் காதலித்தவர்கள் பற்றிய அனுபவத்தின் தொகுப்பு தான் இந்த படைப்பு. அவளை ஒருவர் கூட அதுநாள்வரை உண்மையாக காதலித்திருக்கவில்லை.

அதன் பிறகு தான் கமல் கதாபாத்திரத்தோடு அவளுக்கு உறவு ஏற்படும். கமல் அவளை நேர்மையாக நடத்துவார். ஆனாலும் அவள் அவனிடம் எரிந்து எரிந்து விழுவாள். அவ்வப்போது வேண்டுமென்றே உதாசீனப்படுத்துவாள். அவள் மாறிமாறிப் பேசுவாள். அவள் தன்னை வஞ்சித்த ஆண்களிடம் அப்போது காட்டாத கோபத்தை ஒட்டுமொத்தமாக இப்போது கமலிடம் காட்டுவாள். இதைப் புரிந்து கொள்கிற கமல் கதாபாத்திரம் அவளை கனிவோடு நடத்தும். இந்த அன்பை அவளால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.

ஒரு சமயம், அவள் திடீரென ஆவேசம் கொண்டவளாய் கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் எடுத்து கமல் மீது எறிய ஆரம்பிப்பாள். கமல் அப்போதும் கோபம் கொள்வதில்லை. அவளின் ஆழ்மனது கமலுக்கு புரிந்தே இருக்கிறது. அப்போது சட்டென அரை மயக்கநிலைக்கு செல்வாள். உடனே கமல் அவளை தாங்கிப் பிடிக்க, முதலில் அவனிடமிருந்து தன்னை விடுவிக்க நினைப்பவள், பிற்பாடு அவனை நெஞ்சோடு இறுக அணைத்துக்கொண்டு அவரையும் தன்னோடு இழுத்துப்போட்டபடி, அப்படியே மூடப்பட்டிருக்கிற அந்த மேற்கத்திய டாய்லெட் அருகே சரிந்து விடுவாள். இறுகியிருந்த பிடிமட்டும் மாறுவதில்லை. அதே இறுக்கம். கமல் கதாபாத்திரம் அவள் போக்கில் இணங்கிப் போய் அமைதியாக அவள் மீது கிடக்கும். ஒரு கட்டத்தில் அவள் முழுவதுமாக மயங்கிவிட, அவளை தூக்கி படுக்கையில் படுக்க வைப்பவன், அவளின் விலகியிருக்கிற ஆடையை சரி செய்து விட்டு, அங்கிருந்து செல்வான். இந்த காட்சியில் வசனமே கிடையாது. ஆனால், அந்த மனதின் அலைபாய்தல் துல்லியமாக நமக்கு அந்த காட்சியின் மூலம் உணர்த்தப்பட்டு விடும். சினிமா உணர்வுகளால் வரையப்படும் நெகிழோவியங்களின் தொகுப்பு. அது உணர்ச்சிகளை பிரதானப்படுத்துகிற ஒரு கலை. சினிமா உணர்வுகளை சிலிர்தெழ செய்கிறபோது சினிமா உயிர்த்து விடுகிறது. சினிமா கதாபாத்திரங்கள் வழியாக சம்பவங்களை விளக்க முற்படும்போது மரித்து விடுகிறது.

சினிமா ஒரு காட்சி ஊடகம். காட்சிப்பூர்வமாகவே, சொல்ல வந்ததை உணர்த்தக்கூடியது. காட்சியில் முடியாதபோதே உரையாடல் வரும். அதுவும் நேரடியாக இல்லாமல் பூடகமாக குறிப்பால் உணர்த்துகிறவிதத்தில் இருக்கும். சினிமா ரியலிசத்தை அப்படியே பிரதியெடுப்பதல்ல. சினிமா கற்பனையோ, நிஜமோ எதுவாக இருந்தாலும் அதை நம்பும்படி காட்டும் கலை.

ஏர்னஸ்ட் ஃபிஷ்சர் எழுதிய ‘நெஸசிட்டி ஆஃப் ஆர்ட்ஸ்’ என்கிற புததகத்தில் கிரியேட்டிவிட்டி ஒரு படைப்பாளரை வந்தடைய சில படிநிலைகள் உள்ளன என்கிறது. முதலில் ஒவ்வொரு படைப்பாளரும் ஏதாவது ஒரு படைப்பை அல்லது கதாபாத்திரத்தை இமிடேட் அல்லது போலச்செய்து பார்ப்பார்கள். அதன் பிறகு கற்பனை செய்து பார்ப்பார்கள். அதன் பிறகு தன்னைச்சுற்றி அல்லது உலகில் எந்தப்பகுதியில் என்றாலும் நடக்கிற பலவிதமான விசயங்களில் தங்களை பாதிக்கிற விசயங்களில் உத்வேகம் பெற்று அதை கருப்பொருளாக கொண்டு தங்களின் கற்பனையை இன்னும் விரிவுபடுத்துவார்கள். பிற்பாடு தான் அவர்கள் தங்களுக்கான கருப்பொருளை தாங்களே படைக்க ஆரம்பிப்பார்கள். இந்த படிநிலைகளை கடந்து வந்து தான் படைப்பு சக்தி வெளிப்பட ஆரம்பிக்கிறது.

உதாரணத்திற்கு ரஷ்ய எழுத்தாளர் சிங்கிஸ் ஐக்மத்தாவ் எழுதிய ஃபஸ்ட் டீச்சர் குறுநாவலை எடுத்துக்கொள்வோம். அற்புதமான படைப்பு அது. ரஷ்யப்புரட்சியை தொடர்ந்து ஒரு பாமரன் கம்யூனிஸ இயக்கத்தின் உதவியோடு இரவு நேர வகுப்பில் சேர்ந்து எழுதப்படிக்க கற்றுக்கொள்கிறான். அதனால் அவன் ஒரு குக்கிராமத்திற்கு ஆசிரியராக நியமிக்கப்படுகிறான். அவன் பெயர் தூய்சன். அங்கே அடிமை வாழ்க்கை வாழும் தினக்கூலிகளிடம் எப்படி எப்படியோ பேசி அவர்களின் குழந்தைகளுக்கு மலையுச்சியில் ஒரு கொட்டகை அமைத்து பாடம் சொல்லித்தருகிறான். அதில் ஒரு பதின்பருவப்பெண் பிரமாதமாக படிக்கிறாள். அவள் பெயர் அல்டினா. அவளின் குடும்பம் அவளை கல்வி அறிவில்லாத யாரோ ஒருவனுக்கு விற்றுவிடுகிறது. அவன் படாதபாடுபட்டு அவளை மீட்டு மாஸ்கோவிற்கு அனுப்பி மேலே படிக்க வைக்கிறான். அவளுக்கு அவன் மீது இனம்புரியாத ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. அவனுக்குள்ளும் அவள் மேல் அன்பு இருக்கவே செய்கிறது. அது அவளுக்குள் காவியக்காதலாக உருவெடுக்கிறது. அவளும், அவனும் அந்த பள்ளிக்கூடத்திற்கு முன்னால் ஆளுக்கொரு பைன் செடியை அப்போது நட்டு வைப்பார்கள்.

அவள் இப்போது அந்த நகரத்தின் கலெக்டர். அவள் படித்த பள்ளியில் நடக்கிற ஒரு விழாவிற்கு சிறப்பு விருந்தாளியாக அழைக்கப்பட்டிருக்கிறாள். அவனைத் தேடுகிறாள். கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் வேறுவேறு ஊர்களுக்கு மாணவ-மாணவியர்களுக்கு எழுதப்படிக்க சொல்லித்தர சென்றுவிட்டதாகவும், இப்போது அவன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை என்றும் சொல்கிறார்கள். அவன் காணாமலே போய்விட்டான். அவர்கள் முன்பு நட்டு வைத்த பைன் செடி இப்போது விண்ணை முட்டுகிற அளவிற்கு கம்பீரமாக வளர்ந்து நிற்பதை அவள் நெடுநேரம் பார்த்தபடி இருக்கிறாள். அவள் இப்போதும் திருமணம் செய்து கொள்ளாமல் அவனையே இதயத்தில் ஏந்திக்கொண்டு தன்னுடைய சமூக கடமைகளை ஆற்றிக்கொண்டிருக்கிறவளாய் இருக்கிறாள்.

இதே கதையை தழுவி அல்லது உத்வேகம் பெற்று பவோ சை என்கிற சீன எழுத்தாளர் ஒரு நாவலை எழுதுகிறார். அதை ஜாங் யிமோவ் இயக்க, அதில் ஜாங் ஜீயி நாயகியாக அறிமுகமாகிறார். அந்தப் படத்தின் பெயர் தி ரோட் ஹோம். இந்தப்படமும் உலக அளவில் பல விருதுகளை வென்றது. இப்படியாக ஒரு படைப்பினால் ஈர்க்கப்பட்டு அதில் உந்தப்பட்டு அதற்குள் அந்த படைப்பாளரின் படைப்பு சக்தி முழுமையாக ஊடாடுகையில், அது இன்னொரு புதிய படைப்பாக உருவெடுத்து விடுகிறது. ஒன்றிலிருந்து இன்னொன்று. இன்னொன்றிலிருந்து வேறொன்று.

2025925080302817.jpeg