
சிங்கப்பூர் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு சற்று முன்னதாக வந்துவிட்ட நிலையில், எதிரில் தென்பட்ட PVR சினிமாஸ் பலகை, புத்தகம் படிக்கும் என் எண்ணத்தை திசை மாற்றியது. தீபாவளி கொண்டாட்டத்தில் படம் பார்க்காதது ஒரு குறையாகவே இருந்ததால், பார்த்து விட எண்ணி தீபாவளி ரிலீஸ் படங்களை அலசத் துவங்கினேன். "டியூட்", "டீசல்" மற்றும் "பைசன்" ஆகியவற்றில் மாரி செல்வராஜின் பைசன் படத்தை தேர்ந்தெடுத்து பார்க்கச்சென்ற எனது எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.
கதைக் களம் ஒன்றும் வித்யாசமானதல்ல. கிராமத்தில் அடிமட்டத்திலிருந்து வரும் கபடி வீரர், பல சோதனைகளை முறியடித்து, இந்திய கபடி அணியில் இடம் பெற்று சாதனை படைப்பதே பைசனின் கதைக்கரு. படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை எந்த ஒரு இடத்திலும் தொய்வு இல்லாமல், காண்போருக்கு சிறிதும் சலிப்பு தட்டாமல் படத்தை எடுத்திருப்பது பாராட்டுதலுக்குரியது.
துருவ் விக்ரம் படத்தின் கதாநாயகன், அளவாகவும் அதே சமயம் இந்த படத்திற்கு ஏற்ற ஒரு நடிப்பையும் கொடுத்திருக்கிறார். கபடி விளையாட்டு வீரராக மிளிரும் அவர், தான் ஒவ்வொரு கட்டத்திலும் நிராகரிக்கப்படும் போது ஏற்படும் வலியையும், வேதனையையும் காண்போரிடம் கடத்தி சென்றிருக்கிறார். அவருக்கு அப்பாவாக நடித்திருக்கும் பசுபதியின் நடிப்பு அனைவரையும் விஞ்சி நிற்கிறது. ஒரு தந்தையின் பாசம், தவிப்பு, பயம், கோபம் என உணர்ச்சிகளின் குவியலாக விளங்கும் அவரது கதாப்பாத்திரம் அருமை. பாண்டிராஜாவாக வரும் அமீர், திரையில் வரும் பொழுதெல்லாம் ரசிகர்களின் கைதட்டலை சம்பாதித்திருக்கிறார். நிதானமாகவும் அதே நேரம் கந்தசாமிக்கு எதிராக வெளிப்படுத்தும் பகை, கோபம் என அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். கந்தசாமியாக வரும் லால், துருவ் விக்ரமின் அக்காவாக வரும் ராஜி என அனைவரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். அனுபமா பரசுராம் கதாப்பாத்திரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு இல்லாதது ஒரு குறையே.
படத்தில் வரும் வசனங்கள், மாரி செல்வராஜுக்கு உரித்தான பாணியில் ஆழமாகவும் சிந்திக்கும் விதத்திலும் அமைந்திருப்பது கதைக்கு வலு சேர்த்திருக்கிறது. குறிப்பாக கந்தசாமியும், பாண்டிராஜாவும் தங்களது பகையை பற்றி கூறும் போது, இது எதனால் ஏற்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் தங்களை பாதுகாத்துக் கொள்ள தொடர்ந்து இதோடு வாழ்கிறோம் என்று கூறும் இடம், இக்கதையின் ஆழத்தை உணர்த்தும் விதத்தில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுடைய பங்கை அளவாக அளித்திருப்பதும் இயக்குனருக்கு கிடைத்த வெற்றி. இருப்பினும், அழகம் பெருமாளின் மகளாக வரும் கதாபாத்திரமும், அவர் துருவ் விக்ரமை ஓவியமாக தீட்டுவதும் ஏன் என்று புரியவில்லை. அதே போன்று, ராணியாக வரும் அனுபமா பரசுராம், பசுபதியிடமும், அவரது மகளிடமும் தனது திருமணத்தை நிறுத்த உதவி கோரும் காட்சியும் சரியானதாக இல்லை. படத்தில் இடம்பெறும் வன்முறையும் நம்மை சற்று முகம் சுளிக்க வைக்கிறது.
பரியேறும் பெருமாள், மாமன்னன், வாழை வரிசையில் இந்த படமும் மாரி செல்வராஜுக்கு வெற்றி படமாக அமையும் என்பதில் ஐயமில்லை. பைசன் திரைக்கு வந்து ஐந்து நாட்கள் ஆன பின்பும் திரை அரங்கம் நிறைந்திருப்பது இதனை உறுதி செய்கிறது. பைசனின் பாய்ச்சல் பலே!

Leave a comment
Upload