
மாமல்லபுரம் டூ சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள அரசினர் கட்டிடக்கலை, சிற்பக்கலை கல்லூரிக்கு எதிரே, ரவீந்திரன் ஸ்தபதி என்ற பிரபல உலோக சிற்பக் கலைஞரின் பஞ்சலோக சிலைகள் வடிவமைக்கும் சிற்பக் கலைக்கூடம் இயங்கி வருகிறது. இவர், இக்கல்லூரியில் பட்டம் பெற்று, மத்திய மற்றும் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநில அரசுகளின் விருது பெற்றவர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் சிக்பலாபூர் அருகே சாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஒரு தனியார் மருத்துவமனையில் வைப்பதற்காக, ரூ.1.50 கோடி மதிப்பில் 21 அடி உயரத்தில், 4 டன் எடையில் பஞ்சலோக தன்வந்திரி பெருமாள் சிலை வடிவமைக்க ரவீந்திரன் ஸ்தபதிக்கு ஆர்டர் கிடைத்துள்ளது. சுமார் 2 ஆண்டுகளில் வடிவமைக்க வேண்டிய பஞ்சலோக பெருமாள் சிலையை, முதலில் மெழுகு போன்ற ஒரு மாதிரி சிற்பத்தை வடிவமைத்து, பின்னர் 30 சிற்பிகளின் உதவியுடன் 40 நாட்களில், 18 மணி நேர உழைப்புடன் இரவு பகலாக 21 அடி உயரத்தில் 4 டன் எடையில் பிரமாண்ட பஞ்சலோக தன்வந்திரி பெருமாள் சிலையை உருவாக்கியுள்ளனர்.
இந்த சிலை பஞ்சலோகங்களை காய்ச்சி ஊற்றி வடிவமைப்பட்டு, பின்னர் இரும்பினால் சாரம் மற்றும் படிகள் அமைக்கப்பட்டு, அதன்மேல் சிற்புகள் ஏறி, உலோக சிற்பிகள் எந்திரங்கள் மூலம் பாலீஷ் செய்யும் இறுதிகட்ட பணிகளை செய்து முடித்துள்ளனர். இந்த தன்வந்தரி பெருமாளின் ஒரு கையில் அமிர்தகலசம், மற்றொரு கையில் ஓலைச்சுவடி, மற்ற 2 கைகளில் சங்கு மற்றும் சக்கரத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். உலகிலேயே மிக குறைந்த நாட்களில் இதுபோன்ற பிரமாண்ட அதிக உயரத்தில் பஞ்சலோக சிலை வடிவமைக்கப்பட்டது இதுவே முதன்முறை.
புட்டபர்த்தி சாய்பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கடந்த 24ம் தேதி சாய் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிறுவப்பட்டு உள்ள 245 அடி உயர பீடத்தில் இந்த பஞ்சலோக சிலை நிறுவப்படுவதாக சிற்பிகள் தெரிவித்தனர். இதுகுறித்து உலோக சிற்பக் கலைஞர் ரவீந்திரன் ஸ்தபதி கூறுகையில், ‘‘இம்மாதிரியான உலோக சிற்பங்கள் செய்வதற்கு, சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் செய்து, இங்கு கொண்டு வந்து நிறுவப்படுகிறது. இந்தியாவிலேயே – அதுவும் தமிழ்நாட்டிலேயே இதுபோன்ற பல்வேறு சிலைகள் செய்யும் தகுதி வாய்ந்த பல்வேறு சிற்பக் கலைஞர்கள் உள்ளனர். எங்களை போன்ற சிற்பக் கலைஞர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் வாய்ப்பு வழங்க வேண்டும்…’’ என்று தெரிவித்தார்.

Leave a comment
Upload