தொடர்கள்
கதை
அவளது நியாயம் - மீனா சேகர்

2025925070051124.jpeg

வெளியே லேசான மழையின் சத்தம். சோம்பலான ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை , தூக்கம் வராமல் எழுந்து விட்டாள் கீர்த்தனா. ஜன்னல் கதவை திறந்து வைத்து மழையின் ஓசையோடு குருவிகள் இரண்டின் கீச்சிடலை கேட்கும் போது பாரமான அவள் மனம் சற்றே லேசானது போல் உணர்ந்தாள். அடுப்படிக்கு சென்று காபி டிகாஷனை போட்டவளுக்கு நேற்று இரவு வீட்டில் நடந்த சம்பாஷணை மறுபடியும் நினைவுக்கு வந்து, தன்னிச்சையின்றி கண்கள் கசிய ஆரம்பித்தது.

மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் கீர்த்தனாவிற்கு இரண்டு பிள்ளைகள். கணவர் ரங்கநாத் நல்ல கம்பெனியில் மேனேஜர். பெயருக்கேற்ப அவரது பூர்வீகம் ஸ்ரீரங்கம். அவரது முன்னோர்கள் வேதம் படித்த சாஸ்திரிகள். அப்பா பள்ளியில் வாத்தியாராக இருந்து ஓய்வு பெற்றவர். சாஸ்திர சம்பிரதாயங்களில் ஊறிப்போன குடும்பம். கீர்த்தனா வளர்ந்த சூழ்நிலை அப்படி இல்லை என்றாலும், புகுந்த வீட்டின் பழக்க வழக்கங்களை, மனிதர்களை அனுசரித்துக் கொண்டு வாழப் பழகியவள். அவர்களது கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் சின்னச் சின்ன உரசல்கள் இருந்தாலும் பொதுவாக சராசரி நிம்மதியும் சந்தோஷமும் அமையப்பெற்றவர்கள்.

அவர்களோடு ரங்கநாத்தின் அத்தை பங்கஜவல்லியும் சேர்ந்து இருந்தார். அத்தைக்கு கிட்டத்தட்ட 80 வயது இருக்கும். அந்த நாள் பாஷையில் சொல்வதாக இருந்தால் சின்ன வயதிலேயே "வீணாப்போனவள் ". தம்பி சாரங்கனின் பொறுப்பில் பலகாலமாய் வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருப்பவர். மாமியார் சுந்தரியை விட, அத்தை பங்கஜம் கீர்த்தனாவுக்கு நெருக்கமானவள் அன்பானவள். அதேசமயம் கண்டிப்பானவளும் கூட.

கதையின் முக்கிய விஷயத்துக்கு வருகிறேன். இன்னும் பத்து நாளில் தீபாவளி பண்டிகை. வீட்டில் எல்லாரும் அவரவர்களுக்கு பிடித்த மாதிரி புது துணிமணிகள் வாங்கிக் கொண்டாயிற்று, கீர்த்தனாவைத் தவிர. புடவை நகை இவற்றில் ஆசை இல்லாதவள் கிடையாது கீர்த்தனா. ஆனால் இம் முறை அவளுக்கு எந்த கொண்டாட்டமும் வேண்டியிருக்கவில்லை

காரணம் அவளுடைய அண்ணா ரகுநாதனின் அகால மரணம்!. 50 வயதை கூட எட்டாத அண்ணா ஒரு விபத்தில் காலமாகி முழுசாக ரெண்டு மாதம் கூட ஆக வில்லை. ஏற்கனவே கேன்சர் வந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்த அவள் அம்மா, புத்திர சோகமும் சேர, அதே மாதத்தில் இறைவனடி சேர்ந்து விட்டார். அடுத்தடுத்த இந்த இரண்டு அதிர்ச்சிகள் கீர்த்தனாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

பூஜைகள்,பண்டிகை என்று வரிசையாக வந்தாலும், இயந்திரகதியில் அரை மனதாக செய்ய வேண்டியவற்றை செய்து முடித்தாள். கொலு வைக்கும் பழக்கம் அவர்கள் வீட்டில் இல்லை. தீபாவளி நெருங்க நெருங்க, ஒரே அண்ணன் என்று உயிராக இருந்த ரகுநாதனும், சில நாட்களில் அம்மாவும் காலமான இந்த நேரத்தில் இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் எனக்குத் தேவையா, என்னால் இதில் கொஞ்சம் கூட மனசு லயிக்கவே இல்லையே, என்று மனம் புலம்பி கொண்டிருந்தது.

நேற்று மாலை பக்கத்து வீட்டு ரம்யா நான்கு புடவைகளை எடுத்து வந்து, " கீர்த்தனா, ஊரிலிருந்து என் அக்கா இந்தப் புடவைகளை கொண்டு வந்திருக்கா, உனக்கு இந்த கலர் டிசைன் எல்லாம் நல்லா சூட் ஆகும் கீர்த்தனா... எது புடிச்சிருக்கோ ஒண் ணு எடுத்துக்கோயேன் " என்று வந்தபோது, " எனக்கு இப்ப எதுவுமே வேண்டாம் போல இருக்கு ரம்யா பின்னாடி அப்புறம் பாத்துக்கலாமே " என்றாள் கீர்த்தனா.
அப்போது உள்ளே நுழைந்த மாமியார் சுந்தரி," இன்னும் பத்து நாள் கூட இல்ல தீபாவளிக்கு கீர்த்தனா... வெளியே தான் போய் எதுவும் வாங்கலை வீடு தேடி வந்திருக்கு, ஒரு புடவை எடுத்துக்கோயேன் " என்றார்.

அவள் தயங்குவதும் சுவாரஸ்யமின்றி இருப்பதும் புரிந்து கொண்ட சுந்தரி, " இங்க பாரு கீர்த்தனா நான் சொல்றேன்னு வருத்தப்படாதே, நீ ரொம்ப வருத்தத்தில் இருக்கேன்றது உண்மைதான். உன் கஷ்டம் புரியறது. ஆனா பண்டிகை நாள், ஒழிக்கப்டாதுன்னு பெரியவா சொல்லுவா, உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. கல்யாணம் ஆகி, கோத்ரம் மாறி வந்தாச்சுன்னா, இந்த இடத்து சுக துக்கம்தான் நீ அனுசரிச்சுப் போகணும்!" என்று கொஞ்சம் கனிவோடும், கண்டிப்போடும் சொன்னார். மாமனாரும் கணவரும், மாமியார் சொல்வதை ஆமோதிப்பது போல் பேசாமல் இருந்தார்கள்.

அப்போது பக்கத்து அறையில் இருந்து, தன் ஜபங்களை முடித்துவிட்டு மெதுவாக வந்த அத்தை, விஷயத்தைப் புரிந்து கொண்டு
" சுந்தரி,.. சாரங்கா,! கீர்த்தனாவோட நிலைமைய உங்களால புரிஞ்சுக்க முடியலையா.? எனக்கு கல்யாணம் ஆன புதுசுல நடந்த விஷயம். உனக்கு ஞாபகம் இருக்கோ இல்லையோ, நீ ரொம்ப சின்னவன். உனக்கு அப்போ எட்டு வயசு இருக்கலாம். உனக்கு மூத்தவ கமலா, 14 வயசு... திரண்டு குளித்து ஒரே மாசத்துல, மகமாயி போட்டு, போய்ச் சேர்ந்துட்டா. தீபாவளிக்கு 10 நாள் முன்னாடி...

என் புக்காத்துல, பெரிய குடும்பம்...தீபாவளியோ அமர்க்களப் படறது. நான் கமலாவை நினைச்சு அழுதுண்டு இருக்கேன்... எனக்கு எதுவும் வேண்டி இருக்கலே. ஆனா அந்த நாளு என் அழுகை எதுவும் எடுபடல. "பொறந்த ஆத்து தீட்டு எல்லாம் மூணு நாளோட போயிடுத்துன்னு சொல்லிட்டா."

சாஸ்திரத்தை எதிர்த்து பேசுற அளவுக்கு நான் விஷயம் தெரிஞ்சவளும் கிடையாது. எல்லாம் தப்புன்னு சொல்லி அபச்சார பட்டுக்கவும் இல்ல... பெரியவா சொல்றது தான் வேதவாக்கு. துக்கத்தை மென்னு முழுங்கிட்டு போயிட்டேன்.

இப்ப எவ்ளோ மாற்றங்கள் வந்திருக்கு சாரங்கா. கீர்த்தனா நல்ல பொண்ணு. நம்ம குடும்பத்தோட எவ்வளவு அனுசரணயா இருக்கா.. கொஞ்சம் விட்டுப் பிடிங்களேன் " என்றார் மெதுவாக.
"
" அக்கா நீங்க இப்படி பேசறது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. சாஸ்திரோஸ்தமான குடும்பம் நமது.. பழக்கத்தை எல்லாம் மாற்றுவது எனக்கு சரியா படல " என்று சாரங்கனும் சுந்தரியும் ஒரே மாதிரி சொன்னார்கள். அத்தை ஒன்றும் பேசாமல் உள்ளே போய்விட்டார்.

அத்தையின் பேச்சு கீர்த்தனாவுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இரவு தூங்கப் போவதற்கு முன்பு அத்தையின் கையைப் பிடித்து தேங்க்யூ அத்தை எனும்போது கண்கள் கசிந்தது...

அன்று மத்தியானம் ஓய்வாக இருக்கும் போது மனசுக்குள் சொல்லிக் கொண்டாள். " சாஸ்திரம் சம்பிரதாயம், காலம் காலமாக இருக்கிற பழக்கம் இதெல்லாம் பத்தி நான் பெருசா எதுவும் கேக்கல.. ஆனா என்னோட உணர்ச்சி என்னோட துக்கம்ன்னு ஒன்னு இருக்கு இல்லையா!.. புகுந்த வீட்ல யாராவது காலமாயிட்டா... அவா, பார்த்து பல வருஷம் ஆனவளோ....தூரத்து சொந்தமோ, எதுவா இருந்தாலும் துக்கம் கொண்டாடி பண்டிகை எல்லாம் ஒதுக்கிடறோம்.


ஆனால் வீட்டுக்கு வாழ வந்த பொன்ணு, அவ பெத்தவா,கூடப் பொறந்தவா.. இவாளுக்காக தன்னோட துக்கத்தை கொண்டாடிக்குறதுல என்ன தப்பு இருக்கு..என்னோட அவஸ்தைய, நிலைமையை அத்தை தவிர யாரும் புரிஞ்சுக்கிற மாதிரி தெரியல.

. நானும் இவா கூட தர்க்கம் பண்ணி எதையும் சாதிச்சுக்கணும்னு நினைக்கல.. நடக்கறது நடக்கட்டும் "

அடுத்த இரண்டு நாள் தீபாவளிக்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் எப்போதும் போல அவள் பங்குக்கு செய்ய வேண்டியவற்றை ஆரம்பித்தாள்.. எனக்கு துக்கம் என்கிறதால் .. நான் யாருக்கும் எதையும் குறைக்கப் போறது இல்ல!

... அன்று பொழுது விடிந்து பள்ளிக்கு கிளம்ப அவள் தயாராகிக் கொண்டிருந்தபோது அத்தை ரூமில் எல்லாரும் கூடி நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். கணவர் வெளியே வந்து, கீர்த்தனா, குளிச்சிட்டியா, இன்னொரு தடவை தலைக்கு ஸ்னானம் பண்ணிடு.. எங்க அப்பாவோட கசின் நேத்து போட்டாராம்..

யாரு எந்த கசின்! என்ன விஷயம்?என்கிறாள் கீர்த்தனா..

"நீ அவர பார்த்ததே கிடையாது கீர்த்தனா.. அவர் ரொம்ப வருஷம் சிங்கப்பூர்ல வேலையா இருந்துட்டு பின்னாடி பாம்பே போய் செட்டில்..ஆனவர்... அப்பாக்கு பெரியப்பா பிள்ளை. எனக்கு முகமே மறந்து போச்சு. இப்போ அப்பா சொல்லித் தான் தெரியும் எனக்கு... நேத்து போய்ட்டார்னு

நேத்து காரியம் எல்லாம் முடிஞ்சு போச்சாம்... ஆனா நமக்கு இன்னைக்குதான் தகவல் வந்திருக்கு.. ஆனால் ஸ்னான ப்ராப்தி உண்டே. அதனால பண்ணிடலாம், பாக்கி விஷயம் அம்மா சொல்லுவா.. எனக்கு நேரமாச்சு என்று அவசரமாக நகர்ந்துவிட்டார்..!

அந்த நேரம்... மனசுக்குள் இனம் புரியாத, உணர்ச்சி கொப்பளிக்க... கீர்த்தனாவுக்கு ஒரு நிம்மதி பெருமூச்சு எழுந்தது நிஜம்.. அது தப்போ, சரியோ, அவள், அந்த தருணத்தில்...வேறு எதுவும் யோசிக்க வேண்டியிருக்காத மனநிலையில்.... அவளது வருத்தம் தீர்ந்தது நிஜம் ..!

அத்தை மெதுவாக வெளியே வந்து, யாரும் பார்க்காத போது கீர்த்தனாவின் கையை பிடித்து அழுத்தி, " இந்த வருஷம் நம்மாத்துல தீபாவளி கிடையாதுடி பொண்ணே " என்றார்!.!