
தங்கத்தின் விலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சவரனுக்கு 60 ஆயிரம் 50 ஆயிரம் என்று இருந்தது. இப்போது 90 ஆயிரத்தை கடந்து விட்டது. தங்கம் விலை உயர்வு குறைவு என்ற பரமபத விளையாட்டில் தங்கத்தின் விலை 90 ஆயிரம் என்பதில் நிலைத்து இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். இந்தக் கட்டுரை எழுதுவதற்கு முன் தினம் திடீர் சரிவாக சவரனுக்கு 3,680 ரூபாய் குறைந்தது. இது அடுத்தடுத்து இரண்டு முறை இந்த சரிவு இருந்தது .அதேசமயம் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போய் 90 ஆயிரத்தை தொட்டது.
இந்த விலை சரிவு மீண்டும் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு தொடரும் என்றும் அதன் பிறகு மறுபடியும் விலை உயரும் என்றும் தங்க விற்பனையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். தவிர தங்கம் விலை உயர்வு நடுத்தர குடும்பத்தை பெரிய அளவு பாதிக்கவில்லை. அவர்கள் தங்கம் வாங்கும் ஆர்வமும் குறையவில்லை. இந்த தீபாவளிக்கு இந்தியா முழுவதும் 85 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை நடந்தது என்று சுட்டிக் காட்டுகிறார்கள். தீபாவளி நெருக்கத்தில் 60 டன் நகைகள் விற்பனையானதாகவும் சொல்கிறார்கள்.
இந்திய ரிசர்வ் வங்கி 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சுமார் 880 டன் தங்கத்தை வைத்திருக்கிறது. நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் அரசாங்கமே சேமித்து வைத்து தங்கத்தை அடமானம் வைத்து நிதி நிலையை சமாளித்ததும் உண்டு. இதேபோல் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய குடும்பங்களிடம் சுமார் 25 ஆயிரம் டன் தங்கம் இருந்தது. இப்போது 34,600 டன் என்று உயர்ந்திருக்கிறது. ஒரு காலத்தில் அடகு கடைகள் வட இந்தியர்கள் மட்டும் வைத்திருந்தார்கள். அதேபோல் நகைக்கடைகளும் மார்வாடிகள் மட்டுமே வைத்திருந்தார்கள். இப்போது வங்கிகள் நகை கடன் தருகிறது வங்கிகளும் தங்கம் விற்கக் தொடங்கி இருக்கிறது.தங்க நகைகள் அடகு வைக்க நிறைய நிறுவனங்களும் வந்துவிட்டது . நகையை அடகு வைக்க பிரபலங்களும் விளம்பரம் செய்கிறார்கள் தங்க நகை வாங்கச் சொல்லும் ஒரு நடிகையே அடகு வைக்க எங்களிடம் வாருங்கள் என்று விளம்பரம் செய்கிறார். அந்த அளவுக்கு தங்கத்தின் தாக்கம் இந்தியாவில் இன்று வரை தொடர்கிறது.
சில பொருளாதார நிபுணர்கள் முதலீடுக்கான தளம் தங்கம் கிடையாது. ரியல் எஸ்டேட் தான் சரியான முதலீடு. அதேசமயம் அந்த நிலத்தின் உண்மை தன்மையை மறக்காமல் சோதிக்க வேண்டும் .தவணை முறையில் கூட வீட்டு மனைகள் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் விற்கத் தொடங்கி இருக்கின்றது. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் பட்டா பதிவு ரிஜிஸ்ட்ரேஷன் என்று சலுகைகள் வாரி வழங்குகிறார்கள் என்று சொல்கிறார்கள். அதேசமயம் தங்கம் முதலீடு அல்ல. அது ஒரு காப்பீடு என்கிறார் ஸ்ரீதர் வேம்பு .அவர் சொல்லும் காரணம் அமெரிக்க பங்கு சந்தையின் நிலையற்ற தன்மையால் வேகமாக ஏறும் மதிப்புகள் மீண்டும் சரியா தொடங்கலாம். 2008 போல் மீண்டும் நிதி நெருக்கடி வரலாம் அப்போது தங்கம் தான் காப்பீடு உங்களுக்கு என்றார்.
இந்த விஷயத்தில் தாய்க்குலம் உஷாராக இருப்பார்கள் என்பது மட்டும் உண்மை.

Leave a comment
Upload