தொடர்கள்
தொடர்கள்
பசங்க டாக்கீஸ் தொடர் - பூங்கொடி பாலமுருகன்  White Bridge ஈரானிய மொழித்திரைப்படம் இயக்குனர் : அலி கவிதன் பூங்கொடி

2025924193014502.jpeg

2017 ஆம் ஆண்டு அலி கவிதன் அவர்கள் இயக்கத்தில் வெளியான திரைப்படம் White Bridge. சினிமா என்பது மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் சென்று சேரும் ஒரு ஊடகம். அதைப் பொழுதுபோக்கிற்காக அதிகம் பயன்படுத்தாமல், தன் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி, மக்களின் வாழ்வியலை பற்றி அதிகம் ஈரானிய திரைப்படங்கள் பேசுகின்றன.

கல்வி அமைப்பில் உள்ள சிக்கல்களைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது. ஒரு விபத்தின் மூலம் இயல்பாக நடக்க முடியாமல் மாற்றுத் திறனாளி ஆகிறாள் ஒரு சிறு குழந்தை. இதனால் வழக்கமான பள்ளியிலிருந்து, சிறப்பு குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு மாற்றப்படுகிறாள். அந்தக் குழந்தை தன் விடாமுயற்சியின் மூலம் , தன் பள்ளிக்கு திரும்பச் செல்வதை பேசும் எளிய கதை.

பஹேரா , தொடக்கப்பள்ளியில் பயிலும் ஒரு மாணவி. பள்ளி ஆண்டின் துவக்கத்தில் ஒரு மோசமான விபத்தைச் சந்திக்கிறாள். அந்த விபத்தில் குழந்தையின் கால்கள் பாதிக்கப்படுகிறது. அந்த மோசமான விபத்து அந்தக் குழந்தையை மன அழுத்தத்திற்குள் தள்ளுகிறது. அதனால் எண்களையும் வண்ணங்களையும் அறிந்து கொள்வதில் அவளுக்குச் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் அவளைச் சிறப்பு பள்ளியில் சேர்க்குமாறு, அந்தப் பள்ளியின் முதல்வர் அறிவுறுத்துகிறார்.

2025924193051995.jpeg

நாட்டின் கல்விச் சட்டத்தின் படி, உடல் திறன், மனத் திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் , மற்ற குழந்தைகள் பயிலும் சாதாரணப் பள்ளியில் பயில இயலாது. அவர்களுக்கு என்று இருக்கும் சிறப்பு பள்ளிகளில்தான் படிக்க வேண்டும். அறிவுத்திறன் சோதனையில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மீண்டும் சாதாரணப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள்.

கடந்த ஆண்டில் மிகச் சிறந்த மாணவி என்று பெயர் பெற்ற தன் குழந்தை அறிவுத்திறன் குறைந்த வள் என்பதை அவள் தாயால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எனவே சோதனைக்காக வெகு தூரம் பயணித்து தன் குழந்தையை அழைத்துச் செல்கிறார். ஒரு வறண்ட மலைப்பகுதியில் நீண்ட சாலையில் மகிழுந்தின் வழியாக தாயும் மகளும் பயணிக்கிறார்கள். நீண்ட தூரம் பயணம் செய்ததால் குழந்தை உடல் அசதியும், மனச்சோர்வும் அடைகிறது.

நீண்ட தூரம் பயணம் செய்து வந்தாலும் குறித்த நேரத்திற்குள் அவர்களால் வர முடியவில்லை. இருந்தாலும் தன் நிலையைச் சொல்லி அனுமதி பெறுகிறாள் தாய். நீண்ட தூரம் பயணம் செய்த அசதியும், பயமும் அந்தக் குழந்தைக்கு ஏற்படுகிறது. நிபுணர் கேட்ட கேள்விகளுக்கு அவளால் பதில் சொல்ல இயலவில்லை. மேலும் பயத்தில் அந்த இடத்திலேயே சிறுநீர் கழித்து விடுகிறாள். பஹேராவை சிறப்புப் பள்ளியில் சேர்ப்பது தான் அவளுக்கு நல்லது எனச் சொல்லி விடுகிறார்கள்.

பஹேராவுக்கு தந்தை இல்லை. தாய் ரொட்டி கடையில் வேலை செய்து வருகிறார். வேறு வழியின்றி தான் வேலைக்குச் செல்லும் பொழுது சிறப்பு பள்ளியின் வாயிலில் தன் குழந்தையை இறக்கி விட்டுச் செல்கிறார். ஆனால் அந்தக் குழந்தையால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தான் முன்பு படித்த பள்ளிதான் தன்னுடைய பள்ளி என்று மனதார நம்புகிறது.

சிறப்பு பள்ளியிலிருந்து விந்தி விந்தி நடந்து கொண்டே தன்னுடைய முன்னாள் பள்ளிக்கு சென்று வாயிலில் அமர்ந்து கொள்கிறது. இடைவேளையின் போது குழந்தைகள் விளையாட வருகின்றனர். தங்களுடைய தோழியைப் பார்த்ததும் அவர்களுக்கு பெரு மகிழ்ச்சி. ஓடி வந்து இவளுடன் மகிழ்ச்சியோடு பேசுகிறார்கள். அவர்களிடம் தினமும் நடக்கும் பாடங்களைக் கேட்டு அறிந்து கொள்கிறாள். பள்ளி வாயிலிலேயே தினமும் அமர்ந்து இருக்கிறாள்.

இந்தக் காட்சியை சிசிடிவி கேமராவில் ஆசிரியர்களும் பள்ளி முதல்வரும் பார்க்கிறார்கள். "நம் மனதை அசைப்பதற்காக அவள் தாயார் அந்தக் குழந்தைக்குச் சொல்லி கொடுத்த நாடகம் தான் இது " என்று பகடி செய்கிறார் முதல்வர்.

குழந்தையின் தாய்க்கு அலைபேசியில் உடனே அழைக்கிறார் . உங்களுடைய குழந்தையை வந்து அழைத்துச் சென்று விடுங்கள் என்று எச்சரிக்கை விடுக்கிறார்.

அப்பொழுதுதான் தன் குழந்தை சிறப்புப் பள்ளிக்குச் செல்லாமல் முன்னாள் பள்ளியின் வாயிலில் காத்திருப்பது தாய்க்குத் தெரிய வருகிறது. பதறிக் கொண்டு வந்து தன் குழந்தையை அணைத்துக் கொள்கிறார். அப்போதுதான் குழந்தையின் மனநிலை அவருக்குப் புரிகிறது. எப்படியாவது தன் குழந்தையை அந்தப் பள்ளியில் மீண்டும் சேர்த்து விட வேண்டும் என்று முயற்சி செய்கிறார். பேராசிரியர் ஒருவரைச் சந்தித்து அதற்கு உதவி கேட்கிறாள்.

அவரும் கல்வி அதிகாரிகளிடம் இந்தக் குழந்தையின் நிலமையை பற்றிச் சொல்கிறார்.

ஒரு நாள் அந்த நகரத்தில் உள்ள ஒரு பழைய பாலத்தின் வழியாக தாயும் மகளும் மிதிவண்டியில் சென்று கொண்டு இருக்கிறார்கள். அப்பொழுது பள்ளியின் முதல்வர் தன்னுடைய மகிழ்ந்தில் வருகிறார். அவரிடம் பேச வேண்டும் என்று தாய் கேட்கிறாள். முதல்வரும் தன் மகிழுந்தை நிறுத்துகிறார். தன் குழந்தையை எப்படியாவது பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு தாய் மன்றாடிக் கேட்கிறார்.

" உங்களுடைய குழந்தை சிறப்பு குழந்தை பள்ளியில் படிப்பது தான் அவளுக்கு நல்லது. அவளுக்கு அங்கு சிறப்பான கவனம் தருவார்கள்" என்று முதல்வர் மீண்டும் மறுக்கிறார்.

கோபமடைந்த தாய்" எப்படியாவது உங்கள் பள்ளியில் என் மகளைக் கொண்டு வந்து மீண்டும் சேர்ப்பேன்" என்று உறுதியாகச் சொல்கிறாள்.

' இந்தப் பாலத்தின் அடியில் இருக்கும் வறண்ட நதியில் எப்பொழுது நீர் வருகிறதோ, அப்பொழுது உன் மகளைப் பள்ளியில் சேர்த்துக் கொள்கிறேன் ' என்று கிண்டலாக சொல்லிச் சென்று விடுகிறார்.

ஆனால் அந்த வாசகம் குழந்தையின் மனதில் பசுமரத்தாணி போல் தங்கி விடுகிறது. அதை உண்மை என்று நம்புகிறது. அதற்குப் பிறகு தினமும் பள்ளிக்குச் சென்று தன் தோழிகளிடம் அன்றைய பாடங்கள் பற்றிய விவரங்களைக் கேட்கிறாள். பிறகு அந்தப் பாலத்திற்கு வந்து விடுவாள்.

அந்த நதியில் நீர் வருகிறதா? வருகிறதா? என்று தினம் தோறும் கவனிக்கிறாள். அந்த வழியே செல்லும் அனைவரிடமும் இதில் நீர் எப்போது வரும் என்று விசாரித்துக் கொண்டே இருக்கிறாள்.

மாலை தன் தந்தையின் சமாதியின் அருகே சென்று சிறிது நேரம் மௌனமாக நிற்கிறாள். பிறகு வீட்டிற்குச் சென்று தோழிகள் சொன்ன பாடத்தை தானே படிக்கிறாள்.

அவள் அந்தப் பாலத்தில் அமர்ந்திருக்கும் போதெல்லாம் மற்ற குழந்தைகள் அவளைக் கேலி செய்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் அந்தக் குழந்தை நம்பிக்கை இழந்து விடுவதில்லை. தன் விடா முயற்சியின் மூலம் எண்களையும் , வண்ணங்களையும் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்கிறாள். இசைப் பயிற்சிக்கு செல்லும் ஒரு சிறுவன் மட்டும் அவளை உற்சாகப்படுத்துகிறான். அதேபோல அந்த பேராசிரியரும் அந்தக் குழந்தைக்கு தன்னால் இயன்ற நேரங்களில் கற்பிக்கிறார்.

என்றாவது அந்த நதியில் நீரோட்டம் வரும் என்று குழந்தை நம்புகிறது. அதற்குப் பிறகு தன் பழைய பள்ளியில் தன்னால் படிக்க முடியும் என்று அந்தக் குழந்தை மனதார நம்புகிறது.

அந்தப் பாலத்தை தன் பயிற்சிக் கூடமாக மாற்றுகிறது. அந்தக் குழந்தையின் நம்பிக்கையும் விடாமுயற்சியும், தோற்றுவிடக் கூடாது என்று எண்ணுகிறார் அந்தப் பேராசிரியர். ஒரு விவசாயின் உதவியோடு , அந்த வறண்ட பாலத்தில் தண்ணீரை ஓட வைக்கிறார்.

தண்ணீர் ஓடுவதைப் பார்த்து அந்தக் குழந்தை ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கிறது. உடனே வேகமாகத் தன் பழைய பள்ளிக்குச் செல்கிறது. முதல்வரிடம் வறண்ட நதியில் நீர் ஓடுவதாகவும், தன்னைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறும் மகிழ்வோடு கேட்கிறாள். கனவு கண்டாயா அல்லது பொய் சொல்கிறாயா? முதல்வர் கேட்கிறார். குழந்தை திரும்பப் பாலத்திற்கே வந்து காத்திருக்கிறது. மாலையில் அந்த வழியாக முதல்வர் வரும்பொழுது, மகிழுந்தை நிறுத்தி, நீரைக் காட்டுகிறது.

பள்ளி முதல்வரால் தன் கண்ணையே நம்ப முடியவில்லை. எப்படி சாத்தியம்? என வியக்கிறார். தொலைதூரத்தில் சென்று கொண்டிருந்த பேராசிரியரும் விவசாயியும் அதற்குக் காரணம் என்பதை உணர்கிறார்.

மீண்டும் அந்தப் பேராசிரியரின் உதவியோடு, அறிவுத்திறன் சோதனைக்கு குழந்தை தன் தாயோடு பயணிக்கிறாள். மீண்டும் தன் நண்பர்களோடு இணைந்து பள்ளியில் படிக்கப் போவதாகக் கனவு கனவு காண்கிறாள்.

சிறப்புப் பள்ளியிலிருந்து தன்னுடைய முன்னாள் பள்ளிக்கு விந்தி விந்தி நடந்து செல்லும் பொழுதும், பாலத்தின் மேல் அமர்ந்து கொண்டு தண்ணீர் வருமா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொழுதும் , அந்தக் குழந்தையின் நடிப்பு நம் அனைவரையும் கட்டிப் போட்டு விடும்.

குழந்தைகளுக்கு எதைக் கொடுக்க வேண்டும்? தாங்கள் கொடுப்பதுதான் சிறந்தது என்று வாதிட்டுக் கொள்ளும் பெரியவர்களுக்கு உண்மையிலேயே குழந்தைகள் உலகம் என்ன ?அவர்களின் தேவை என்ன? என்பதை இது போன்ற படங்கள் , நெற்றிப் பொட்டில் அடிப்பது போன்று சொல்லிக் கொடுத்து விடும்.

குழந்தைகளும் சின்னஞ்சிறு மனிதர்கள்தான்..

படத்தின் யூடியூப் இணைப்பு

https://youtu.be/MMY8InehYHU?si=M9xC5zbFUdklDVhL