
அமெரிக்காவில் பிரபல நடிகை சுசான் சோமர்ஸ் மறைந்து 2 ஆண்டுகளாகி விட்டன. தற்போது அவரது கணவர் ஆலன் ஹேமல், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தின் மூலமாக, தனது மனைவியும் நடிகையுமான சுசான் சோமர்ஸ் போலவே தத்ரூபமாக ஒரு பெண்ணை உருவாக்கியுள்ளார். இத்திட்டம் ‘சுசான் ஏ.ஐ ட்வின்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் சுவாரசியம் என்னவென்றால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மூலம் தனது உருவத்தின் நகலை உருவாக்கும் நடிகை சுசான் சோமர்சுக்கும் இருந்துள்ளதாம்! நடிகையும் அவரது கணவரும் பிரபல கண்டுபிடிப்பாளரான ரே குர்ஸுடன் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் குறித்து விவாதித்தபோது, இந்த எண்ணம் உருவானதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, தனது உடல்நலம் மற்றும் ஆரோக்கிய ஆலோசனைகளை பின்பற்றும் ரசிகர்களுக்கு, தன் மறைவுக்கு பிறகும் தொடர்ந்து சேவையாற்ற செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பம் சிறந்த வழிவகுக்கும் என்று நடிகை சுசான் சோமர்ஸ் கருதியுள்ளார். இந்த செயற்கை நுண்ணறிவு பிரதியை உருவாக்குவதற்காக, நடிகை சுசான் சோமர்ஸ் எழுதிய 27 புத்தகங்கள் மற்றும் அவரது நூற்றுக்கணக்கான நேர்காணல்கள் ஆகியவற்றை உள்ளீட்டாக வழங்கி, அவரது ஆளுமை மற்றும் குரலை அப்படியே மென்பொருள் வல்லுநர்கள் வடிவமைத்து உள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் ‘ரியல்பாட்டிக்ஸ் கார்ப்’ மற்றம் ‘ஹாலோ ஏ.ஐ’ நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய மனித உருவ ரோபோ மூலம் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் காட்டப்பட்டது. அதில் அந்த ரோபோ, ஆலன் ஹேமலுடன் உரையாடியதும், அவருடன் கழித்த 46 ஆண்டு திருமண வாழ்க்கை நினைவுகளை பகிர்ந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இத்திட்டம் குறித்து பேசிய ஆலன் ஹேமல், ‘‘இந்த செயற்கை நுண்ணறிவு, அசல் சுசானைப் போலவே தத்ரூபமாக உள்ளது. உண்மையான சுசானுக்கும் இதற்கும் என்னால் வேறுபாடு காண முடியவில்லை…’’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சுசானின் இணையதளத்தில் இந்த செயற்கை நுண்ணறிவு நகல் 24 மணி நேரமும் உரையாடும் வகையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த முயற்சிக்கு இருவரின் குடும்பத்தினரும் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது, பிரபல அறிவியல் புனைக்கதை தொடரான ‘பிளாக் மிரர்’ரின் நிகழ்வு போலிருப்பதாக ஏராளமான மக்கள் சமூகவலை தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாலாஸ்ரீ

Leave a comment
Upload