தொடர்கள்
தொடர்கள்
எழுதிக் கிழித்தவை 43. மும்மூர்த்திகளும் அவன் வாசகர்களே - மூத்த பத்திரிகையாளர் ஆர்.நடராஜன்

202592419265916.jpeg

தேர்தல் கமிஷனர்கள் அரசியல்வாதிகளுடனும் பத்திரிகையாளர்களுடனும் அளவோடு பேசுபவர் கள்-. தாமரை இலைத் தண்ணீர் போல்தான் பழகுவார்கள். தான் வகித்த முக்கிய பதவியின் காரணமாக அவன் அவர்களை அவ்வப்போது சந்திக்க நேர்ந்தாலும், அவர்கள் பேசியது குறைவு. தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தலைமைத் தேர்தல் கமிஷனர்களும் அவனிடம் நன்றாகவே பழகினார்கள். அதுமட்டுமல்ல, மூவருமே அவனது வாசகர்கள்.

பல சமயங்களில் அவனது கட்டுரையைப் பற்றி தொலை பேசியிலோ நேரிலோ பாராட்டையோ விமர்சனத்தையோ தெரிவிப்பார்கள், அது அவர்களைப் பற்றிய கட்டுரையாக இருந்தபோதிலும் கூட.

ஜி.ழி.சேஷன் என்ற கனத்த சரீரமும், கனத்த சாரீரமும் கொண்ட அந்த மனிதர் தேர்தல் கமிஷனர் ஆனபிறகுதான் அந்தப் பதவிக்கு உள்ள அதிகாரம் பொதுமக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், ஏன் தேர்தல் கமிஷனில் உள்ளவர்களுக்குமே தெரியவந்தது. அதுவரை வந்தவர்களெல்லாம் அரசாங்கத்தின் உயர்ந்த ஸ்தான குமாஸ்தாக்களாகவே இருந்து வந்தார்கள். அதிகாரி என்ற முறையில் கோலோச்சியவர் சேஷன்தான்.

வாக்காளர் அட்டை, சுவரில் எழுதக்கூடாது போன்ற நடைமுறைகளையும், நிபந்தனைகளையும் அறிமுகப் படுத்தியவர் அவரே. அவர் ஒரு சர்வாதிகாரியாக இருக்கிறார் என்று அரசியல்வாதிகள் வருந்தியபோது, இருகோடுகள் தத்துவத்தின்படி அப்போதைய பிரதமர் நரசிம்மராவ், மேலும் இரண்டு தேர்தல் கமிஷனர்களை நியமித்தார். அவர்களை சேஷன் படாதபாடு படுத்திவிட்டார். முதலில் தனி அலுவலக அறை தரப்படவில்லை. வசதிகள் செய்து தரப்படவில்லை. இதைப் பற்றி தினமணி சுடரில் கட்டுரை எழுதிய அவன் புதிய தேர்தல் கமிஷனர்கள், ‘லைட் ஓடவில்லை, பேன் எரியவில்லை’ என்றபடியெல்லாம் பிரதமரிடம் புகார் கொடுத்தார்கள். அவரும் எப்படியோ போங்கள் என்று சொல்லிவிட்டார். அவராலும் சேஷனைக் கையாள முடியவில்லை.

இந்த நிலையை விளக்கி அவன் கட்டுரை எழுதியபோது மூன்று கமிஷனர்கள் இருந்தபோதிலும், முடிவெடுப்பவர் தான் மட்டுமே என்று சேஷன் நடந்துகொண்டதை, ‘பூமாலையில் ஓர் மல்லிகை, நான்தான் தேன் என்றது’ என்ற கவிதை வரியை மேற்கோள் காட்ட விரும்பினான். அந்தக்கவிதை கண்ணதாசன் எழுதியது என்று உள்மனம் சொன்னாலும், சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள விரும்பினான். அப்போது அவனுக்குப் பழக்கமாகியிருந்த திரைப்படத் தயாரிப்பாளர் கோவை செழியனை தொடர்பு கொண்டான். அவர் சொன்னார், ‘அது தான் தயாரித்த ஊட்டிவரை உறவு’ என்ற படத்தில் வரும் பாடல், எழுதியவர் கண்ணதாசன் தான்’ என்று சொன்னார். எதையும் உறுதி செய்து கொண்டு எழுதும் பழக்கம் உள்ளவன், தன் கட்டுரையில் கண்ணதாசன் பெயரைக் குறிப்பிட்டான்.

அவனது கட்டுரைகள் ‘நாடும் நடப்பும்’ என்ற தலைப்பில் தொகுப்பாக வெளிவந்தபோது அதில் ‘அல்சேஷனுக்கும் ஆதிசேஷனுக்கும் பயப்படாதவர்கள் ஜி.ழி.சேஷனுக்கு பயப்படுகிறார்கள்’ என்று எழுதியிருந்தான். சேஷன் சென்னை வரும்போதெல்லாம் அவரை நட்பு முறையில் சந்திப்பவன் அவன். யாரோ ஒருவர் அந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொல்ல அவரைப்பற்றிய வரிகளைப் படித்திருக்கிறார். அவனைப் பார்த்தவுடனேயே கேட்டார் பொய் கோபத்துடன், ‘என்ன நீ, என்னை அல்சேஷன் என்று எழுதிவிட்டாய்?’ உங்களுக்கு எல்லோரும் பயப்படுகிறார்களே! அதனால்தான்! என்றான். அதைக்கேட்ட அவர், ‘சரி போ, மத்தவனெல்லாம் என் காதுல படாம வெளியில சொல்றான். நீ எழுதிட்டே’ என்றார்.

அடுத்து வந்த தேர்தல் கமிஷனர் ஜி.ஷி.கிருஷ்ணமூர்த்தி. அதற்கு முன்பு மத்திய அரசின் கம்பெனி விவகாரத்துறை செயலாளராக இருந்தவர். அப்போதே அவனுக்குப் பழக்கமானவர். அவன் தினமலரில் எழுதிவந்த ‘உரத்த சிந்தனை’ பகுதியில் அரசியல் கட்டுரைகளைப் படிப்பவர். சந்திக்கும்போது அதுபற்றியெல்லாம் சொல்வார். ஒருமுறை விமான நிலையத்தில் அவனும் அவரும் வெவ்வேறு ஊர்களுக்குச் செல்வதற்காக பாதுகாப்பு சோதனையை முடித்துக் கொண்டு விமானம் ஏறத் தயாராக இருந்த நிலையிலும் அந்த வாரத்திய கட்டுரைப்பற்றி அவர் சொன்னார். என்ன அவசரமாக இருந்தாலும் அவனிடம் பேச்சு கொடுப்பவர். அவ்வளவு உயர்ந்த அதிகாரத்தில் உள்ளவர், தன் வாசகராக இருக்கிறாரே என்பதில் அவனுக்குப் பெருமை. இன்றும் அவருடன் நட்பு தொடர்கிறது.

அடுத்து தலைமை தேர்தல் கமிஷனராக வந்தவர் நீடாமங்கலம் கோபாலசாமி என்கிற தமிழரே. அவர் உள்துறை செயலாளராக இருந்தபோது ஆனந்தவிகடனில் புகைப்படத்துடன் அவரது பேட்டி வெளிவந்திருந்தது. அதுதான் முதன் முதலாக அவரைப் பற்றி அவன் தெரிந்து கொண்டது. அவர் பண்பாட்டு துறை செயலாளராகவும் இருந்திருக்கிறார். அவர் 2008இல் குத்தாலம் வந்தபோது தலைமை தேர்தல் கமிஷனர். அவன், ‘நாடாளுமன்ற தேர்தலின் வேட்பாளரான நரேந்திரமோடிக்கும், சோனியா காந்திக்கும் நடத்தை விதிகள் மீறல் தொடர்பாக நோட்டீஸ் கொடுத்தீர்களா?’ என்று கேட்டான். ‘கொடுப்பேன்’ என்றார்.

அப்படியே கொடுத்தார். இத்தனைக்கும் அவர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது, குஜராத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக அங்கு பணியாற்றியவர். அப்பழுக்கற்ற அதிகாரி; நேர்மையானவர்; தன் அதிகார அந்தஸ்து ஸ்தானத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர். அவர் சென்னை வந்த பிறகு, அவனும் அவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடிகிறது. இருவரும் தொலைபேசியில் உரையாடுவார்கள். அவனது வாசகர்களில் அவரும் ஒருவர். துக்ளக் கட்டுரைகளில் அவன் எழுதியதில் எதேனும் தகவல் குறைபாடு இருந்தால் அதைச் சுட்டிக்காட்டுவார். கட்டுரையில் எழுதுவதற்கு முன்பு சில விஷயங்களைப் பற்றிய தெளிவுக்காக ஆலோசனை கேட்டால் அவர் சொல்வதற்கு தயங்கியதில்லை. அவன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திருக்குறள் புத்தகத்திற்கு அருமையான அணிந்துரை வழங்கினார். இன்றும் நல்ல நண்பரே.

‘நரேந்திர மோடி பிரதமர் ஆனபின்பு அரசாங்கத்தில் ஏதாவது கௌரவ பதவி பெறுவீர்களா?’ என்று கேட்டபோது அவர் சொன்னார், ‘தலைமைத் தேர்தல் கமிஷனர் என்று ஜனாதிபதி நியமிக்கும் பதவியில் இருந்தபிறகு வேறு பதவிகளை ஏற்பது வெறும் பிழைப்பு; கௌரவம் அல்ல. அதனால் நான் அவற்றை நாடவில்லை’ என்றார். அதே நேரம் சென்னையில் உள்ள பிரபல கலை பண்பாட்டு அமைப்பான, கலாக்ஷேத்ராவின் தலைவராக இருந்து, அதன் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தினார். இப்போது விவேகானந்தா கல்வி கழகத்தின் தலைவராக இருந்து பள்ளிக்கூடங்களின் நிர்வாகக் குழுவினருக்கு வழிகாட்டி வருகிறார் அவர்.

அவர் துக்ளக் மற்றும் கலைமகள் பத்திரிகையின் வாசகர். ஒருமுறை அவரை வீட்டில் சந்தித்தபோது சொன்னார், ‘பதவிப் பிரமாணம் என்கிற உங்களது கதை வெகு சிறப்பாக இருந்தது. படிக்கும்போதே சிரிப்பு வந்தது’ என்றார். அந்தக்கதை மாநிலத்தில் ஒரு கட்சி தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற பிறகு அந்த மகிழ்ச்சியில் தங்கள் கட்சியின் மந்திரிகளாக நியமிக்கப்படுபவர்கள் தூய தமிழில் பெயர் வைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக தசரதன் என்பதை பத்து வண்டியான் என்றும், ரிஷிகேஷ் என்பதை முனிமுடி என்றும், வனாம்குசம் என்பதை காட்டுதோட்டி என்றும் மாற்றியதாக இருந்த கதை.

இதுபோல் ஒவ்வொரு பெயரும் தனித்தமிழில் இருந்ததால் கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என்றார். தேர்தலில் ஜெயித்தவர்கள் பெயர்கள் வேறு, நீங்கள் கொடுக்கும் பெயர்கள் வேறு என்று மறுத்துவிட்டார். அதன் பிறகு என்ன ஆயிற்று என்பதே கதை. அந்த கதை பலரது பாராட்டைப் பெற்றது.