
‘பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு’ என்று கேட்டால் பெரும்பாலான நபர்கள் ‘9’ என்றுதான் சொல்லுவார்கள். அது ராசியான எண். பலருக்கும் ரொம்பவே செல்லமான எண்ணும் கூட.
உலகின் பல பாகங்களிலும் உள்ள பல்வேறு மதங்களிலும் ஒன்பது என்ற எண் விசேஷமாகக் கருதப்படுகிறது..
உலகத்தில் ஒன்பது கண்டங்கள் என்ற பகுப்பும் உண்டு. இவற்றுள் நமது பாரத நாடு அமைந்திருக்கும் ஆசிய கண்டம்தான் இவற்றுள் பெரிய கண்டம். ஆசியா 44.58 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளதாம். ஏறத்தாழ 4.7 பில்லியன் மக்கள் தொகையாம். எல்லோருமாக பாடுபட்டால் இந்த மக்கள் தொகை ரவுண்டாக 5 பில்லியன் ஆகிவிடுமே! இந்த சாதனையில் ஒரு பயல் கிட்டே வரமுடியுமோ?!
ஒருவனுக்கு ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டில் குரு இருந்தால் அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுமாம்! அடியாத்தி! அது எங்க இங்கேயிருக்கு?
இந்த சரீரத்துக்கு ஒன்பது வாசல்கள். இவற்றில் ஒரு வாசல் ரிப்பேர் என்றால்கூட பெரும்பாடு தான். நம் வண்டி மேற்கொண்டு ஓடாது.
ஜெகன் மாதா பார்வதி தேவிக்கு நவ கோணத்தாள் என்றும் ஒரு பெயர் உண்டு. ஒன்பது கோணம் அமைந்த தளத்திலே தான் அவள் அமர்ந்திருப்பதால் ‘நவகோணத்தாள்கின்ற இறை’ என்று அம்பாளை அழைப்பர்.
அம்பிகையை போற்றும் விதமாக வருடம் தோறும் நவராத்திரி விழா வெகு பிரசித்தம். பெண்களுக்கு எல்லாம் வண்ண வண்ணமாய் புடவைகள். ஆண்களுக்கோ கிண்ணம் கிண்ணமாய் சுண்டல் வகைகள்!
காளி, ஜேஸ்டை, வாமை, ரௌத்ரி, கலவி கரணி, பலவி கரணி, பல பிரதமனி, சர்வ பூத தமனி, மனோன்மணி என்று ஒன்பது சக்திகளாக அன்னைக்கு சொரூபம் இருப்பதால் அவர்களை ‘நவசக்தி’ என்று அழைக்கிறோம். நவ துர்கைகள் என்றும் துர்கா பரமேஸ்வரிக்கு ரூப பேதங்கள் உண்டு.
சாமுண்டா தேவியின் உபாசனைக்கான மூல ஜபத்தின் பெயர் நவாக்ஷரி, ஒன்பது சக்திவாய்ந்த அட்சரங்களுள்ளதால் இந்த ஜபத்திற்கு நவாக்ஷரி என்றே பெயர்.
நாம் ஜீவித்திருக்க இறைவன் படைத்தது நவதானியங்கள் என்று ஒன்பது வகையாகும். அரிசி, மொச்சை, எள்ளு, கொள்ளு, காராமணி, நிலக்கடலை துவரை, உளுந்து, கோதுமை என்ற ஒன்பதும் நமது பிரதானமான உணவுப் பண்டங்கள் அல்லவா?
நம்மை ஆட்டிப்படைப்பதற்கென்றே 9 கிரகங்கள் நம் தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருக்கிறன அவை மனிதனை பல நேரம் அலைபாய விட்டு பாடாய்ப்படுத்தும். எப்போதோ ஒருமுறை சுக்கிர தசை அடிக்கும். சனி திசையோ நமக்கு ஒரு காட்டுகாட்டி விட்டுப் போகும்.
நவநிதியம் என்றால் என்ன தெரியுமா? சங்கநிதி பதுமநிதி மஹாபதும நிதி மகர நிதி கச்சப நிதி முகுந்த நிதி, குந்த நிதி, நீல நிதி, வர நிதி என்று குபேரனிடம் அள்ளஅள்ளக் குறையாத செல்வ வளங்கள் உண்டாம். குபேர சம்பத்து இருந்தாலும் பேரம் பேசாமல் காய்கறி வாங்காத தாய்க்குலமும் உண்டோ?
அரிதாளம், அரும தாளம், சம தாளம், சய தாளம், சித்திர தாளம், துருவ தாளம், நிவிர்த்த தாளம், படிம தாளம், விட தாளம் என்று ஒன்பது வகை தாளங்கள் உண்டாம். இவ்வளவு தாளங்கள் இருந்தாலும் நாம் போடுவது என்னவோ தப்புத்தாளங்கள் மட்டுமே அல்லவா?!
மனிதன் வாழும்போது அவனைச் சுற்றியே வருகிறது ஒன்பதாம் எண், அவன் போனபின் நற்கதி வேண்டி நவதானங்கள் தந்து அவன் கணக்கும் முடிக்கப்படுகிறது
முருகப்பெருமானுக்கு உறுதுணையாக நவவீரர்கள் என்று ஒன்பது மகத்தான வீராதி வீரர்கள் உண்டு. அவர்கள் வீரபாகு, விரகேசரி, வீர மகேந்திரன், வீரமகேஸ்வரன், வீரபுரந்திரன், வீரமார்த்தாண்டன், வீரதீரன், வீர ராட்சசன், வீரராகவன் என்போராவர்.
பாரதத்தில் நவ தீர்த்தம் என்று ஒன்பது புண்ணிய நதிகள் உண்டு. கங்கை யமுனை, கோதாவரி, சரஸ்வதி நர்மதை, சிந்து, காவேரி, துங்கபத்திரை, சோனா ஆகிய இந்த ஒன்பது புண்ணிய நதிகளில் நீராடுவது நமக்கு நற்கதியை தரும் என்பது ஆன்மீக நம்பிக்கை.
இந்த ஒன்பது நதிகளும் தங்களில் மூழ்கியவர்களின் பாவங்களை சுமந்திருக்கும் அல்லவா? அவற்றைப் போக்கிக்கொள்ள இந்த நதிகள் நமது கும்பகோணத்து மகாமக குளத்தில் முங்கி தூய்மை பெறுவதாக ஐதீகம்.
நம் புராணங்கள் அனந்தன், ஆதிசேஷன், கார்கோடகன், வாசுகி போன்ற ஒன்பது பெரிய நாகங்களைப் பற்றி பேசுகின்றன. அவற்றை நவ நாகங்கள் என்பார்கள்.
பழனி முருகன் சிலையை அமைத்திட மிகவும் சக்தி வாய்ந்த நவபாஷாணங்களை தான் போகர் உபயோகித்தாராம். ஒரு பழைய தமிழ் பேரகராதியிலிருந்து அவற்றின் பெயர்கள் அறிய வாய்த்தது. அவை முறையே சாதிலிங்கம், மனோசிலை, காந்தம், அரிதாரம், கெந்தி, ரஸகற்பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டி பாஷாணம் என்பனவாகும்.
நவகோடி சித்தர்கள் என்று சொல்லப்படுவதின் அர்த்தம் ஒன்பது வகை சித்த புருஷர்கள் என்பது தான். அவர்கள் ஒன்பது கோடி சித்தர்கள் அல்ல.
பரமசிவன் நவபேத மூர்த்தி என்றும் அழைக்கப்படுவதை அறிவீர்களா?
ருத்திரன், பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன், சதாசிவம், சிவன், சக்தி, நாதம், விந்து எனவாக ரூபங்கள் கொள்கிறார்.
நவரசமும் காட்டி நடித்த ஒப்பற்ற கலைஞன் என்று சிவாஜி கணேசனைப் போற்றுகிறோம். அவை ரௌத்திரம், அற்புதம், காருண்யம், சாந்தம், சிங்காரம், பயம், இன்பம், அருவருப்பு, வீரம் ஆகிய ஒன்பது ரசங்களாகும்.
என் மனைவியிடம், உனக்கு நவரசம் எவையென்று தெரியுமா என்று கேட்டேன்.
அவளோ பருப்பு ரசம், மைசூர் ரசம், பைனாப்பிள் ரசம், கண்டதிப்பிலி ரசம், கொட்டு ரசம், தேங்காய்ப்பால் ரசம், பொரிச்ச ரசம், மிளகு ரசம், பூண்டு ரசம் என்று அடுக்கிக்கொண்டே போனாள். ஒன்பது ரசங்களை அவள் சொன்னபின், ‘ஹோல்ட் ஆன்!’ என்று விசிலடித்து நிறுத்தினேன்.
மகாராஜா விக்ரமாதித்தனின் அரசவையில் 9 மகா புருஷர்கள் அவருக்கு மந்திரிகளாக வாய்த்தார்கள். அவர்களை நவரத்தினங்கள் என்று சரித்திரம் அழைக்கிறது.
நமக்கு பயன்படும் உலோகங்கள் கூட ஒன்பது வகைகளே. வெள்ளி, தரா, இரும்பு, செம்பு, ஈயம்,பொன், பித்தளை, துத்தநாகம், வெண்கலம் போன்றவையே அவைகளாகும்.
நவமணிகள் என்பவை மாணிக்கம் மரகதம் முத்து வைடூரியம் பவளம், புஷ்பராகம் நீளம் கோமேதகம் வைரம் என்னும் ஒன்பது விலை உயர்ந்த கற்கள்.
பக்தி செய்தல் சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சஹ்யம், ஆத்மநிவேதனம் என என்றே ஒன்பது வகைகளாகும்.
மேலும் யாகம் வளர்க்க ஒன்பது வகை குண்டங்கள், சிவபெருமானுக்கான ஒன்பது வகை விரதங்கள் என ஒன்பதாம் இலக்கத்தின் பெருமையைச் சொல்லி மாளளாது.
ஆஞ்சநேயருக்கு நவ வியாக்ரண பண்டிதர் என்று ஒரு பெயர் உண்டு. அதாவது கற்பதற்கு கடினமான ஒன்பது வகை இலக்கணங்களையும் அனுமன் வெகு சீக்கிரம் கற்றுத் தேர்ந்தவராம்.
‘அது என்ன சுவாமி? நவம் நவம் என்று அடுக்கிக்கிட்டே போறீங்க?’ என்றுதானே கேட்கிறீர்கள்? “நவ” என்பதற்கு புத்தம் புதிய, புதுமையான என்ற அர்த்தங்களும் உண்டு.
நம் மனதுக்கு நெருக்கமான விகடகவி இதழுக்கு 9 வயது ஆகின்றது. இன்றும்கூட புதுப்பொலிவோடு அன்றலர்ந்த தாமரை போல விகசிக்கிறது.
விகடகவி வாசகர்களுக்கு நவநிதியும் வந்து சேரட்டும்.
நவ கோள்களும் நன்மை பயக்கட்டும். அவர்கள் வீட்டு முற்றத்தில் நவரத்தினங்களும் மழையாய்ப் பொழிந்து வளம் சேர்க்கட்டும்.
நம் விகடகவி இதழ் மென்மேலும் தன்னை புதுப்பித்துக் கொண்டு தமிழ் வானில் ஒளி வீசி நிலைக்கட்டும்.

Leave a comment
Upload