தொடர்கள்
பொது
போலீஸ் ரோபோ

20260106204339115.jpeg

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில், இந்தியாவிலேயே முதன்முறையாக ரோபோ போலீசை சமீபத்தில் ரயில்வே போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

‘ஏஎஸ்ஐ அர்ஜுன்’ என பெயரிடப்பட்ட இந்த ரோபோ, விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் தீ மற்றும் புகையைக் கண்டறிந்து, பயணிகளை எச்சரிக்கை செய்யும்.

ரயில்நிலையத்துக்கு நாள்தோறும் வருபவர்களின் புகைப்படங்களை எடுத்து, அதில் சந்தேக நபர்களையும் ரயில் நிலையத்தில் தேவையின்றி அடிக்கடி வருபவர்களையும் அடையாளம் கண்டு, அவர்களைப் பற்றிய தகவல்களை காவல்துறை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கும்.

விசாகப்பட்டினம் ரயில்நிலைய பயன்பாட்டுக்கு வந்துள்ள ஏஎஸ்ஐ அர்ஜுன் ரோபோ, கடந்த 3-ம் தேதி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது.

20260106204414726.jpeg

அப்போது அங்கு சந்தேக நிலையில் சுற்றி திரிந்த 2 பழைய குற்றவாளிகளின் அடையாளங்களை கண்டறிந்து, இதுபற்றி ரயில்வே உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் விரைந்து வந்து, சந்தேக நிலையில் சுற்றி திரிந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில் பிடிபட்டவர்களின் பெயர்கள் அடப்பா சிவா, பங்காரு எனத் தெரியவந்தது.

இவர்களின் மீது ஒடிசா மாநிலம், ராயகடா உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இவர்கள் தலைமறைவாக சுற்றி திரிவதும் ரயில்வே போலீசாருக்குத் தெரியவந்தது.

இதுபற்றி விசாகப்பட்டினம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ஏஎஸ்ஐ அர்ஜுன் ரோபோவின் கூரிய பார்வையிலிருந்து இனி யாரும் தப்பியோட முடியாது என்பதை அறிந்து பயணிகளும் போலீசாரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அனைத்து ரயில்நிலையங்களிலும் ரோபோ போலீசை அறிமுகம் செய்ய வேண்டும் என்று ரயில் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.