
இந்திய குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே அபாயகரமான நிலையில் உடல் பருமன் அதிகரித்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உடல் பருமன் தடுப்பு தொடர்பான உலகளாவிய வழிகாட்டுதல்படி, 5 முதல் 19 வயதுக்கு உட்பட்ட சுமார் 390 மில்லியன் குழந்தைகள் உடல் பருமானால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற ஆய்வு தகவல் சுகாதார வல்லுநர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 1990ம் ஆண்டில் உடல் பருமன் அதிகரிப்பு அரிதான நிலையில், அதன்பிறகு கடந்த 30 ஆண்டுகளில் இதன் நிலை தலைகீழாக மாறிவிட்டது.
உலகளாவிய ஆய்வுகளின்படி, குழந்தைகளின் உடல் பருமன் 4 மடங்கு அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு தரவுகளின்படி, தற்போது உலகின் ஒவ்வொரு 5 குழந்தைகளில் ஒருவர் அதிக எடை அல்லது உடல் பருமன் பிரச்னையுடன் வாழ்ந்து வருகின்றனர். இது, எதிர்கால உலக சுகாதார அமைப்புகளுக்கு மிகப்பெரிய சவாலாக மாறும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உடல் பருமன் கொண்ட குழந்தைகளுக்கு 2-ம் வகை நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய மற்றும் ரத்தக்குழாய் நோய்கள், கல்லீரல் கொழுப்பு, மூட்டு மற்றும் எலும்பு பாதிப்புகள், சுவாசக் கோளாறுகள், மனஅழுத்தம், தன்னம்பிக்கை குறைவு போன்ற பிரச்னைகள் சிறுவயதிலேயே ஏற்படும் அபாயம் உள்ளது.
உலகளாவிய நிபுணர்களின் ஆய்வுகளின்படி, உடல் பருமன் கொண்ட குழந்தைகளில் சுமார் 70 முதல் 80 சதவிகிதம் பேர் பெரியவர்களாகும்போது, அதே நிலை தொடரும் வாய்ப்பு அதிகம்.
குழந்தை பருவத்திலேயே ஏற்படும் உடல் பருமன், தோற்றப் பிரச்னை அல்ல.. அது, வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய பல்வேறு நீடித்த நோய்களுக்கு அடித்தளமாக அமைகிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய குழந்தைகள் எளிதில் கிடைக்கக்கூடிய, குறைந்த செலவில் அதிகளவிலான சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த துரித உணவுகள், குளிர்பானங்கள், பாக்கெட் ஸ்நாக்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகளால் கவரப்பட்டுள்ளனர். அன்றாட உணவில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
மொபைல், டிவி, கணினி போன்ற திரை சாதனங்களின் அதிக பயன்பாடு, வெளிப்புற விளையாட்டுகளைத் தவிர்ப்பது, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைமுறை, கல்வி அழுத்தம் காரணமாக உடல் இயக்கம் குறைதல் ஆகியவை குழந்தைகளின் உடல் பருமன் அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
இதற்குத் தீர்வாக குழந்தைகளின் உணவு பழக்கவக்கம் மற்றும் வாழ்க்கைமுறையை மாற்றுவதில் பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியம். வீட்டில் சத்தான உணவு, திரை நேரத்தைக் கட்டுப்படுத்துதல், தினசரி உடற்பயிற்சி மற்றும் வெளிப்புற விளையாட்டை ஊக்குவித்தல் ஆகியவை குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்துக்கு அடித்தளமாக அமையும். இதுதொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால், வருங்காலங்களில் குழந்தைகளின் உடல் பருமன் மேலும் அதிகரித்து, உலகளாவிய சுகாதார அமைப்புகளுக்கு மிகப்பெரிய பொருளாதார மற்றும் மருத்துவ சுமையாக மாறிவிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-மாலாஸ்ரீ

Leave a comment
Upload