
வரும் ஜூன் 3 நமது தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாள்.
காமராஜர் பிறந்த தினத்தில் கலைஞரிடம் ஆட்டோகிராப் வாங்கிய விவரம் கூறுகிறேன்.
ஆச்சி மனோரமா பற்றி பேசும்போது, என்டிஆர், அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் & ஜெயலலிதா ஆகிய 5 முதல்வர்களுடன் திரையில் நடித்தவர் எனப்பெயர் பெற்றவர் என்பார்கள்.
நானும், அந்த வரிசையில் அண்ணா, என்டிஆர் தவிர மீதி மூவரையும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் சந்தித்தவன்.
கலைஞரை எப்போது முதலில் சந்தித்தேன் என்று என்நினைவலைகளுக்குள் ஐக்கியமாகிறேன்.
கே.கே.ஷா அவர்கள் ஆளுநராக இராஜாஜி மண்டபத்தில் பதவி ஏற்ற போது கூட்டத்தோடு கூட்டமாக பார்த்தது.
அதன் பிறகு 1971ல் திமுக மாநாடு காஞ்சீபுரத்தில் நடந்த போது ஊர்வலமாக அழைத்து சென்ற போது அண்ணா வீட்டு வாசலில் பார்த்தது.
எமர்ஜென்சி முடிந்து 1977ல் தமிழக முதல்வராக புரட்சி தலைவர் எம்ஜிஆர் பொறுப்பு ஏற்ற போது 15/07/1977ல் பெருந்தலைவர் பிறந்த தினம் பனகல் பூங்காவில் கவிஞர் கண்ணதாசன் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டேன் பார்வையாளராகத்தான். கவிஞர் அப்போது அரசவைக் கவிஞராக எம்ஜிஆரால் நியமிக்கப்பட்டிருந்தார்.
கூட்டம் ஆரம்பித்த உடன் காமராஜர் பெயரில் எழுதிய பாடல்களைக் கவிஞர் பாடியபின் கலைஞரின் பேச்சு.
கேட்டு முடிந்த பின்பு அவரிடம் ஆட்டோகிராப் நீட்டினேன், என்னையே உற்று உற்றுப் பார்த்த கலைஞர் அருகில் அழைத்து ஆட்டோகிராப் போட்ட பிறகு, நீ என்ன செய்யறே? என்றவரிடம், பட்டபடிப்பு முடித்து வேலை தேடிக் கொண்டிருக்கிறேன் என்றேன்.
கவிஞர் அறிமுகம் எப்படி? என்றவரிடம் காஞ்சீ பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவன், கல்லூரி நிகழ்ச்சிகளில் கவிஞரைப் பேச அழைத்த சமயத்தில் இருந்து பழக்கம் என்றதும் சிரித்த படியே ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தார்.

அதன்பிறகுமேடையில் இருந்து இறங்கிய பின் என்னைப் பார்த்த படியே காரில் ஏறியது மறக்க முடியாத நிகழ்வு.

Leave a comment
Upload