தொடர்கள்
தொடர்கள்
முகிழும் நாமங்கள் 7 ஜி.ஏ.பிரபா

20260427075523601.jpeg

முகிழும் நாமங்கள் முன்னூறு

சிதேக ரஸ ரூபிணீ

ஏலா ஸுகந்தி சிகுரா சைந:கூட- விநாசினீ I

ஏக- போகா சைகரஸா சைகச்வர்ய-ப்ரதாயினீ II

நாம் அனைவரும் மாயையில் கட்டுண்டிருக்கிறோம். மாயை என்று தெரிந்தும், இன்னும் உலகாயுத விஷயங்களில் சிக்குண்டு மேலும், மேலும் ஆசைகளை வளர்த்துக் கொண்டு அல்லல் படுகிறோம். இதிலிருந்து மீள அம்பிகையே வழி காட்டுகிறாள்.

பக்தியோடு அவளை தியானித்தால் போதும், அவளே இம்மையில் வளமையும், மறுமை இல்லாத மோக்ஷத்தையும் அருளுவாள். தன்னைப் புகழ வேண்டுமென்று அவள் நினைப்பதில்லை. ஆனால் அவளையே தியானித்து, மனக்கண்ணில் அவளை நிறுத்தினால், நம் மனம் அவள் பக்தியிலேயே ஆழ்ந்து விடும்.

அவளின் ரூபங்களை மட்டுமல்ல, அவள் நாமத்தின் மகிமையை த்ரிசதி விளக்குகிறது.

ஏலத்தின் பரிமள வாசனை உடைய நீண்ட கூந்தலை உடையவள். இதனாலேயே அம்பிகைக்கு சுகந்த குந்தளாம்பாள் என்ற பெயரும் உண்டு. அவள் ஏலவார் குழலி என்றும் அழைக்கப் படுகிறாள். பஞ்சபூத ஸ்தலங்களில் பிருத்வி ஸ்தலமான காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவிலில் அம்பிகை ஏலவார்குழலி என்றும் செம்பொனார் கோவிலில் அம்பிகை சுகந்த குந்தளாம்பாள் என்றும் அழைக்கப் படுகிறாள். மதுரை அருகே உள்ள திருவாப்புடையார் திருக்கோயிலிலும் அம்பிகையின் பெயர் சுகந்த குந்தளாம்பிகை.

தேன் நிறைந்த பூக்களைத் தன் தலையில் சூடியவள் அம்பிகை. எனவே திருச்சி மலைக்கோட்டையில் அவள் மட்டுவார்குழலி என்றும், சுகந்த குந்தளாம்பிகை என்றும். சுருண்ட கூந்தலை உடையவள் என்று பிரிகுழல் அம்பிகை என்றும் கூடலையாற்றில் அழைக்கப் படுகிறாள்.

அம்பிகையே நம் பாபக் குவியல்களையும் நாசம் செய்பவள். எனவேதான் பாபனாசினீ, பாபாரண்ய தவானலா என்று போற்றப் படுகிறாள். அம்மா என்றாலே ஓடி வந்து அனைத்துப் பாவங்களையும் நாசம் செய்பவள் பராசக்தி.

போகங்கள் என்று சொல்லக் கூடிய அனைத்தையும் அனுபவிக்கும் மகாராணி. பக்தர்களால் ராஜராஜேஸ்வரி என்று போற்றப் படுகிறவள் அம்பிகை. அந்த போகங்களை நமக்கும் வஞ்சனை இல்லாமல் அள்ளித் தருகிறவள்.

அன்னையின் கருணைக்கு அளவே கிடையாது. கருணை மிகுந்த கண்களை உடையவள். அன்பின் வடிவாகி ஏக ரசமாக இருப்பவள். சிதேக ரச ரூபிணீ, காஞ்சி ஸ்ரீகாமாக்ஷி அம்மனைக் குறிக்கும்போது அவளின் கண் விசேஷத்தை மிகச் சிறப்பாகச் சொல்வார்கள். அக்ஷி என்பது அவளின் கண் விசெஷத்தையே குறிக்கிறது.

அன்பும், கருணையும் நிறைந்த கண்கள். அவளுடைய கண்களிலிருந்து கடாக்ஷம் பொங்குகிறது. இதையே ஸ்ரீசங்கரர் “த்ருச த்ரா கீயஸ்வா” என்கிறார். அவளுடைய பார்வை எங்கிருந்தாலும் நம் மேல் விழுமாம். தாய் எத்தனை வேலையாக இருந்தாலும் அவள் பார்வை தன் குழந்தைகளின் மேல் இருக்கும். லோகத்துக்கே தாயான அம்பிகையின் கண் பார்வையும், கருணா கடாக்ஷமும் நம் மேல் விழாமல் இருக்குமா?

ஒப்புயர்வற்ற மோக்ஷம் என்னும் ஐஸ்வர்யத்தை அளிப்பவள் தேவி ஸ்ரீ லலிதாம்பாள்.

அவளுடைய ஆற்றலின் மகிமை நம் புத்திக்கு எட்டாதது. அவளின் சின்ன புருவ அசைவையே கட்டளையாகக் கொண்டு மும்மூர்த்திகளும் செயல்படுகிறார்கள். “ஜகத் ஸுதே தாதா என்கிறது சௌந்தர்யலஹரி. அனைத்து தேவதா மூர்த்திகளின் சக்தியும் இவளிடமிருந்து பெற்றதுதான்.

அவளிடம் நாம் வேண்டுபவைகளை பட்டியலிட வேண்டிய அவசியமில்லை. “ தாயே உனக்கு எல்லாம் தெரியும். இருந்தாலும் உன்னிடம் என் வேண்டுதல்களைத் தெரிவித்தால் ஒரு திருப்தி” என்கிறார் நீலகண்ட தீட்சிதர்.

அவளை உபாசிப்பதன் மூலம் நமக்கு முதலில் சிந்தனைகள் மேம்படுகிறது. குப்பையாய் கிடக்கும் எண்ணங்களை ஒதுக்கி, நல்ல பக்தி, எண்ணங்கள், பண்புகள் வருகிறது. நல்ல நடத்தை உண்டாகிறது. அதுவே சிறப்பான வாழ்வுக்கு வழி காட்டுகிறது.

வெற்றி பெற்ற வாழ்வு என்பது பங்களா, கார், கை நிறைய பணம், சொத்து, சுகம் அல்ல. மன நிறைவும், திருப்தியுமாய், போதுமென்ற உணர்வு. அதை அளிப்பவள் அம்பிகை ஸ்ரீ லலிதாம்பாள். அவளை உபாசிப்பதன் மூலமே அனைத்தையும் கிடைக்கச் செய்பவள் பராசக்தி.

காஞ்சியில் குடி கொண்ட ஸ்ரீ காமாக்ஷியின் திருவடித் தாமரைகளை வழிபடுவதையே எங்கள் கடமையாக வைத்துக் கொள்கிறோம் என்கிறார் ஸ்ரீமூகர். படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றுக்கும் ஒரே காரணமாய் இருப்பவள் பராசக்தி.அந்த சக்தியை மனதில் நினைத்தால் இந்த துக்க சாகரத்திலிருந்து விடுபட முடியும்.

பல்வேறு கோரிக்கைகளுடன் பல்வேறு தேவதா மூர்த்திகளை உபாசிக்கிறோம். அனைத்தின் வடிவமாக இருக்கும் அம்பிகையைத் துதிப்பதன் மூலம் அவர்கள் அனைவரையும் துதித்த பலன் கிடைக்கும்..

உலகுக்கெல்லாம் சோறு போடும் அம்பிகை, அவளை மனமுருகி தியானிக்கும் நமக்கும் அருள்வாள் என்பது சத்தியம். முப்பத்தி இரண்டு அறங்களைச் செய்பவள் அன்னை பராசக்தி. அவளை தியானிப்பதே நம் கடமையாகும்.