
நம் முதலமைச்சர் டெல்லி சென்று அரசாங்க விழாக்களில் தமிழ் தாய் வாழ்த்து முதலில் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருக்கிறார். சந்தோஷமான விஷயம். தமிழ் காப்போர் பெருமை கொள்ளலாம். போட மாட்டேன் என்று சண்டை போடாமல் அனுமதி கேட்டிருக்கிறார். வரவேற்கவேண்டும். இதைப் படித்துக்கொண்டே இருக்கும்போது தான் கண்ணில் பட்டது ஒரு புள்ளிவிவரம். 2023- 2024 லில் தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவ மாணவியர் எண்ணிக்கை 2018 – 2019 இல் இருந்த 65.87 லட்சத்திலிருந்து 46.82 லட்சமாக குறைந்திருக்கிறது. ஆங்கில மொழி கல்வி 2018- 19 இல் 55.18 லட்சமாக இருந்து 2023- 24 இல் 82 லட்சமாக கூடி இருக்கிறது.
தமிழுக்காக நாம் போராடிக்கொண்டிருக்கும் போது வேலை வாய்ப்புகளுக்கு ஆங்கில மொழி கல்வி தான் உகந்தது என்று நம்பிக்கையுடன் ஆங்கில வழி கல்விக்கு குழந்தைகளை அனுப்புகின்றனர் பெற்றோர்கள். இது தவறு என்று கூற முடியுமா என்ன?
நமது அரசாங்கம், தமிழ் வழி கல்வி படித்தவருக்கு அரசாங்க வேலையில் 20 சதவிகிதம் ஒதுக்கீடு உண்டு என்ற சட்டம் வகுத்திருக்கிறது. (PSTM – Preferential quota in state government jobs). இந்த சலுகையை பெற அவர்கள் பள்ளியிலிருந்து கல்லூரிவரை தமிழ் வழி கல்வியே பயின்றிருக்கவேண்டும்.( தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட 160 கல்லூரிகள் தமிழ் வழிக் கல்வி அளிக்கிறது.) இதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவிப் பணமும் உண்டு. ஆனால் கல்லூரி வரை தமிழ் மட்டும் பயின்றால் உலகசந்தையில் நம்மால் விலை போக முடியுமா என்று தெரியவில்லை. எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிட்டியிருக்கிறது என்ற புள்ளிவிவரம் இல்லை. இதைக் காரணம் காட்டி தமிழ் அவசியமில்லை என்று சொல்லும் ஒரு சாராரும் இருக்கின்றனர்.
தாய் மொழி வழிக்கல்வி ஒரு குறிப்பிட்ட வயது வரை மிகவும் அவசியம் தான் என்று தோன்றுகிறது. புதிய கல்வி திட்டமும் அதைத் தான் சொல்லுகிறது. தர்மேந்திர பிரதானும் இதைத் தான் குறிப்பிட்டிருக்கிறார்.
மும் மொழி கொள்கை வேண்டுமா வேண்டாமா என்ற விவாதத்திற்கு முன் தமிழ் வழிக் கல்வி ஏன் பின்னடைகிறது என்றும் யோசிக்கவேண்டும்.
இது ஒரு பக்கம் இருக்க மற்றும் ஒரு புள்ளி விவரமும் என் கண்ணில் பட்டது. ( மூன்று வருட பழசு தான்) The national Council of Educational Research and Training (NCERT) ஒரு தகவலை வெளியிட்டிருந்தது. மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் வெறும் 20 விழுக்காடு மட்டுமே சரியாக எழுதப் படிக்க தெரிகிறதாம்.கிட்டதட்ட பாதி வகுப்புக்கு மேல் படிக்க கூட தெரியவில்லையாம். இதில் நாம் தான் முதலிடம். நம்மை பின் தொடர்வது தெலுங்கு 45%, கன்னடம் மற்றும் மலையாளம் 44%.
இதற்கு சிறந்த ஆசிரியர்கள் இல்லாத காரணம், சிறந்த சூழ்நிலை இல்லாத காரணம் இது வேண்டுமானாலும் சொல்லலாம்.
தமிழை வளர்க்க தமிழ் படிப்பவர் வேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் மன்னிக்கவும் பாரதி, தமிழ் மெல்லச் சாகாது வேகமாகவே அழிந்து போய்விடும். ஒரு மொழியை ஒதுக்க வேண்டுமானால், தாய் மொழி வேரூன்றி நின்று அதைப் பிடித்துக்கொள்ள வேண்டும். இதெல்லாம் செய்திருக்கலாம். என்ன செய்ய இந்தியை அழிக்கவேண்டும் என்று பேசும் போது உள்ள வேகம், தமிழை வளர்க்கும் வழியைத் தேடுவதில் இல்லையே.
பார்க்கலாம் நம் முதல்வர் என்ன செய்கிறாரென்று.
அதுவரைக்கும்,
வாழ்க தமிழ்...!!

Leave a comment
Upload