தொடர்கள்
கல்வி
வேலை வாய்ப்பு தரும் படிப்புகள்  - மரியா சிவானந்தம் 

20260429193337260.jpg

ப்ளஸ் 2 முடித்தவுடன் உயர் கல்வி கற்க முற்படும் மாணவர்கள் தங்கள் திறமைக்கும், ஆர்வத்துக்கும் உரிய துறை சார்ந்த படிப்புகளைத் தேர்வு செய்வது வழக்கம் என்றாலும், படித்து முடித்தவுடன் , உடனடியாக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் படிப்புகளைத் தேர்வு செய்வது நல்லது.

தற்கால தகவல் யுகத்தில் நல்ல எதிர்காலத்தைத் தரக்கூடிய படிப்புகள், கடல் போல வேலை வாய்ப்புகளைத் தேக்கி வைத்துள்ளன.

இத்தகைய படிப்புகளில் முதல் நிலை வகிப்பது செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கல்வி (Artificial Intelligence and machine learning )

சில தசாப்தங்களாக பேசப்பட்டு வரும் செயற்கை நுண்ணறிவு 'AI ' என்ற செல்லப்பெயரில் சமீப காலங்களில் எல்லா துறைகளிலும் ஊடுருவி,தன் செல்வாக்கை நிலை நிறுத்தி வருகிறது. மருத்துவம்,வணிகம், இயந்திரவியல், வானியல், தானியங்கிகள், சமூக ஊடகம், விவசாயம் என்று எல்லா துறைகளிலும் AI தொழிற்நுட்பம் ஆட்சி செய்யவுள்ளது. அதனது உடன் பிறப்பு போன்ற இயந்திர கல்வி கொடுக்கப்பட்ட தரவுகளில் இருந்து , முன்முடிவுகளைத் தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றது. கணினியியலில் ஒரு மேம்பட்ட பிரிவாக இயந்திர கல்வி அல்லது இயந்திர கற்றல் இருக்கிறது.

உதாரணமாக, எலக்ட்ரிக் கார்கள் வடிவமைப்பிலும்,இயக்கத்திலும் AI மற்றும் இயந்திர கல்வியின் பங்களிப்பு உள்ளது. பேட்டரி சார்ஜிங், வடிவமைப்பு, காற்றியல் (aerodynamics) போன்றவற்றுள் AI பங்களிப்பு செய்கிறது.

மருத்துவத் துறையில் பரிசோதனைகளைப் பரிந்துரைப்பது, சோதனை முடிவுகளின் அடிப்படையில் தகுந்த சிகிச்சைகளை பரிந்துரைப்பது, மனித தவறுகளைத் தவிர்த்த அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வது என்று சர்வம் AI மயமாகும் காலம் நெருங்கி விட்டது எனலாம். இந்திய மருத்துவர் சையது முகமது கௌஸ் சீனாவின் ஹுஹான் மருத்துவமனையில் இருந்து, 3000 கி.மீ தொலைவில் ஹைதராபாத்தில் இருக்கும் தன் நோயாளிக்கு ரோபடிக்ஸ் முறையில் அறுவை சிகிச்சை செய்தது செய்திகளில் நாம் படித்தோம்

20260429193413242.jpg

தரவு அறிவியல் ( Data Science) எனப்படும் புது யுகப்படிப்பு. நிறுவனங்களில் தரவுகளை அலசி ஆராய்ந்து தரவுகளின் அடிப்படையில் மக்களின் தேவை, அதற்கேற்ற உற்பத்தி, மார்க்கெட்டிங் யுக்திகள், லாபகரமான விதத்தில் நிறுவனத்தை நடத்துதல் எல்லாவற்றுக்கும் இந்தப் படிப்பு துணை செய்கிறது.

சமூக ஊடகங்களில் நாம் ஒரு பொருளைத் தேட துவங்கும் போதே, டேட்டா சயின்ஸ் விழித்துக் கொண்டு அது தொடர்பான பொருட்களையே நம் கண்ணில் படும்படி அனுப்பிக் கொண்டிருக்கும். ஒரு ஜாலிக்காக , தோடு ஒன்றை தேடும் போது , நம் அருகில் உள்ள எல்லா நகைக்கடைகளின் விளம்பரங்களையும் உடனடியாக நம் பார்வைக்கு அனுப்பி வைக்கிறது. எவ்வித அலுவலகமும் இல்லாமல் ஆன்லைன் வர்த்தகங்களில் பல நிறுவனங்கள் கொழிப்பது இதனால்தான்.

20260429193451265.jpg

அடுத்த இடத்தில் இருப்பது இணையப்பாதுகாப்பு எனப்படும் சைபர் செக்யூரிட்டி சார்ந்த படிப்பு. நமது மொபைல் போன் தொடங்கி, உயர்நிலை கணினி வரை நாம் சேமித்த தரவுகளைப் பாதுகாக்கும் இப்படிப்பு மிகுந்த மதிப்பு வாய்ந்தது. இந்திய தரவுகள் பாதுகாப்பு சட்டம் 2023 ( Digital Personal Data Protection (DPDP) Act, 2023.) தனிமனித மற்றும் பொது தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்துகிறது. நாம் ஒரு புடவைக்கடையில் கொடுக்கும் நமது மொபைல் எண் எத்தனை எத்தனை நிறுவனங்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படுகிறது என்பதைநாம் அறியோம்.போலி அழைப்புகள் (Scam calls) வழியாக நமது வங்கி கணக்குகள் வரை எட்டிப் பார்க்கும் அல்லது பணத்தை பறிப்பதும் , டிஜிட்டல் அரெஸ்ட் என்றெல்லாம் வரும் அழைப்புகள் எல்லாமே நம் மொபைல் எண் காற்றில் மிதப்பதால் தான். இனி வரும் காலங்களில் சைபர் செக்யூரிட்டி படிப்புகள் நல்ல சம்பளம் தரும் மதிப்பு வாய்ந்த படிப்பாக இருக்கும்.

பள்ளிப் படிப்பு முடித்து உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்கும் அரிய தருணத்தில் இருக்கும் மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மேற்கூறிய கல்விகளைத் தேர்ந்தெடுத்தால் ஒளிமயமான எதிர்காலம் அவர்களுக்குக் காத்திருக்கிறது .