தொடர்கள்
விகடகவியார்
உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழ் பெண் ? - ஜாசன்

20260430082159649.jpg

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மூத்த வழக்கறிஞர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட ஐந்து பேரின் பெயர்களை மத்திய அரசுக்குக் ககொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது .

மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் சச் தேவா, ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி அருண் பல்லவி, பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் மற்றும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வி.மோகனா ஆகியோரின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மத்திய அரசு இந்த பரிந்துரையை ஏற்கும் பட்சத்தில் வழக்கறிஞர் துறையில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் இரண்டாவது பெண் வழக்கறிஞர் என்ற பெருமை பெறுவார். இதற்கு முன் நீதிபதி இந்து மல்கோத்ரா இவ்வாறு நியமிக்கப்பட்டார்.

கோவையை பூர்வீகமாக கொண்டவர். கோவை அரசு சட்டக் கல்லூரியில் 1988-ஆம் ஆண்டு சட்டம் பயின்று பட்டம் பெற்றார். இந்தியாவில் ஐந்து ஆண்டு சட்டக் கல்வி அறிமுகப்படுத்திய போது அதன் முதல் பேட்ச்சில் படித்து தேர்ச்சி பெற்றவரில் மோகனாவும் ஒருவர். கோவையில் வழக்கறிஞர் பணியை தொடங்கியவர் கோவையில் புகழ்பெற்ற சிவில் வழக்கறிஞரான பஞ்சாபகேசனிடம் ஜூனியராக சேர்ந்து பயிற்சி பெற்றார். 1992-இல் டெல்லியில் தனது பணியிடத்தை மாற்றிக் கொண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குகளில் தனது கவனத்தை கொண்டு சென்றார். அங்கு அவருக்கு இந்து மல்கோத்ரா, சி.எஸ்.வைத்தியநாதன் போன்ற பிரபல முன்னணி வழக்கறிஞர்களின் அறிமுகம் கிடைத்து அவர்களுடன் சேர்ந்து பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்தது.

1996-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் அட்வகேட் -ஆன்- ரெக்கார்ட் தேர்வில் வெற்றி பெற்றார். அதன் பிறகு உச்ச நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம், தேசிய நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் ஆகியவற்றில் முக்கிய வழக்குகளில் வாதாடினார். அப்போதே இவரை எல்லோரும் கவனிக்க ஆரம்பித்தார்கள். 2015-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இவருக்கு மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தை வழங்கியது.

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணிஆணை வழங்கக் கோரிய வழக்கில் பெண் அதிகாரிகளுக்கு ஆதரவாக வாதாடி அவர்களுக்கு சம உரிம பெற்று தருவதில் முக்கிய பங்கு ஆற்றினார் மோகனா.

சர்ச்சையை ஏற்படுத்திய ஹிஜாப் வழக்கில் கல்வி நிறுவனங்களின் ஆடை கட்டுப்பாடு விதிகளுக்கு ஆதரவாக ஆஜரானார் மோகனா. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான ஜெயின் கமிஷன் விசாரணையிலும் மோகனா பங்கேற்றுள்ளார்.

மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில், கே கே வேணுகோபால், பா.சிதம்பரம், அருண்ஜெட்லி போன்ற வழக்கறிஞர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு .ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி பானுமதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தற்போது தமிழக பின்னணி கொண்ட மூத்த வழக்கறிஞர் மோகனா பெயர் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.